மணிப்பூரில் பரவும் கசப்பு நெருப்பு!

மணிப்பூரில் பரவும் கசப்பு நெருப்பு!
Updated on
3 min read

மணிப்பூரில் நிலைமை கட்டுமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. பதற்றத்தைத் தணிக்கக் கூடுதல் துணை ராணுவப் படைகளை அனுப்பியிருக்கிறது மத்திய அரசு. ஒன்றரை மாதங்களுக்கு முன்பே இந்நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவும்கூடப் பிரச்சினைக்கான முழுத் தீர்வல்ல. இன அடிப்படையில் மூண்டுவரும் கசப்பு நெருப்பு எல்லாத் தரப்பு மக்களையும் பாதித்துவருகிறது.

மணிப்பூரின் உயிர்நாடியான நெடுஞ்சாலை யில், காலவரையற்ற போக்குவரத்துத் தடைப் போராட்டத்தை ஐக்கிய நாகா கவுன்சில் (யு.என்.சி.) ஒன்றரை மாதத்துக்கு முன் ஆரம்பித்தது. 'குக்கிகளும் நேபாளிகளும் கோரிவருவதைப் போல, சேனாபதி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, சாதர் மாவட்டமாக உருவாக்கப்படலாம்' என்ற தகவல்கள் வெளிவந்தபோது, நாகர்கள் அமைப்பு இந்தச் சாலைத் தடைப் போராட்டத்தைத் தொடங்கியது.

பிரச்சினையின் தொடக்கம்

இம்பால் பள்ளத்தாக்கின் வடக்கில் மலையடிவாரத்தில், கண்ணுக்கினிய இடத்தில் அமைந்திருப்பது சாதர் குன்றுப் பகுதி. இந்தப் பள்ளத்தாக்கின் கிழக்கிலும் மேற்கிலும் இரு கரங்களைப் போல விரியும் அப்பகுதி, மாநிலத்தின் எல்லா மாவட்டங்களையும் அப்படியே தொட்டுச் செல்வது. “சாதர் மலைப் பகுதி எங்களுக்கே சொந்தமானது; குக்கிகளும் ஏனைய இனக் குழுக்களும் அங்கு வந்த குடியேறிகள்தான். நிலத்துக்குச் சொந்தமான எங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டியவர்கள்தான் மற்றவர்கள்” என்பதே நாகர்களின் நிலை. எனவேதான் ஐக்கிய நாகர்கள் கவுன்சில், சாதர் மலைப் பகுதியைத் தனி மாவட்டமாக்குவதை எதிர்க்கிறது. “நாகர்களின் தாயகத்தை மணிப்பூர் அரசு சூழ்ச்சி செய்து பிளக்கப்பார்க்கிறது” என்பதும் அவர்களுடைய குற்றச்சாட்டாக இருக்கிறது.

சாதரின் முக்கியத்துவம் என்ன?

கிழக்கு இமாலயத்தில் மலைத் தொடர்கள் வடக்கிலிருந்து தெற்காகச் செல்கின்றன. இதனால், இம்பால் பள்ளத்தாக்கின் மலையடிவாரப் பகுதி வடக்கிலும் தெற்கிலும் அகலமாகவும் ஆழமாகவும் செல்கிறது. குன்றுகளின் அடிவாரப் பகுதி சமதளப் பகுதியாக இருப்பதால், நல்ல பாசன வசதிகளைப் பெற்றுள்ளது. இங்கு நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நாகர்களுக்கு மலைப் பகுதிதான் பிடிக்கும் என்பதால், அவர்கள் மலையில் வசிக்கின்றனர். அடிவாரப் பகுதியில் குக்கிகள் மற்றும் ஏனைய பழங்குடிகள் வசிக்கின்றனர். 1990-களின் நடுப்பகுதியில், ஒருவர் வசிக்கும் பகுதியில் இன்னொரு இனத்தவர் வசிக்கக் கூடாது என்று நாகர்களும் குக்கிகளும் பரஸ்பரம் பிரச்சாரம் செய்தனர். மலையிலிருந்து குக்கிகள் கீழே இறங்க வேண்டும் என்று ஐக்கிய நாகர்கள் கவுன்சில் நோட்டீஸ் வெளியிட்டது. அப்போது நடந்த மோதல்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், சில ஆயிரம் பேர் வீடுகளை இழந்து வேறிடங்களுக்குச் சென்றனர். விளைவாக, மலையில் நாகர்களின் எண்ணிக்கையும் பள்ளத்தாக்கை ஒட்டிய சமநிலத்தில் குக்கிகளின் எண்ணிக்கையும் அதிகமானது.

அடுத்தடுத்த காய் நகர்த்தல்கள்

புதிதாக இரண்டு மாவட்டங்களை உருவாக் கும் முடிவை மணிப்பூர் அரசு தங்களுடைய ஒப்புதல் இல்லாமல் எடுத்தது, எங்களுக்கு அரசு அளித்த வாக்குறுதியை மீறும் செயல் என்றது ஐக்கிய நாகா கவுன்சில். தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவே நவம்பர் 1 முதல் காலவரம்பற்ற போக்குவரத்து மறியலை அவர்கள் தொடங்கினார்கள். நவம்பர் 1 குக்கிகளைப் பொறுத்த அளவில் முக்கியமான நாள். அன்றைய தினம் அவர்கள் 'குட்'பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இதேபோல, சந்திரனின் கதியை ஒட்டிய பஞ்சாங்கத்தைப் பின்பற்றும் மீட்டி இன மக்களுக்கும் நவம்பர் 1 ஒரு முக்கியமான நாள். அன்றுதான் அவர்கள் 'நிங்கோல் சக்குபா'திருநாளைக் கொண்டாடுகிறார்கள். திருமணமான பெண்கள் தாய் வீட்டுக்கு வந்து உடன் பிறந்த சகோதரர்களுடன் விருந்துண்டு மகிழும் நாள் இது. ஆக, இந்நாளில் நாகர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கியது, இந்த இரு இன மக்களையும் பெரும் தொல்லைக்குள்ளாக்கியதோடு, அவர்கள் உடனடி எதிர்வினையாற்றவும் வழிவகுத்தது.

அரசின் சாதுரியம் இன்னொரு பிழை

நிலைமை இப்படிப் போய்க்கொண்டிருக்க, அரசு பின்வாங்காமல் புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பை டிசம்பர் 8 அன்று வெளியிட்டது. புத்திசாலித்தனமாகவோ அல்லது மடத்தனமாகவோ ஒரு காரியத்தை அது செய்தது. முன்னதாகத் தகவல் வெளியானதுபோல அல்லாமல், சாதர் மலை மாவட்டத்தை மட்டும் பிரித்து, இரண்டு மாவட்டங்கள் ஆக்காமல், வேறு 6 மாவட்டங்களையும் கூடவே பிரித்து உருவாக்க உத்தேசித்திருப்பதாக அறிவித்தது. அதாவது, மணிப்பூரில் இப்போதுள்ள 9 மாவட்டங்களில், 7 மாவட்டங்களை இதற்காகப் பிரிக்கப்போவதாகவும் தெரிவித்தது. ஐக்கிய நாகர்கள் கவுன்சில் இதற்குப் பின் தனது பிடிவாதத்தை மேலும் இறுக்கியது. இதற்குப் பதிலடியாகத்தான் எதிர் மறியல்களை ஏனைய இனக் குழுக்கள் அறிவித்தன.

வெவ்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தும் நாகர்கள் தங்களுடைய போக்குவரத்துத் தடையை விலக்கிக்கொள்ளவில்லை. எனவே, பழங்குடிகள் அல்லாத மீட்டி பிரிவினரும் இதர சிறுபான்மைச் சமூகத்தவரும் நாகர்கள் அதிகம் வசிக்கும் மலைப் பகுதிகளுக்குச் செல்லும் சரக்கு வாகனங்களை மறிக்கும் எதிர் நடவடிக்கையில் இறங்கினர்.

பெருகும் வன்முறைகள்

இம்பால் நகருக்கு வெளியே குராய் பகுதியில், உக்ருல் பகுதிக்குப் போக்குவரத்தை அனுப்ப சிறு போலீஸ் படை முயற்சி எடுத்தபோது, உள்ளூர் மக்கள் திரண்டுவந்து போலீஸாரை அடக்கி, எதிர் மறியலை நடத்தினர். பயணிகளை வாகனங்களிலிருந்து இறங்கச் சொல்லிவிட்டு, அவர்கள் வந்த 21 வாகனங்களுக்கும் தீ வைத்து எரித்தனர். இச்சம்பவத்தில் தங்களுடைய அதிருப்தியைத் தெரிவிக்க வாகனங்களை மட்டுமே எரித்தவர்கள், மாற்று இனத் தவரை ஏதும் செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்த வன்முறைச் சம்பவத்துக்குப் பிறகு, இம்பாலின் இரு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இவ்விரண்டிலும் எல்லா இனங்களையும் சேர்ந்தவர்கள் கலந்து வாழ்கின்றனர். இம்பாலின் மேற்குப் பகுதியில் இரவு நேர ஊரடங்கும், இம்பால் கிழக்கில் 24 மணி நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. பதற்றத்தைத் தூண்டிவிடும் வகையில் ஆதாரமற்ற செய்திகள் பரவக் கூடாது என்பதற்காக செல்பேசிச் சேவையை அரசே துண்டித்தது.

இந்தப் போராட்டங்கள் இலக்கில்லாத போக்கிரி பீரங்கிகளாக மாறி, தவறான இலக்குகள் மீது பாய்ந்தன. இதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள் அளவிட முடியாதவை. போராட்டங்களால் அரசுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அப்பாவி மக்கள்தான் அதிக பாதிப்படைந்தனர். இந்த மோதல்கள் இன அடிப்படையில் மட்டுமல்லாமல், மத அடிப்படையிலும் மக்களைப் பிரிக்கும் ஆபத்துள்ளவை. பள்ளத்தாக்கு முழுவதும் கசப்புணர்ச்சி பரவியுள்ளது.

கசப்பு பரவுவது நல்லதல்ல

புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டால், மலைப் பகுதி மீது பள்ளத்தாக்கில் உள்ள அரசு நிர்வாகத்துக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் போகும். நாகா இயக்கமோ நாகர் மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியும் நாகர்களின் பாரம்பரிய இருப்பிடங்களும் இணைக்கப்பட்டு, புதிய மாநிலம் வேண்டும் என்று கோருகிறது. மணிப்பூரின் பெரும் பகுதியையும் பிரித்துத் தங்களுக்குத் தர வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர். 'பகிரப்பட்ட தாயகம்', 'பகிரப்பட்ட திறன்கள்' இணைய வேண்டும் என்று கோரும் ஐக்கிய நாகாலாந்து கவுன்சிலும் என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்பும் தங்களுடன் நீண்ட காலம் உடன் வசித்துவரும் பிற பழங்குடிகளையும் இணைந்து வாழ அனுமதிக்கத் தயாராயில்லை.

இப்போதைய போக்குவரத்து மறியல் கிளர்ச்சியின் தனியம்சம் என்னவென்றால், எல்லாத் தரப்பு மக்களிடமும் அது கசப்பைத்தான் அதிகம் விதைத்திருக்கிறது. 'நான் நினைத்தால் உன்னுடைய குரல்வளையை நெரிப்பேன்' என்று பெரும்பான்மை, சிறுபான்மையைப் பார்த்துக் கூறுவதாகத்தான் இப்போதைய நிலைமை இருக்கிறது. இதெல்லாம் எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. ஆட்சியாளர்களுக்கோ எல்லாமே அரசியல் லாப - நஷ்டக் கணக்காகவே தெரிகின்றன.

- பிரதீப் பஞ்சௌபம்,மணிப்பூர் தலைநகர் இம்பாலிலிருந்து வெளியாகும் 'இம்பால் ஃப்ரீ பிரஸ்' பத்திரிகையின் ஆசிரியர். 'தி இந்து' தமிழ் நாளிதழுக்காக அவர் எழுதிய பிரத்யேக பத்தி இது.

சுருக்கமாகத் தமிழில்:வீ.பா. கணேசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in