Published : 20 Jan 2023 06:51 AM
Last Updated : 20 Jan 2023 06:51 AM

ஜோஷிமட்: புதையுறுவது நகரம் மட்டுமல்ல

உத்தராகண்ட் மாநிலத்தின் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகள் கடந்த சில நாள்களாகக் கவனம் ஈர்த்துள்ளன. முதலாவது, ஹல்த்வானி பகுதியில் வசித்துவரும் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என டிசம்பர் 20 அன்று அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரயில்வேக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டில், அந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துவிட்டது. எனினும், இது தற்காலிக நிம்மதிதான் என்றே அங்கு வசிக்கும் மக்கள் அஞ்சுகிறார்கள்.

இன்னொரு புறம், ஜோஷிமட் பேரிடர். மண்ணில் புதையுண்டுவரும் இந்நகரிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் மக்கள் பாதிக்கப்பட முக்கியக் காரணம் - முறையாகத் திட்டமிடப்படாத வளர்ச்சித் திட்டங்கள்!

ஊரறிந்த ரகசியம்: ரயில்வே விரிவாக்கப் பணிகள் செய்ய வேண்டிய இடத்தில் மக்கள் வசித்துவருவது சரியா என்பது ஹல்த்வானி விவகாரத்தில் அதிகாரவர்க்கம் எழுப்பும் கேள்வி. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்றால், அங்கு பள்ளிகள் முதல் வழிபாட்டுத் தலங்கள் வரை அமைக்கப்பட்டது அரசு நிர்வாகத்தின் அகன்ற கண்களில் படவில்லையா என்பது மக்கள் எழுப்பும் கேள்வி.

அதேபோல், ஜோஷிமட்டின் கதை, இதுவரை நடைபெற்ற வளர்ச்சிப் பணிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை மையமாகக் கொண்டது என்பது ஊரறிந்த ரகசியம். ஆனால், அப்படியெல்லாம் அவசரப்பட்டுச் சொல்லிவிடக் கூடாது என்கிறது அரசு. காரணம் என்ன எனக் ‘கண்டுபிடிக்கும்’ வேலைகள் இப்போது நடந்துவருவதால், இது குறித்து அநாவசியமாகக் கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என்றும் சொல்கிறது.

அமைவிட ஆபத்து: இமயமலைப் பகுதியில் 6,150 அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஜோஷிமட் நகரில், விரிசல் விழாத கட்டிடங்களை இன்று விரல்விட்டு எண்ணிவிடலாம். உலகின் இளமையான மலையான இமயமலையில் இன்னமும் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அந்த மாற்றங்கள் மூலம் பேரழிவுகள் நிகழும் என்பதைப் பெரும்பாலானோர் உணரவில்லை.

பனியாறு உருகுதல், மேகவெடிப்பு, பெருவெள்ளம், நிலச்சரிவுகள் எனப் பல்வேறு பாதிப்புகளை உத்தராகண்ட் எதிர்கொண்டுவருகிறது. நிலநடுக்க அபாயம் மிக்க ‘மண்டலம் 5’ (Zone 5) பகுதியில் அமைந்திருக்கும் மாநிலம் இது. இமயமலைச் சரிவின் நடுப் பகுதியில் ஜோஷிமட் அமைந்திருக்கிறது. அதீத மழைப்பொழிவால் மலை ஓடைகள் விரிவடைந்து, திசைமாறிப் பாய்வதால், இங்குள்ள மலைச்சரிவுகள் கடுமையாக அரிக்கப்படுகின்றன.

19ஆம் நூற்றாண்டில் பனியாறு உருகி ஏற்பட்ட பேரிடரின் மூலம் உருவான இடிபாடுகளின் மீதுதான் இந்நகரம் அமைந்திருக்கிறது. மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிப்பதற்குத் தகுதியில்லாத இடம் எனப் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், எதுவும் அரசின் காதுகளில் விழவில்லை. கூடவே, உள்ளூர் மக்கள்தொகை அதிகரித்தது; சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பெருகியது.

கட்டுமானப் பணிகள்: ஜோஷிமட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தபோவன் பகுதியில், தேசிய அனல் மின் நிறுவனம் (என்டிபிசி) அமைத்துவரும் தபோவன் - விஷ்ணுகட் நீர் மின் உற்பத்தி நிலையத் திட்டம்தான் இந்தப் பேரழிவுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதற்காக மலைகள் குடையப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கப்படுவதும், பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கப்படுவதும் தொடர்ந்தன. புனிதப் பயணத்துக்கான வழித்தடத்தைச் சுற்றுலாத் தலத்துக்கான பாதையாக மாற்ற அரசு திட்டமிட்டதும் முக்கியமான இன்னொரு பிரச்சினை.

2016இல் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புனிதத் தலங்களை இணைக்கும் வகையில் தொடங்கப்பட்ட ‘சார் தாம்’ நெடுஞ்சாலைத் திட்டம் ஓர் உதாரணம். நீர் ஊடுருவல் காரணமாக நிலத்தில் பாறைகளின் பிடிப்பு தளர்வுறுவது உத்தராகண்ட் மாநிலம் எதிர்கொள்ளும் பிரச்சினை. அது ஜோஷிமட்டில் கூடுதல் அபாயகட்டத்தில் உள்ளது. அது மட்டுமல்ல, இந்நகரில் கழிவுநீர் வடிகால் அமைப்புகூட முறையாகச் செய்யப்படவில்லை.

செவிமடுக்கப்படாத எச்சரிக்கைகள்: 1976இல் எம்.சி.மிஸ்ரா குழு வெளியிட்ட அறிக்கை, ஜோஷிமட் நகரம் பூமியில் புதையுறும் அபாயம் இருப்பதாக எச்சரித்தது. மரங்களை அதிக அளவில் நடுவதன் மூலம் நிலச்சரிவுகளைத் தடுக்கலாம் எனப் பரிந்துரைத்தது. மாநில அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்பட அரசு நிறுவனங்களும் எச்சரிக்கை விடுத்தன. ஆனால், வளர்ச்சித் திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவது தடையின்றித் தொடர்ந்தது. சமதளப் பகுதிகளுக்கு இணையான கட்டுமானப் பணிகள் மலைப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டன.

முந்தைய அழிவுகள்: அதீதக் கட்டுமானப் பணிகளால், 2009இல் பூமிக்கு அடியில் நீரோட்டம் சலனத்துக்குள்ளாகி, ஊற்றாகப் பீய்ச்சியடித்து ஜோஷிமட் தெருக்களில் வெள்ளமெனப் பெருக்கெடுத்து ஓடியது. நாளொன்றுக்கு 70 மில்லியன் லிட்டர் நீர் வெளியேறியதால், தரைப் பகுதிக்கு அடியில் வெற்றிடம் ஏற்பட்டு, பாறைகள் மேலும் பலவீனமடைந்தன. 2013இல் கேதார்நாத் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட இமாலய சுனாமி எனும் பெருவெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியது.

2021 பிப்ரவரி 7இல் ரிஷிகங்கா, தவுலிகங்கா நதிகளில் பாறைகளும் பனிப் பாறைகளும் விழுந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய சேதம் மிகக் கடுமையானது. ஜோஷிமட் அருகே பாயும் அலக்நந்தா நதி வரை அந்தப் பாதிப்பு தொடர்ந்தது. நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.

வீடுகளில் விரிசல் விழுவதும் ஜோஷிமட்டுக்குப் புதிதல்ல. 2021 அக்டோபரில், சுனில் மற்றும் காந்தி நகர் வார்டுகளில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் இது குறித்து அறிக்கை வெளியிட்ட உத்தராகண்ட் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம், மிஸ்ரா குழு சொன்ன அதே பிரச்சினைகளைப் பட்டியலிட்டது.

உலகில் மிக வேகமாகப் புதையுண்டுவரும் நகரம் இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தா. அந்நகருக்கு ஏற்பட்டிருக்கும் நிலைக்கு என்னென்ன காரணிகள் உண்டோ அவற்றில் பெரும்பாலானவை ஜோஷிமட்டுக்கும் பொருந்துகின்றன. ஜோஷிமட்டிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள கர்ணபிரயாகிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இமாசலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவும் ஏறத்தாழ இதே காரணிகளால், இதே நிலையை நோக்கி நகர்ந்துவருகிறது.

இவ்வளவுக்குப் பிறகும், இன்னும் நான்கு மாதங்களில் ‘சார் தாம்’ யாத்திரை தொடங்கும் என நம்பிக்கையுடன் சொல்கிறார் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி. ‘‘ஜோஷிமட்டிலோ மாநிலத்தின் பிற பகுதிகளிலோ ‘எல்லாமே புதையுறுகின்றன’ என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடாது’’ என்றும் மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். 2021 பிப்ரவரியில் நிகழ்ந்த பேரிடருக்குப் பின்னர், ‘இதை ஒரு காரணியாகப் பயன்படுத்தி வளர்ச்சிக்கு எதிரான கருத்தாக்கத்தை யாரும் உருவாக்க வேண்டாம்’ என்றார் அப்போதைய முதல்வர் திரிவேந்திர ராவத். இரண்டு குரல்களும் ஒன்றுதான்.

ஜோஷிமட் புதையுண்டுவருவது தொடர்பான வழக்கில், ‘இதுபோன்ற சூழல்களைக் கையாள ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் இருக்கின்றன’ என்றது உச்ச நீதிமன்றம். ஆனால், ஜனநாயக அமைப்புகள் அதற்கான உத்தரவாதத்தைத் தருகின்றனவா என்பதுதான் ஜோஷிமட் மக்களின் மனதில் எதிரொலிக்கும் கேள்வி!

- வெ.சந்திரமோகன்; தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x