

தமிழ்நாடு அரசின் சார்பில், பொது நூலகத் துறையின் கீழ், தமிழ்நாடு பாடநூல் கழகமும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் - பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் ‘சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி’ நேற்று தொடங்கியிருக்கிறது.
தென்னிந்தியாவின் திராவிட மொழிப் படைப்புகளைப் பிற இந்திய மொழிகளுக்குக் கொண்டுசெல்லும், ‘திசைதோறும் திராவிடம்’ என்கிற மொழியாக்கத் திட்டத்தைத் தமிழ்நாடு பாடநூல் கழகம் ஏற்கெனவே செயல்படுத்திவருகிறது. அரசியல்-சிந்தாந்தச் சார்புகளைத் தாண்டி, தமிழைக் கொண்டாடும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக, சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’, மு.கருணாநிதியின் ‘திருக்குறள் உரை’, ‘இந்து தமிழ் திசை’ வெளியீடான ‘மாபெரும் தமிழ்க் கனவு’, திராவிட வேதம் என்று சொல்லப்படுகிற ‘திருவாய்மொழி’ எனப் பரந்துபட்ட நூல்கள் தமிழிலிருந்து பிற இந்திய மொழிகளுக்குச் சென்றுள்ளன. அதை உலக மொழிகளுக்கு விரிவுபடுத்தும் முன்னெடுப்பாக, சர்வதேசப் புத்தகக் கண்காட்சியைத் தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கிறது. தமிழ்ப் படைப்புகள் உலக மொழிகளுக்குச் செல்லும் பாதையை இந்த முன்னெடுப்பு விசாலப்படுத்தியிருக்கிறது.
கடந்த 100 ஆண்டுகளில், ஒட்டுமொத்தமாக சுமார் 120 நூல்கள் மட்டுமே தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன; பிற மொழிகளிலிருந்து தமிழுக்குச் சுமார் 1,200 நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் வங்கம், மராத்தி, தெலுங்கு போன்ற இந்திய மொழிகள், ஆங்கிலம் தவிர்த்து ரஷ்ய மொழி உள்ளிட்ட உலக மொழிகளிலிருந்து நூல்கள் தமிழுக்கு வந்துள்ளன. இந்த நூல்களில் சில, சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் ‘தமிழ் முற்றம்’ அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சர்வதேசப் புத்தகக் கண்காட்சி அரங்கைச் சுற்றிலும், வந்திருக்கும் நாடுகளின் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களின் படங்கள், அந்நாடுகளின் கலைப் பொருட்களின் படங்கள், முக்கிய நூல்களின் அட்டைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. பதிப்புத் துறையின் உலகளாவிய போக்கு குறித்த நேரடி, இணைய வழிக் கருத்தரங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பதிப்புத் துறையில் இயங்கும் அனுபவமிக்க உள்நாட்டு, வெளிநாட்டு ஆளுமைகள் இதில் பங்கெடுக்கிறார்கள். மொழி, மொழிபெயர்ப்பு சார்ந்த உரைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெறுகின்றன.
கனடா, பிரான்ஸ், போர்ச்சுகல், இத்தாலி, இஸ்ரேல், ஜார்ஜியா, அர்மீனியா, அசர்பைஜான், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார், வங்கதேசம், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், உகாண்டா, தான்சானியா, கென்யா, போட்ஸ்வானா ஆகிய நாடுகளிலிருந்து பதிப்பாளர்களும் இலக்கிய முகவர்களும் எழுத்தாளர்களும் வந்துள்ளனர்; இந்தியாவின் பிற மாநிலப் பதிப்பாளர்களும் வந்துள்ளனர்.
கல்விசார் நூல்களின் பரிமாற்றமும் சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் முக்கிய இடம் வகிக்கிறது. தமிழ்நாடு பாடநூல் கழகம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மொழிபெயர்த்த வேளாண் நூல்களைப் பெறுவதற்காக, உகாண்டாவிலிருந்து பதிப்பாளர்கள் வந்திருக்கிறார்கள்; போட்டித் தேர்வுகளில், பொருள் உணர்திறன் (Comprehension) பயிற்சிக்கு மேம்பட்ட பாடத்திட்டத்தைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலிருந்து SAP என்னும் பதிப்பாளரை அழைத்திருக்கிறோம்.
சர்வதேசப் பதிப்பாளர்களின் மருத்துவ நூல்கள் இதுவரை தமிழில் வந்ததில்லை; இப்போது Elsevier, Routledge போன்ற புகழ்பெற்ற பதிப்பாளர்களுடன் இணைந்து Gray's Anatomy, Guyton and Hall Textbook of Medical Physiology போன்ற முக்கியமான மருத்துவப் பாடநூல்களை முதல் முறையாகத் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளோம். நிறைவு விழாவில், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஐந்து மருத்துவ நூல்களை முதலமைச்சர் வெளியிடுகிறார்.
சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்கு, முதலமைச்சர் ரூ.6 கோடி ஒதுக்கியுள்ளார். அந்த வகையில், 10 இந்திய மொழிகள், 10 உலக மொழிகளில் தமிழ் நூல்களை மொழிபெயர்ப்பதற்கான மொழிபெயர்ப்பு நல்கையாக ரூ.1 கோடி வழங்கவிருக்கிறோம். ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தொடங்கி நூல் வெளியீடு வரை படிப்படியாக இந்த நல்கை சம்பந்தப்பட்ட பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளருக்கு வழங்கப்படும்.
‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும், இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும், திறமான புலமையெனில் வெளி நாட்டார் அதை வணக்கஞ் செய்தல்வேண்டும்’ என்கிற மகாகவி பாரதியின் கனவு, இப்போதுமுழுமையாகச் செயல்வடிவம் பெறத் தொடங்கியுள்ளது.
- சங்கர சரவணன் இணை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் கழகம்