

தமிழ்நாடு அரசின் சமீப கால முன்னெடுப்புகளும், அவை தோற்றுவித்த நம்பிக்கை அலைகளும் அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட வேண்டியவை. அவற்றில் இரண்டு மிக முக்கியமானவை. முதலாவது, அரசுப் பள்ளிதோறும் இயங்கத் தொடங்கியிருக்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள். பெரும்பாலும் பெண்கள் இடம்பெற்றிருக்கும் இந்தக் குழுக்கள் சிறப்பாகச் செயலாற்றிவருகின்றன.
இரண்டாவது, தமிழக அரசின் ‘இல்லம் தேடிக்கல்வித் திட்டம்’. பெருந்தொற்றுக் காலக் கற்றல் பேரிழப்பை ஈடுசெய்ய, கிராமம்தோறும், குடியிருப்புதோறும் கடந்த ஓராண்டாக இயங்கிவருகின்றன ‘இல்லம் தேடிக் கல்வி மையங்கள்’. ஒவ்வொன்றிலும் கற்பிக்கும் பொறுப்பை ஏற்றிருப்பவர்கள் அந்தந்தக் கிராமத்தைச் சேர்ந்த கல்வி கற்ற பெண்கள்; அதில் ஒருவர் பட்டம் பெற்றவர்.
இரண்டு முன்னெடுப்புகளும் கல்வியை மக்கள்மயமாக்கும் மாபெரும் கனவின் களமிறங்கும் வடிவங்கள். இவ்விரண்டில், குறுகிய காலத் திட்டமான ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’, முடிவை நோக்கி நகர்கிறது. அதைத் தொடரலாமா அல்லது முடித்துவிடலாமா என்ற குழப்பத்தில் அரசு இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். அதற்குப் பதிலாக‘ஊர் கூடும் மையம்’ உருவெடுக்கலாம் எனத் தெரிகிறது.
மையத்தின் சிறப்பம்சங்கள்: ஒவ்வொரு குடியிருப்புக்கும் (hamlet) ஒரு மையம். அருகிலிருக்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவின் பொறுப்பில் இயங்கும். மையத்தை நிறுவும் பொறுப்பு ஊராட்சி நிர்வாகத்தைச் சேர்ந்தது. ஊராட்சி உறுப்பினர்கள் இருவர் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினராக உள்ளனர். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை, கிராம / நகர வளர்ச்சித் துறைகள் நிதிப் பொறுப்பு ஏற்கும். நிதி அதிகம் தேவைப்படாத திட்டம் இது. ஊரில் நூலகம் இருந்தால், அதை இதற்கான மையமாக மாற்றிக்கொள்ளலாம். நகர்ப் பகுதிகளில் சமுதாயக் கூடங்கள் போன்ற பொது இடங்கள்... எதுவும் இல்லாவிடில், ஒரு சிறு கட்டிடம் கட்டிக்கொள்ளலாம்.
மையத்தை அன்றாடம் நடத்தும் பொறுப்பு இல்லம் தேடிக் கல்வியின் அந்தந்தக் குடியிருப்புத் தன்னார்வலர்கள் இருவரிடம் அளிக்கப்படும். அதில் ஒருவர், ஏற்கெனவே பள்ளி மேலாண்மைக் குழுவின் கல்வியாளராக ஒவ்வொரு பள்ளியிலும் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றிருக்கிறார். இவர்களுக்கு அரசு தற்போது அளிக்கும் மதிப்பூதியம் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். இந்த இருவர் தவிர, பள்ளி மேலாண்மைக் குழுவின் மற்ற உறுப்பினர்களும் மையத்தை நடத்துவதில் பங்கேற்பர்.
இயங்குமுறை: நாள் முழுதும் ஊர் மக்களுக்காக மையம் திறந்திருக்கும். காலை 9.00 முதல் மாலை 8.00 மணி வரை, வாரம் ஏழு நாள்களும் நடத்தப்படலாம்.
புத்தகங்கள் வைக்கும் அலமாரிகளே இதில் பிரதான அம்சம். அருகில் இருக்கும் பள்ளி நூலகத்திலிருந்து புத்தகங்களைக் கொண்டுவந்து அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் பாதுகாக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுவின் பொறுப்பில் மையம் இயங்குவதால், அது அவர்கள் பொறுப்பில், கண்காணிப்பில் இயங்கும். ஓரிரண்டு நாளிதழ்கள் வாங்கப்பட வேண்டும். அத்துடன், அரசு தொடங்கியிருக்கும் ‘வாசிப்பு இயக்கம்’ முழு வீச்சில் நடைபெறும் முக்கியக் களமாகக் கிராமம்தோறும், நகரத் தெருக்கள்தோறும் மையங்கள் செயல்படும்.
வாசிப்பை மக்கள் பண்பாடாக வளர்த்தெடுப்பதும், அதன்வழி அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதும் உச்சம் தொட அழைக்கும் ஒரு லட்சியம். பல்வேறு வகைப்பட்ட கற்றல்கள், உரையாடல்கள், விளையாட்டுகள், நாடகம் நடத்துவதற்கு, திரைப்படங்களைத் திரையிடுவதற்கு அல்லது மக்கள் இயல்பாகக் கூடி பேசுவதற்கு என ஆக்கபூர்வமான அனைத்துக்கும் இந்த மையம் பயன்படும்.
அனைவருக்குமான இடம்: மையத்தின் முதல் பணி, ஊரின் வளரிளம் பருவத்தினருக்குப் பொறுப்பும் முதிர்ச்சியும் அளிக்கக்கூடிய ஈடுபாடுகளை உருவாக்குவது. வளரிளம் பருவத்துப் பள்ளி மாணவர் வன்முறையில் ஈடுபடுவது இன்று பேசுபொருளாகியிருக்கிறது. மாணவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பிரச்சினைகள் விடையற்ற கேள்விகளாக நம் முன் நிற்கின்றன. அவர்களுக்குப் பொறுப்பு அளிக்கும் செயல்பாடுகள் இம்மையத்தில் இடம்பெறலாம்.
குறிப்பாக, விருப்பமுடைய இளைஞர்கள் முன்வந்து, தொடக்க / இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்கலாம். ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் ‘வாசிப்பு இயக்க’த்தின் முக்கியப் படையாக இந்த மையம் இயங்கும். பள்ளி / ஊர் நூலகத்திலிருந்து ஆசிரியர் / நூலகர் / கல்வியாளரால் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அலமாரியில் வைக்கப்படும். ‘வாசிப்பு இயக்கம்’ உருவாக்கும் புத்தகங்கள் அனைத்து மையங்களுக்கும் அளிக்கப்படும்.
கற்றுத்தரும் ஆர்வமுடையவர் எவராயினும் முன்வந்து கற்றுக்கொள்ள விருப்பமுடையவர்களுக்குக் கற்பிக்கலாம். மாணவராகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. வயது வந்தவருக்கும் கற்பிக்கலாம். ஓய்வுபெற்ற ஆசிரியர், தலைமை ஆசிரியர், அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர், தனியார் துறையிலிருந்து ஓய்வுபெற்றவர் இப்படி எவரும் முன்வந்து மையத்தில் பல நிகழ்ச்சிகளை நடத்தலாம். பயனுள்ள செயல்களில் ஈடுபடலாம்.
பெண்களுக்கான கூடுகை: டீக்கடையில் கூடி அரட்டையடிக்கும் சுதந்திரம் நம் பெண்களுக்கு ஏது? சாமானியப் பெண்களுக்கு அந்தச் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்றால், இது போன்ற ஒரு பொது இடம் தேவை. பெண்களின் பொறுப்பில் நடத்தப்படுவதால், பெண்கள் கூடுவதற்கு ஏதுவானதாகவும் இருக்கும். மனிதர்களுக்குள் சகோதரத்துவம் (Brotherhood) உருவாக வேண்டும் என்று பேசுகிறோம்.
இந்த மையம் மூலம் Sisterhood (ஆண்களையும் சேர்த்ததுதான்) உருவாகும் வழி பிறக்கும். டாஸ்மாக்கில் இருந்து தள்ளாடி வரும் ஆண்களைக் கொஞ்சம் தயங்கச் செய்யும் சாத்தியப்பாடும்கூட நேரலாம். வீட்டுப் பெண்களின் பின்னால் ஊரைச் சேர்ந்த பெண்கள் படை இருக்கிறது என்ற நினைவு இருந்தால், ஓங்கிய கை சற்றுத் தயங்கும். ஊரில் இருக்கும் கல்வி கற்ற பெண்கள், அதிகம் படித்திராத பெண்களுக்குக் கற்றுத் தரலாம். அறிவொளி இயக்கம் பயன்படுத்திய புதிதாக எழுத்தறிவு பெற்றவர்களுக்கான (neo-literates) புத்தகங்கள், ‘வாசிப்பு இயக்கம்’ உருவாக்கிவரும் புத்தகங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
இந்த உறவாடல், ஒருவழிப் பாதையல்ல. வயது முதிர்ந்த பெண்கள் சமையல் முதல் சகலத்தையும் மற்ற பெண்களுக்குக் கற்பிக்கலாம். ஆண்களும் கற்கலாம். வீட்டுச் சமையல் பெண்களின் பொறுப்பு, சாப்பிட்டு ஏப்பம் விடுவது மட்டுமே ஆண்களின் உரிமை என்பன போன்ற விதிகளையும் தகர்க்கலாம். அந்தந்த ஊரில், பக்கத்து ஊர்களில் கலைகள், விளையாட்டுகள் தெரிந்தவர்களை அழைத்துவந்து குழந்தைகள், பெரியவர் அனைவரும் அவற்றைக் கற்றுக்கொள்ளச் செய்யலாம். வெகு தூரத்திலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் விடுமுறைக்கு ஊருக்கு வருபவர்கள் உலகின் ஜன்னல்களை உள்ளூர்க்காரர்களுக்குத் திறந்துவிடலாம்.
இவற்றுடன், நம் சமூக சாபக்கேடுகளும் ஒழிய இம்மையம் உதவுமா? ஆதிக்க சாதிகள், மற்றவர்கள் வாழும் தெருக்கள் என்ற ஆயிரம் காலத்துப் பாகுபடுத்தும் கொடுமைகள் ஒழியுமா? அனைத்தும் நம் கையில்தான் இருக்கிறது. ஒவ்வொரு ஊரின் மையமும் ஒரு விதம். ஆயிரம் கரங்கள் இணையட்டும். மாற்றங்கள் மலரட்டும்!