

பெருந்தொற்றுக் காலத்தில் உயர ஆரம்பித்த இணைய எழுத்தாளர்களின் எண்ணிக்கை, இன்று வியக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது. கருத்து, அளவு போன்ற விஷயங்களில் இணையத்தில் கிடைக்கும் சுதந்திரமும் யாரும் எழுத முடியும் என்கிற வசதியும் இந்த வளர்ச்சிக்கான காரணங்கள்.
‘மெட்ராஸ் பேப்பர்’ வார இதழ், இணைய இதழ்களில் குறுகிய காலத்தில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இதில் எழுதும் பலரும் புதியவர்கள். இவர்களின் தொடர்கள் நிறைவு பெற்று, 13 புத்தகங்களாக இந்தப் புத்தகக் காட்சியில் ஜீரோ டிகிரி பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நூல்களில் கணிசமாகப் பெண்களின் பங்களிப்பும் இருக்கிறது. கிழக்குப் பதிப்பகத்தால் தொடங்கப்பட்ட ‘கிழக்கு டுடே’வில் வெளிவந்த 22 தொடர்களிலிருந்து தயாரான 10 நூல்கள் இந்தப் புத்தகக் காட்சியில் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் புதிய எழுத்தாளர்களின் படைப்புகள்தாம்! ‘புதியவர்களுக்குப் புத்தகம் எழுதுவது என்றால் கொஞ்சம் மலைப்பாக இருக்கும். வாரம் ஓர் அத்தியாயம் என்று எழுதும்போது அது எளிதாக இருக்கும்’ என்கிறார் ‘கிழக்கு டுடே’ ஆசிரியர் மருதன்.
பெண்களின் எழுத்துகளும் பெண்கள் தொடர்பான எழுத்துகளும் என்ற நோக்கில் இயங்கிவரும் ‘ஹெர் ஸ்டோரிஸ்’ இணையதளத்திலிருந்து புதிய பெண் எழுத்தாளர்களின் நூல்கள் வெளிவந்துள்ளன. ஒரு தனி உலகமாக இயங்கிவரும் இணையதளங்களில் பிரதிலிபி முக்கியமானது. இதில் பெண்களின் பங்களிப்பு அபரிமிதமாக இருக்கிறது. ஒரே நாவலில் லட்சம் வார்த்தைகளைக் கடந்தும் பெண்கள் தங்கள் கற்பனைச் சிறகை விரித்துப் பறந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆன்லைன் பி.ஒ.டி மூலம் தங்கள் நூல்களைச் சுயமாகப் பதிப்பித்தும் வருகிறார்கள்.
- எஸ். சுஜாதா