

இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் திடீரென மூண்டுள்ள இந்த மோதல் எப்போது, எப்படி முடிவுக்குவரும் என்று இரு தரப்பு ஆதரவாளர்களையும் கேட்டுப்பாருங்கள், விடை ஒன்றாகத்தான் இருக்கும். “காஸா பகுதி எங்கள் வசம் வந்துள்ளது. இனி, அவர்களுக்குப் பின்னடைவு” என்று ஹமாஸ் சொல்லும். “ஹமாஸ் மேற்கொண்டு நுழைய முடியாமல் வழியை அடைத்துவிட்டோம், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்று இஸ்ரேல் சொல்லும்.
இப்போதைய சூழலில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. முதலில், இருதரப்பும் இனி அரசியல், ராணுவ, மதரீதியாக மோதல்களைத் தீவிரப்படுத்தும். இஸ்ரேலுடன் சுமுக உறவு வைத்திருந்த பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் சமரச முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதால், இஸ்ரேலின் அடாவடித்தனத்தை அவராலும் நிறுத்த முடியவில்லை.
வலதுசாரிகளின் நோக்கம்
பாலஸ்தீனர்களை மோசமாகத் திட்டுவது முதல் அவர்களை உயிருடன் எரிப்பது போன்ற செயல்களில் தேர்ந்தவர்கள், காஸாவில் குடியேறியுள்ள இஸ்ரேலியர்கள். (பாலஸ்தீன இளைஞர் முகம்மது அபு காதிர் கடத்தப்பட்டு, எரிக்கப்பட்ட சம்பவம் இதற்கு ஓர் உதாரணம்.) பாலஸ்தீனப் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி, பாலஸ்தீனர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதுதான் இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல் தலைவர்கள் சிலரின் நோக்கம். காஸா பகுதியில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் தொடர்கிறது. பலி எண்ணிக்கை மூன்று இலக்க எண்ணைத் தொட்டுவிட்ட நிலையில், வான்வழித் தாக்குதலைக் கைவிட்டுத் தரைவழித் தாக்குதலில் ஈடுபட வேண்டும் என்று இஸ்ரேல் அரசியல் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். இஸ்ரேல் ராணுவமோ எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
சமரசத்தின் வெற்றிடம்
கவலை தரும் மற்றொரு விஷயம், இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தத்தைக் கொண்டுவர, திறமையான சமரச நாடுகள் இல்லாததுதான். 2008-ல் இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டை தொடர்ந்து 22 நாட்களாக நீடித்த தற்கும், சமரச நாடுகள் இல்லாததுதான் காரணமாக இருந்தது. 2012-ல் ‘பாதுகாப்பின் தூண்கள்' என்ற பெயரில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதலின்போது, அமெரிக்காவும் எகிப்தும் இணைந்து எடுத்த துரித நடவடிக்கைகள் சண்டை நிறுத்தம் ஏற்பட வழிவகுத்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அப்போதைய எகிப்து அதிபர் முகமது மோர்ஸிக்கு ஹமாஸ் அமைப்புடன் நல்ல உறவு இருந்தது. எகிப்தின் உயர் அதிகாரிகளும், அரபு நாடுகளின் தலைவர்களும் காஸாவுக்குச் சென்று நடத்திய சமாதான நடவடிக்கைகளால் பிரச்சினையின் தீவிரம் தணிக்கப்பட்டது. தற்போது ஹமாஸுக்கும் எகிப்துத் தலைமைக்கும் இடையே சுமுக உறவில்லை. அரபு நாடுகளுக்கு இடையே உள்ள குழப்பங்களைச் சொல்லத் தேவையில்லை. இந்தக் காரணங்களால் இஸ்ரேல் முன்பைவிட அதிகத் தீவிரம் காட்டிவருகிறது.
நெதன்யாஹுவின் பலவீனம்!
மூன்றாவதாக, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு. 2009-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இஸ்ரேலிய வலதுசாரி அரசியல் தலைவர்களின் சவால்களை அவர் சந்தித்து வருகிறார். ஈரான் மற்றும் பாலஸ்தீனத்தின் ராணுவரீதியான மிரட்டல்களைக் கண்டும் காணாதவர்போல, கடந்த எட்டு ஆண்டுகளாகச் செயல்படாத தலைவராக அவர் இருப்பதாக வலதுசாரித் தலைவர்கள் கூறிவருவதால், இந்த முறை பாலஸ்தீனம் மீதான தாக்குதல்களில் அதிகத் தீவிரம் காட்டுகிறார் என்றே கருத வேண்டியிருக்கிறது.
கடந்த ஒன்பது மாதங்களாக அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. பாலஸ்தீனப் பகுதிகளில் தனது ஆக்கிரமிப்புக் குடியிருப்புகளை விலக்கிக்கொள்ள இஸ்ரேல் மறுத்துவிட்டது. ஒருபுறம், வரம்பற்ற வன்முறை; மறுபுறம், சமாதானப் பேச்சுவார்த்தை. இந்த இரண்டும் தேவையில்லையென்றால், சர்வதேசச் சட்டப்படி, பாலஸ்தீனத்தின் இடத்தை ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை சர்வதேசச் சமூகம் கடைப்பிடிக்கலாம். இதைச் செய்ய யாரும் தயாராக இல்லாததால், சண்டையும் சமாதான முயற்சிகளும் மாறிமாறித் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
- © தி கார்டியன்,
தமிழில்: வெ. சந்திரமோகன்