

தமிழ் மொழியின், பண்பாட்டின் தனிச் சொத்து கி.ராஜநாராயணன். எழுத்தாளர், கதைசொல்லி, நாட்டார் வழக்காற்றியலாளர் என எப்படியெப்படியோ சொல்லிப் பார்த்தாலும் இவை எவற்றுக்குள்ளும் அடக்கிவிட முடியாத ஓர் மாபெரும் ஆளுமை கி.ரா. கடிதம், கதைகள், வழக்குச் சொல்லகராதி, நாட்டார் கதைகள் எனத் தன் பலவிதமான செயல்பாடுகளால் தமிழுக்குப் பெருங்கொடை அளித்துள்ளார். கிரா தன் கதைகள் வழி ஒரு காலகட்டத்தை, மக்கள் பண்பாட்டைத் திருத்தமாகப் பதிவுசெய்துள்ளார்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கோவில்பட்டிக்கு ரயில் வந்தபோது மக்கள் மாட்டுவண்டியும் கெட்டுச் சோறும் கட்டிக்கொண்டு அதைப் பார்க்கப் போன சுவாரசியமான நிகழ்ச்சியை கிரா தன் நாவலில் சொல்லியுள்ளார். தமிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசு அமைந்த காலகட்டத்தில் மக்கள் இடப்பெயர்வையும் புதிய பண்பாட்டின் தொடக்கத்தையும் பதிவுசெய்துள்ளார். தன் சிறுகதைகள் வழி சாமானியர்களின் வாழ்க்கையை எளிய மொழியில் சொல்லியுள்ளார். கரிசல் நிலத்தின் தனித்துவத்தைப் போல எடக்கு அவரது கட்டுரை மொழியின் விசேஷமான அம்சம்.
கிராவின் இந்த மொத்த பங்களிப்பையும் கவிஞர் மீராவால் தொடங்கப்பட்ட அன்னம் பதிப்பகம் 9 தொகுதிகளாகத் தொகுத்து வெளியிட்டுள்ளது. நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள், தனிக் கட்டுரைகள், தொகுப்புக் கட்டுரைகள், தொடர் கட்டுரைகள், நாட்டுப்புறக் கதைகள் - இரண்டு தொகுதி, வழக்குச் சொல்லகராதி என ஒன்பது நூல்களை கெட்டி அட்டைப் பதிப்பாக வெளியிட்டுள்ளனர்.
கிராவின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையின் இந்த முழுத் தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ‘நாவல்கள், குறுநாவல்கள்’ தொகுப்பு நூலில் சாகித்ய அகாடமி விருது பெற்ற அவரது நாவலான ‘கோபல்லபுரத்து மக்கள்’, ‘கோபல்ல கிராமம்’, ‘அந்தமான் நாயக்கர்’, ‘பிஞ்சுகள்’, ‘வேதபுரத்தார்க்கு’ ஆகிய ஐந்து நாவல்களும் ‘கிடை’, ‘கரிசல் காட்டு சம்சாரி’, ‘இந்த இவள்’ ஆகிய குறுநாவல்களுடன் ‘அண்ட ரெண்ட பட்சி’ என்கிற இதுவரை அச்சில் வராத நாவலும் உள்ளது சிறப்புக்குரியது.
‘சிறுகதைகள்’ தொகுப்பில் அவரது 83 கதைகளைக் காலவரிசைப்படி தொகுத்துள்ளனர். ‘முரண்பாடுகள்’, ‘சொற்விளையாட்டு’ ஆகிய இரு நாடகங்களும் இதில் சேர்த்துத் தொகுக்கப்பட்டுள்ளன. ‘கட்டுரை தொடர்கள்’ தொகுப்பில் இதழ்களில் வெளிவந்த ‘கரிசல் காட்டுக் கடுதாசி’, ‘நிறைந்த ஐம்பது’, ‘கி.ரா. பக்கங்கள்’ ஆகிய தொடர்களுடன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளிவந்த ‘மண் மணம்’, ‘பெண் எனும் பெருங்கதை’ ஆகிய இரு தொடர்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
‘தொகுப்புக் கட்டுரை’களில் டி.கே.சி பற்றிய கட்டுரைகள், நண்பர்கள் குறித்த கட்டுரைகள், இசை பற்றிய கட்டுரைகள், அரசியல், இலக்கியம் குறித்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ‘தனிக் கட்டுரைகள்’ தொகுப்பில் மேலே குறிப்பிட்ட வகைக்குள் வராத தனிக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ‘நாட்டுப்புறக் கதைகள்’ இரு நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. கிரா எழுதிய கடிதங்கள் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. கரிசல் வட்டார வழக்குக்கான சொல்லகராதியாக இந்தத் தொகுப்பின் இறுதி நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இலக்கியம் சார்ந்தும் பண்பாட்டு ஆய்வுகள் சார்ந்தும் இயங்குபவர்களுக்கு இந்நூல் நல்ல பாடமாக இருக்கும். கிரா வாசகர்களுக்கோ இந்நூல்கள் இனியதோர் விருந்து.
- மண்குதிரை
கி.ரா முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
பதிப்புக் குழு: சி.மோகன், மாரீஸ், துரை.அறிவழகன், கதிர் மீரா
அன்னம் வெளியீடு, புத்தகக் காட்சி சலுகை விலை: ரூ.5,000 (அசல் விலை: ரூ.6,000), புத்தகக் காட்சி அரங்கு எண்: 313, 314