

கல்யாண் ராமன், இந்திய இலக்கிய உலகம் அறிந்த, புகழ்பெற்ற தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர். எழுத்தாளர் அசோகமித்திரனின் ஆங்கில முகமாக அறியப்படுகிறார். சிவசங்கரா என்ற பெயரில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். பூமணி, பெருமாள் முருகன், சி.சு.செல்லப்பா, சல்மா, வாஸந்தி, தேவிபாரதி உள்ளிட்ட பலரது ஆக்கங்களை மொழிபெயர்த்திருக்கிறார்.
பெருமாள் முருகனின் ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இந்திய இலக்கியத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான கிராஸ்வேர்டுக்குப் பல முறை பரிந்துரைக்கப்பட்டவர்.
தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்பாளராக உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா?
அங்கீகாரம் என்பதை ஒரு படைப்பாளி இரண்டு வகையில் பெறலாம். ஒன்று, அவர் செயல்படும் சூழலிலிருந்து பெறக்கூடியது. என்னைப் பொறுத்தவரை, நான் மொழியாக்கம் செய்யும் பிரதிகளை ஆங்கில மொழிப் பதிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டு பிரசுரிக்க முன்வருகிறார்கள். அவை வாசகர்கள், விமர்சகர்கள் ஆகியோரிடையே கவனமும் மதிப்பும் பெற்றுவருவதற்கான அறிகுறிகளும் காணக்கிடைக்கின்றன. இவை இயல்பாகவே நடந்தேறுவதால், மேற்கொண்டு செயல்படுவதற்கான வாய்ப்புகளுக்கும் குறைவில்லை.
இரண்டாவது வகை, பண்பாட்டு நிறுவனங்களிடமிருந்து விருது, பரிசு என்ற முறையில் ஒருவர் பெறக்கூடியது. இந்த வகைமையில் பல சிக்கல்கள் உள்ளன என்பது பரவலாக எல்லோரும் அறிந்ததே. இவ்வகை அங்கீகாரம் இயல்பாகக் கிடைக்கும்போது நிறைவளிப்பதாக இருக்கக்கூடும்; ஆனால், கிடைக்காவிட்டாலும் பாதகமில்லை.
மொழிபெயர்ப்பில் என்ன விதமான கொள்கையைப் பின்பற்றுகிறீர்கள்?
மொழியாக்கம் செய்வதற்கான பிரதியைத் தேர்ந்தெடுக்கும்போது, அது ஏதோ ஒருவகையில் இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருத்தல் வேண்டும். மொழியாக்கம் என்று வரும்போது மூலப் பிரதியின் குரலை எவ்விதச் சிதைத்தலோ திரித்தலோ இன்றி இலக்கு மொழியில் சேர்க்க வேண்டும்.
மேலும், மொழியாக்கப் பிரதி இலக்கு மொழியில் ஒரு இலக்கியப் பிரதி வாசகருக்கு அளிக்கக்கூடிய எல்லா சிறப்பனுபவங்களையும் அளிக்க வேண்டும். இயன்றவரை இந்த அம்சங்களுக்காக முயல்வது ஒரு மொழிபெயர்ப்பாளரின் தவிர்க்க முடியாத கடப்பாடு என்று கருதுகிறேன்.
வட்டார மொழியை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல்...
வட்டார மொழியை இலக்கு மொழியில் மொழியாக்கம் செய்யும்போது, அந்த நிலப்பரப்பு, வாழ்முறை ஆகியவை மொழியாக்கப் பிரதியில் தொனிக்க வேண்டும். வட்டார மொழிக்குச் சமமான ஒரு மொழியை நாம் இலக்கு மொழியில் உருவாக்க இயலாது. எனவே, தொனியிலிருந்து மொழிபெயர்ப்பதே பொருத்தமாக இருக்கும். சொற்களுக்கும் தொனிக்கும் எந்த விகிதத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது மொழிபெயர்ப்பாளரின் தேர்வையும் திறமையையும் பொறுத்தது.
ஆங்கில இலக்கியத்தில் மற்ற மாநில மொழிகளுடன் ஒப்பிடும்போது தமிழின் இடம் என்னவாக இருக்கிறது?
கடந்த சில பத்தாண்டுகளில் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குக் கணிசமான எண்ணிக்கையில் சிறந்த படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. வங்காளம், மலையாளம், மராத்தி, இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளுடன் ஒப்பிடும்போது தமிழ் முன்வரிசையில் இடம் பெறக்கூடியது என்றுதான் நினைக்கிறேன்.
ஆனால், தமிழ்ப் படைப்புகளைப் பற்றியும் இங்கிருந்து மொழியாக்கம் செய்யப்படும் படைப்புகளைப் பற்றியும் சமூக-இலக்கியப் பின்னணியுடன் விளக்கக்கூடிய விமர்சனக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதும் திறன் படைத்தவர்கள் அரிதாகவே இருக்கின்றனர். இலக்கியப் படைப்புகள் அவற்றின் மீதான சொல்லாடல்களில்தான் உயிர் பெற்று இயக்கம் பெறுகின்றன. இது நாம் அனைவரும் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை.
எந்த அடிப்படையில் தமிழ் இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கப் படுகின்றன?
இலக்கியத் தரம், புதியதாக ஒரு புலத்தை, பார்வையை, மக்கள் சமுதாயத்தை, வரலாற்றை முன்வைக்கும் தன்மை போன்ற சில அளவுகோல்கள் இருக்கக்கூடும். டெல்லியில் இருக்கும் ஆங்கில மொழிப் பதிப்பகங்களுக்குத் தாங்களாகவே பிறமொழிப் படைப்புகளை நேரடியாக ஆய்ந்தறிந்து தேர்வுசெய்யும் ஆற்றல் இருப்பதாகத் தெரியவில்லை. இங்கிருப்போரின் முன்னெடுப்புகளும் பரிந்துரைகளும் இந்தத் தேர்வில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. பெரும்பாலும் செவ்வியல் அந்தஸ்தை எட்டிவிட்ட படைப்புகள் எளிதில் தேர்வு செய்யப்படுகின்றன.
ஆனால், அண்மைக் காலத்தில் உருவாகிவரும் எழுத்தாளர்களும் அவர்களுடைய படைப்புகளும் பெரும்பாலும் உரிய கவனம் பெறாமல் போய்விடுகின்றன என்பதுதான் என் எண்ணம். இத்தேர்வுகளைப் பற்றிப் பொதுவாக வெளிப்படையாகவும் நாம் விவாதிக்கக்கூடிய அரங்கு நமக்குத் தேவை என்றுதான் நினைக்கிறேன். இந்தச் சூழலில் அது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை.
மொழிபெயர்க்கத் தகுதியான தமிழ் ஆக்கங்கள்...
ஏராளமாக இருக்கின்றன. சமகால இலக்கியத்தை எடுத்துக்கொண்டால், இன்னும் எவ்வளவோ படைப்புகளும் எழுத்தாளர்களும் கவனிக்கப்படாமல் இருக்கின்றனர். பூமணியின் படைப்பு, ஆங்கிலத்தில் 2019இல்தான் வெளிவந்தது. ஜெயமோகனின் ‘அறம்’ 2022இல்தான் வெளிவந்திருக்கிறது.
ந.முத்துசாமியின் நாடகங்கள் எவையுமே இன்னும் உரிய கவனம் பெறும் வகையில் மொழிபெயர்க்கப்படவில்லை. இன்றைய தமிழ்ச் சமூகத்துக்குத் தம் மொழியில் உள்ள சிறந்த எழுத்தாளர்களையும் அவர்களது ஆக்கங்களையும் உலக மேடையில் இடம்பெறச் செய்ய வேண்டுமென்ற நோக்கம் இருந்தால், அதற்கு வேண்டிய வழிமுறைகளைப் பற்றி நாமனைவரும் சிந்திப்பதும் செயல்படுவதும் அவசியம். இது ஊர் கூடித் தேரிழுத்தால் மட்டுமே நடக்கக்கூடிய காரியம்.
என்ன மாதிரியான நூல்களுக்கு ஆங்கிலத்தில் விற்பனை வாய்ப்பு இருக்கிறது? சமூகப் பிரச்சினை கள், இனவரைவியல் சார்ந்து எழுதப்படும் நூல்கள் மட்டுமே எளிதில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்று பரவலான ஒரு கருத்து நிலவுகிறது...
நான் வெறும் மொழிபெயர்ப்பாளன் மட்டுமே; எனவே, எனக்குச் சந்தை நிலவரம் பற்றி அதிகம் தெரியாது. ஆனால், நீங்கள் சுட்டியிருக்கும் பாகுபாடு பற்றி என் கருத்து இதுதான். நம் இலக்கியச் சூழலில், வரலாற்றுக் காரணங்களால் பல சமூகங்கள் இலக்கிய வெளியில் படைப்பாளிகளாகக் காலெடுத்து வைப்பதே அண்மைக் காலத்தில்தான் நிகழ்ந்திருக்கிறது. இதுவரை சொல்லப்படாத கதைகளையும் பேசப்படாத வாழ்முறைகளையும் விவரிக்கப்படாத நிலப்பரப்புகளையும் முதன்முறையாக எழுத்தில் வடிக்கும் முயற்சிகளை இனவரைவியல் எனக் கருத்துத் தெரிவிப்பது ஒருவகை மேட்டிமைத்தனம்.
- சந்திப்பு: மண்குதிரை; தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in