வரலாற்றை ஏன் புனைவாக எழுத வேண்டும்?

வரலாற்றை ஏன் புனைவாக எழுத வேண்டும்?
Updated on
2 min read

கல்கி எழுதிய முதல் சரித்திர நாவல் ‘பார்த்திபன் கனவு’. 1942ஆம் ஆண்டு இந்த நாவல் தொடராக வெளிவந்தபோது இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. உலகின் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமாகத் திகழ்ந்த பிரிட்டனை, ஜப்பானும் ஜெர்மனியும் பல இடங்களில் மண்டியிட வைத்த காலகட்டம். இந்தச் சூழலைப் பயன்படுத்தி பிரிட்டனிடமிருந்து இந்தியா விடுதலை பெற வேண்டுமென்று நேதாஜி போன்ற தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர்.

பொ.ஆ. 9ஆம் நூற்றாண்டிலும் தமிழகத்தில் இதே போன்ற சூழல் நிலவியது. தமிழகத்தைக் கைப்பற்றி, ஆட்சி நடத்திய பல்லவர்களை வெளியேற்ற மண்ணின் மைந்தர்களான சோழர்கள் முயன்றனர். அதற்கான முன்னெடுப்புகளைச் சோழ இளவரசன் எடுக்க வேண்டுமென்று அரசன் பார்த்திபன் விரும்பினான். ‘பார்த்திபன் கனவு’ தொடராக வந்தபோது படிப்பவர் அனைவரும் இந்திய விடுதலைப் போராட்டம் செல்ல வேண்டிய வழி குறித்துப் புரிந்துகொண்டனர். சுதந்திரத் தீ எட்டுத்திக்கும் பரவிய காலத்தில் ‘பார்த்திபன் கனவு’ சமகாலத்தைப் பிரதிபலிக்கும் நாவலாகவே பார்க்கப்பட்டது.

‘பார்த்திபன் கனவு’ 1960களில் இதே பெயரில் ஜெமினி கணேசன், வைஜயந்தி மாலா நடிப்பில் திரைப்படமாக வெளியானது. இலக்கியமோ திரைப்படமோ கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் இணைக்க முடிந்தால் அதுவே எழுத்தின் வெற்றி. வரலாற்றுத் தகவல்கள், வருடங்களின் அணிவகுப்பு, போர்க்களக் காட்சிகளின் விவரணைகள் மட்டும் ஒருபோதும் வாசகர்களைக் கவராது. வரலாற்று நிகழ்வுகளோடு இணைந்த புனைவுகள், கற்பனைக் கதை மாந்தர்கள், சம்பவங்களின் நிகழ்வுகள் இவையெல்லாம் சேரும்போது வரலாற்று நாவல்கள் சுவாரசியமாகின்றன.

தமிழர்களின் மேன்மைக் குணங்களான காதல், வீரம், தன்மானம், விடாமுயற்சி ஆகியவை புனைவோடு சேர்ந்து வரும்போது அது வாசகர்களைக் கவர்கிறது. வாசகர்கள் தங்களது வாழ்நாளில் சந்தித்திராத போர் வீரர்களின் வாள்வீச்சு, இளவரசிகளின் கூந்தல் அழகு, நகை அலங்காரம், ஒற்றர்களின் நடமாட்டம், முத்திரை மோதிரங்கள் செய்யும் சாகசம், வீராவேசமான உரையாடல்கள் எல்லாம் வரலாற்று நாவல்கள் போன்றவை மீதான ஈர்ப்பைக் கூட்டுகின்றன.

உலக அளவில் ஏற்கெனவே வரலாற்றுப் புனைவுகள் பெரும் கவனம் பெற்று வந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளாகத் தமிழகத்திலும் வரலாற்றுப் புனைவுகள் அதிகக் கவனம் பெற்றிருக்கின்றன.

வரலாற்று நாவல்கள் எழுதிய கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், ஜெகசிற்பியன், பாலகுமாரன் போன்றவர்களுக்கான முக்கியத் துவம் ஆண்டுகள் கடந்தும் குறையவே இல்லை என்பதை ஒவ்வொரு புத்தகக் காட்சியிலும் பார்க்க முடிகிறது. மனித மனம் தான் வாழ்ந்திடாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திட நினைக்கிறது. வரலாற்றாசிரியர்கள் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, டி.வி.மகாலிங்கம், மா.ராசமாணிக்கம், ஐராவதம் மகாதேவன், கே.ராஜய்யன், ந.சஞ்சீவி போன்றோர் எழுதிய வரலாற்று நூல்கள் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும். ஆனால், இலக்கிய வாசகர்களின் வாசிப்புச் சுவைக்கு நெருக்கமாக வர இயலாதவை அவை.

வரலாற்று நாவல்கள் எழுதுபவர்களுடைய அறிவிக்கப்படாத நோக்கமே நமது கடந்த காலப் பெருமைகளை, தவறுகளைப் புனைவு வடிவில் வெளிக்கொண்டு வருவதுதான். வரலாற்று நாவல் எழுதுகையில் கூடுதல் கவனமும் தேவைப்படுகிறது. வரலாற்றுத் தகவல்களோடு சேர்க்கப்படும் புனைவுகள் சுவாரசியத்திற்காக மட்டுமே என்ற புரிதல் வேண்டும். சிலரது நாவல்களில் நிஜ மாந்தர்களைவிடப் புனைவு மாந்தர்கள் மீது புகழ் வெளிச்சம் பாய்ந்துவிடுகிறது. தமிழின் சமீபத்திய உதாரணம் குயிலி.

வாசகர்களின் தேர்ந்த வாசிப்புக்குப் புனைவு எது, உண்மை வரலாறு எது என்று தெரிந்துகொள்ள வேண்டிய கடமை உள்ளது. இல்லையென்றால் வரலாற்று நூல்களின் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டியவை புனைவுகளின் அடிப்படையில் புரிந்துகொள்ளப்படும். பத்தாண்டுகளுக்கு முன்பு நான் எழுத வந்தபோது சோழர், பாண்டியர், பல்லவர், சேரர் செப்பேடுகள் பற்றிய நூல்களை எழுதினேன்.

தமிழிலும் வடமொழியிலும் இருந்த செப்பேட்டுச் செய்திகளை எளிய தமிழில் தந்தபோது வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. நான்கு பேரரசர்களைப் பற்றி 119 செப்பேடுகளைத் தந்தபோது நானே 1,500 ஆண்டுகள் பின்னோக்கி வாழ்ந்த பெருமிதத்தை அடைந்தேன். அந்த அனுபவத்தை வாசகர்களிடம் கொண்டுசெல்ல தரவுகளை அடிப்படையாகக் கொண்ட நாவல்கள் எழுத வேண்டுமென நினைத்தேன்.

பெரும் பேரரசர்களைப் பற்றிய புனைவுகளை எழுதுவதற்கு முன்பாக நான் கேள்விப்பட்ட எனது கிராம வாழ்க்கையை, ‘வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு’ நாவலாக எழுதினேன். இந்த வரவேற்பு கொடுத்த துணிவுதான், வரலாற்று ஆசிரியர் என்ற இடத்திலிருந்து என்னை புனைவெழுத்தாளர் என்ற இடத்திற்கு நகர்த்தியது. மொழி சார்ந்து, கதையைக் கட்டமைக்கும் விதத்தில் மிகச் சவாலான இடம் இது. அந்தச் சவால் தரும் சுவாரசியத்திற்காகவும், வரலாற்றுக்குள்ளிருக்கும் மனித மனங்களின் புனைவுகளை எழுத்தின் வழியாகக் கண்டடையவும்தான் மீண்டும் மீண்டும் வரலாற்றுப் புனைவைத் தேர்வுசெய்கிறேன்.

மு.ராஜேந்திரன்
எழுத்தாளர், இ.ஆ.ப. அதிகாரி (ஓய்வு)
தொடர்புக்கு : dr.mrajendran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in