

தமிழ்நாட்டில் முதல் முறையாக நடைபெறும் சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி, ஜனவரி 16 அன்று மிகச் சிறப்பாகத் தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியின் சிறப்பம்சங்களின் தொகுப்பு:
வரவேற்கும் புத்தகங்கள்: சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி நடைபெறும் அரங்கின் முகப்பு, இக்கண்காட்சியில் பங்குபெறும் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுடைய நூல்களின் அட்டைப்படங்களால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. திருக்குறள், புதுமைப்பித்தன் கதைகளின் மொழிபெயர்ப்பு, வீரமாமுனிவரின் ‘தேம்பாவணி’, பாரதியார் கவிதைகள், ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனத் தமிழின் பெருமைக்குச் சான்று பகரும் முக்கிய நூல்களின் அட்டைகளும் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளுக்குச் சென்ற தமிழ் நூல்களின் அட்டைகளும் முகப்புக்குச் சிறப்புச் சேர்க்கின்றன.
100 திருக்குறள் 100 மொழிகளில்: உலகப் பொதுமறையான திருக்குறளை உலக மொழிகளுக்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக, ஆளுயர திருக்குறள் நூலை அரங்கினுள் நிறுவியிருக்கிறது ஆழி பதிப்பகம். உலகம் முழுவதற்கும் பொருந்தக் கூடிய வகையிலான 100 திருக்குறள்கள் தேர்வுசெய்யப்பட்டு, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மொழி என்னும் கணக்கில் 100 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட குறள்கள், மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களோடு இந்நூலில் இடம்பெற்றுள்ளது சிறப்பு.
சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் பங்கெடுத்துள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் மொழியில் திருக்குறளைப் படித்து மகிழ்கின்றனர். இந்த 100 குறள்கள், அமெரிக்க ஆங்கிலத்திலும் கவித்துவமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, இந்தக் குறள்கள் ஒவ்வொன்றையும் 100 மொழிகளுக்குக் கொண்டுசெல்லத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார், பதிப்பாளர் ‘ஆழி’ செந்தில்நாதன்.
உலகத் தமிழ் அரங்கு: தமிழர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளார்கள்; தாங்கள் வாழ்ந்துவரும் இடங்களில் தமிழையும் பரப்பிவருகிறார்கள். இந்தப் பின்னணியில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த தமிழ்ப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்தக் கூட்டரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. மேற்கண்ட நாடுகளில் வெளியான தமிழ் நூல்களும் அந்நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் எழுதிய தமிழ் நூல்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
உலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கு இடையே பதிப்புரீதியிலான பரிமாற்றத்தைச் சாத்தியப்படுத்துவதற்கும் பண்பாட்டுத் தொடர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்த ஏற்பாடு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் அயல் இலக்கியம் என்பது புலம்பெயர் இலக்கியம் என்கிற வகைமையோடு சுருங்கிவிடாமல், பரந்துபட்ட தளத்துக்குக் கொண்டுசெல்லும் சாத்தியங்களை இது கொண்டிருக்கிறது.
தமிழ் முற்றம்: சர்வதேசப் புத்தகக் கண்காட்சி அரங்கின் மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ‘தமிழ் முற்றம்’ பகுதியில், தமிழ் பதிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட நூல்களைக் கொண்டு தமிழ்நாடு அரசு தயாரித்துள்ள ‘பதிப்புரிமை கேட்டலாக்’கில் இடம்பெற்றுள்ள தமிழ் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு பாடநூல் கழகம் மேற்கொண்டிருக்கும் மொழிபெயர்ப்புத் திட்டங்களின் மூலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட முக்கியமான நூல்கள் சிலவும் ‘தமிழ் முற்ற’த்தில் இடம்பெற்றுள்ளன.
சர்வதேசப் பதிப்பாளர்களின் உரை: மிகக் குறுகிய காலகட்டத்தில் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட நிகழ்வு இது. ஆனாலும் இந்திய, சர்வதேச அளவில் பதிப்புலகில் சிறந்து விளங்கும் பதிப்பாளர்களையும் நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து அழைத்துவந்திருப்பதில் சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி வெற்றிகண்டுள்ளது.
அர்ஜென்டினா புத்தக அமைப்பின் (Fundacion El Libro) தலைவரும் புவோனஸ் அய்ரெஸ் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அலெஹாந்த்ரோ வக்காரோ, இஸ்ரேலின் டெபோரா ஹாரிஸ் முகமையைச் சேர்ந்த இலக்கிய-அயல் பதிப்புரிமை முகவர் கீலே கீயூட்ஸ், இத்தாலியைச் சேர்ந்த அறிவியல்புனைவு எழுத்தாளர் ஃபிரான்செஸ்கோ வெர்ஸோ, துருக்கியின் காலெம் முகமையின் நிறுவனர் நெரின் மொலக்ளு, சர்வதேசப் பதிப்பாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவரான ஜார்ஜியாவைச் சேர்ந்த வான்ட்ஸா ஜொபாவா, மலேசியாவின் Bookonomics Asiaவின் தலைமைச் செயல் அதிகாரி ஹஸ்ரி பின் ஹசன் உள்ளிட்ட சர்வதேசப் பதிப்புலக அங்கத்தினர் பலர் பதிப்புப் போக்குகள், சர்வதேசப் புத்தகக் கண்காட்சிகள் சார்ந்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
அறிவுப் பரிமாற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்ட இந்நிகழ்வில், சர்வதேசப் பதிப்பாளர்களின் இந்த உரைகள் தமிழ்ப் பதிப்பாளர்களுக்குப் புதிய திறப்புகளை வழங்குகின்றன.
நிறைவு விழா: சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாளான இன்று (ஜனவரி 18), தொடக்க நிகழ்வாக வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி உரையாற்றுகிறார். தொடர்ந்து, சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சியை உலகளாவிய நிகழ்வாகக் கொண்டுசெல்வது குறித்த கருத்தரங்கில் இந்திய, சர்வதேசப் பதிப்புலக ஆளுமைகள், நிர்வாகிகள் பேசுகின்றனர்; பரிசுபெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான மைலிஸ் டி கெராங்கல் உரைக்குப் பிறகு, இந்திய மொழிகளில் பதிப்பின் போக்குகள், கொள்கைகள் பற்றிய கருத்தரங்கம் நடைபெறுகிறது.
மாலை நடைபெறும் நிறைவு விழாவில், தமிழ்ப் பதிப்பாளர்களுக்கும் அயல் பதிப்பாளர்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுதலும் பதிப்புரிமைப் பரிமாற்றமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறுகின்றன. தொடர்ந்து, இந்தக் கண்காட்சியின் பன்னாட்டுத் தொடர்பு ஒருங்கிணைப்பாளரான ‘ஆழி’ செந்தில்நாதன், இக்கண்காட்சி பற்றிய அறிக்கையைச் சமர்ப்பிக்கிறார்.
தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம், முதன்முறையாகத் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் சர்வதேச மருத்துவ நூல்களை முதலமைச்சர் வெளியிடுகிறார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரை ஆற்ற, முதலமைச்சர் விழாப் பேருரை ஆற்றுகிறார். இப்படியாக நிறைவு பெறவிருக்கும் முதலாவது சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி, தமிழ்ப் பதிப்புலகை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வதற்கான சாத்தியங்களை நம்மிடம் கையளித்துச் செல்கிறது.
- சு.அருண் பிரசாத்; தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in