

எஞ்சியிருந்த சோஷலிஸத் தலைவர்களை அடுத்தடுத்து இழந்துவருகிறது இந்தியா. சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கடந்த ஆண்டு காலமான நிலையில், ஜனவரி 12 அன்று சரத் யாதவ் மறைந்தார்.
ராம் மனோகர் லோஹியா, ஜெயப்பிரகாஷ் நாராயண் (ஜேபி) ஆகிய சோஷலிஸத் தலைவர்களின் தாக்கத்தால் உருவானவரும், பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதித்துவத்துக்குப் பெரும் ஊக்கமாக இருந்தவருமான சரத் யாதவின் மறைவு, சமதர்மக் கொள்கையில் பற்றுக் கொண்டவர்களுக்குப் பேரிழப்பு. அதேவேளையில், எண்ணற்ற திருப்பங்கள் நிறைந்த அவரது அரசியல் வாழ்க்கை, இந்தியாவில் சோஷலிஸ அரசியலின் வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டும் முக்கியப் படிப்பினையும்கூட.
காங்கிரஸ் குடும்பத்திலிருந்து: மத்தியப் பிரதேசத்தின் ஹோஷங்காபாத் மாவட்டத்தின் பாபய் தாலுகாவில் உள்ள அக்மாவ் கிராமத்தில் 1947 ஜூலை 1 அன்று பிறந்தவர் சரத் யாதவ். அவரது தந்தை நந்த் கிஷோர் யாதவ், காங்கிரஸ்காரர். காங்கிரஸ் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த சரத் யாதவ், இந்திரா காந்திக்கு எதிராகத் தேசிய அளவில் எழுந்த பேரலையின் பெரும் துளியாக வரலாற்றில் பதிவானவர். ஜபல்பூர் பொறியியல் கல்லூரியில் பயின்றபோது, ஜேபியின் ‘முழுமையான புரட்சி’ இயக்கத்தின் சார்பில் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்.
1974 ஜபல்பூர் இடைத்தேர்தலில் சரத் யாதவை, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜேபி தேர்ந்தெடுத்தபோது, அவர் மிசா சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் இருந்தார். அந்தத் தேர்தலில் சரத் யாதவுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி காங்கிரஸுக்கு எதிரான சோஷலிஸ அரசியல் சமரில் வெற்றிகரமான தொடக்கம். “இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி” என ஜேபி கொண்டாடினார்.
கொள்கைக்காகப் பதவியை உதறவும் சரத் யாதவ் தயங்கவில்லை. மக்களவையின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளிலிருந்து ஆறு ஆண்டுகளாக உயர்த்திய இந்திரா காந்தியைக் கண்டித்துப் பதவி விலகினார். 1977 மக்களவைத் தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் வென்றார்.
உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் 1981இல் முதன்முறையாகப் போட்டியிட்ட ராஜிவ் காந்தியை எதிர்த்து, அனைத்துக் கட்சி வேட்பாளராக சரத் யாதவ் களம் கண்டார். பெரும் பண பலத்துடன் போட்டியிட்ட ராஜிவை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியடைந்ததாக ஒரு பேட்டியில் அவர் பதிவுசெய்திருக்கிறார்.
பிஹாருக்கு மாறிய ஜாகை: மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிஹார் என மூன்று மாநிலங்களிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை சரத் யாதவுக்கு உண்டு. மொத்தம் ஏழு முறை மக்களவை உறுப்பினராகவும், மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். நாடாளுமன்றக் குழுக்களில் அங்கம் வகித்தார்.
1991இல் பிஹாரின் மதேபுரா மக்களவைத் தொகுதியில் சரத் யாதவ்தான் நிற்க வேண்டும் என லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமார் ஆகியோர் உறுதியாக நின்றனர். மத்தியப் பிரதேசத்துக்காரரான சரத் யாதவ், பிஹார் அரசியலில் நிலைபெற அது ஒரு முக்கியத் தருணமாக அமைந்தது. பிற்பாடு, பிஹார் மாநிலமே அவரது அரசியல் பயணத்தின் கர்ம பூமியாக மாறிப்போனது.
1990இல் வி.பி.சிங்கின் ஆதரவு பெற்ற ராம் சுந்தர் தாஸ் பிஹார் முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சரத் யாதவ் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக லாலுவுக்கு அந்த வாய்ப்புக் கிட்டியது. பிற்காலத்தில் இருவரும் பரம வைரிகளாக மாறினர். மதேபுரா மக்களவைத் தொகுதியில் நான்கு முறை போட்டியிட்டு வென்றவர் சரத் யாதவ்.
மதேபுராவில் யாதவ சமூகத்தினர் அதிகம் என்பதால், அவர் தனது ஜாகையை அங்கு மாற்றிக்கொண்டதாகவும் விமர்சனங்கள் உண்டு. ஆனால், 1999இல் அதே தொகுதியில் லாலு பிரசாத் யாதவுடன் நேரடியாக மோதி வெற்றிபெற்றவர் சரத் யாதவ். முந்தைய தேர்தலில் லாலுவிடம் அடைந்த தோல்வியை அதன் மூலம் சரிக்கட்டிக்கொண்டது தனி வரலாறு!
முக்கியத் தருணங்கள்: பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க மண்டல் குழு அளித்த பரிந்துரையை அமல்படுத்த வி.பி.சிங்குக்கு அழுத்தம் கொடுத்தவர் சரத் யாதவ். மண்டல் குழுவுக்கு எதிராக முன்னேறிய சமூகத்தினர் சாலையில் இறங்கிப் போராடியபோது, பிற்படுத்தப்பட்ட இளைஞர்களும் களத்தில் இறங்கிப் போராட வேண்டும் என்று அழைப்புவிடுத்தார். நீண்ட காலமாக சரத் யாதவ் கொடுத்த அழுத்தம் காரணமாக, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முன்வந்தது.
எனினும், அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் என முக்கியப் பிரச்சினைகளைப் பேசுபொருளாக்கியதில் சரத் யாதவின் பங்கு முக்கியமானது. சோஷலிஸ்ட்டாக இருந்தும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்தது அவர் மீதான முக்கிய விமர்சனம். பெண்கள் குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அவர் மீதான கரும்புள்ளி.
சரண் சிங், தேவிலால், வி.பி.சிங், லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமார், முலாயம் சிங் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் எனப் பல தலைவர்களுடன் முரண்பட்டார். இதனால் அவரது அரசியல் பயணம் பல திசைவழி மாறியது. ஜனதா கட்சி, லோக் தளம், ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் எனப் பல கட்சிகளில் அங்கம் வகித்தார். ஆரம்பத்தில் தனது முடிவுகளுக்காக அவர் பெரிதாக வருந்தவில்லை.
அரசியல் வீழ்ச்சி: சோஷலிஸ்ட்டாக அறியப்பட்டிருந்த சரத் யாதவ், கமண்டலத்துக்கு (இந்துத்துவ அரசியல்) எதிராக மண்டல் எனும் முழக்கத்தை முன்னெடுத்தவர். ஆனால், அவரே பிற்பாடு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றார். வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் விமானப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அமைச்சகப் பொறுப்புகளை வகித்தது அவரது தனிப்பட்ட வெற்றி எனலாம். ஆனால், கொள்கை அரசியல்ரீதியாக அவரது முக்கியத் தோல்வி அது.
இந்திரா காந்தி காலத்திலேயே, ஜனதா தலைவர்கள் ஒற்றுமையின்மையால் சோஷலிஸ அரசியலின் வீழ்ச்சிக்கு வழிவகுத்துவிட்டனர். சரத் யாதவோ, பாஜகவின் ஆரம்பகால அரசியல் வெற்றியின் பலனை அனுபவித்தார். எனினும், 2013இல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதை அவரும் நிதீஷ் குமாரும் ஏற்க மறுத்தனர். விளைவாக, ஐக்கிய ஜனதா தளம் அக்கூட்டணியிலிருந்து வெளியேறியது.
பிற்பாடு பாஜகவுடன் நிதீஷ் குமார் மீண்டும் கைகோத்ததை ஏற்க முடியாமல் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகி, லோக்தாந்த்ரிக் ஜனதா தளம் கட்சியைத் (எல்ஜேடி) தொடங்கினார். 2022இல் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் (ஆர்ஜேடி) அக்கட்சியை இணைத்தார். இது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை நோக்கிய முதல் படி என்றார்.
சோஷலிஸத் தலைவர்கள் அடிக்கடி முரண்பட்டுத் தனிப்பாதையைக் கண்டது நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது உண்மைதான் என ஒப்புக்கொண்டார். 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றுகடைசிக் காலத்தில் வலியுறுத்தினார். ஆனால், தேர்தலைப்பார்க்காமலேயே விடைபெற்றுக்கொண்டார்.
- வெ.சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in