

கடந்த 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவருபவர் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகளை எழுதியுள்ளார். தமிழின் பிரபலமான இதழ்களில் இவரது கதைகள் தொடர்ந்து வெளிவருகின்றன. தமிழில் துப்பறியும் கதைகளின் மூலம் தமிழ்வாணன், சுஜாதா கோலோச்சிக்கொண்டிருந்த 1970களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர் பட்டுக்கோட்டை பிரபாகர்.
அந்த வகைமையில் தனக்கென்று ஒரு பெரும் வாசகர் பரப்பை உருவாக்கிக்கொண்டார். சுஜாதா கதைகளின் கணேஷ் - வஸந்த் போலவே பட்டுக்கோட்டை பிரபாகர் கதைகளில் துப்பறிவாளர்களாக வரும் பரத்-சுசீலா வாசகர்களின் பிரியத்துக்குரிய கதாபாத்திரங்கள் ஆகினர்.
பாக்கெட் நாவல்களில் இவர் எழுதியுள்ள காதல் கதைகள், நகைச்சுவைக் கதைகள், அல்புனைவுத் தொடர்களும் பரவலான வாசகர்களைக் கவர்ந்தவை. வர்ணனையே இல்லாமல் உரையாடல்களை மட்டுமே கொண்ட நாவல்களை எழுதியிருக்கிறார். வர்ணனைகள் மட்டுமே உள்ள சிறுகதைகளையும் படைத்திருக்கிறார்.
ஒரு நாவலுக்கு மூன்று முடிவுகள், ஒரே கதைக்குள் இரண்டு கதைகள், ஒரே கதையை வெவ்வேறு பார்வைகளில் சொல்வது எனப் பரீட்சார்த்த முயற்சிகளின் மூலம் வெகுஜன வாசகர்களின் ரசனையை மேம்படுத்தியவர். இவருடைய எழுத்துகளுக்கு இருக்கும் வரவேற்பைக் கண்டு, பாக்கெட் நாவல் ஜி.அசோகன் இவருடைய கதைகளை வெளியிடுவதற்காகவே ‘எ நாவல் டைம்’ என்னும் மாதாந்திர இதழைத் தொடங்கினார்.
பல திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களிலும் பங்காற்றியிருக்கிறார். இவருடைய சிறுகதைகள் தொலைக்காட்சித் தொடர்களாக ஒளிபரப்பப்பட்டுள்ளன. இவருடைய சில ஆக்கங்கள் கல்லூரிப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இத்தனை சிறப்புகளைப் பெற்றுள்ள பட்டுக்கோட்டை பிரபாகரின் இரண்டு புதிய கதைத் தொகுப்புகள் ‘ஒரு ராஜா ராணியிடம்’, ‘நான், நான் இல்லை’ ஆகிய தலைப்புகளில் இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியாகியுள்ளன. இரண்டிலும் தலா இரண்டு நாவல்கள் உள்ளன. இந்த இரண்டு நூல்கள் உள்பட பட்டுக்கோட்டை பிரபாகரின் படைப்புகள் சென்னை புத்தகக் காட்சியில் கவிதா பப்ளிகேஷன் கடை எண் F50 இல் கிடைக்கும்.
- நந்தன்