Published : 12 Jan 2023 06:51 AM
Last Updated : 12 Jan 2023 06:51 AM

விமானநிலைய மொழி சர்ச்சை: உண்மை நிலவரம் என்ன?

என்.தியாகராஜன்

விமானநிலையப் பாதுகாப்பில் சிஐஎஸ்எஃப் படையின் செயல்பாடுகள் குறித்து நிறைய கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கான பதில்களைத் தேடும் முயற்சியே இந்தக் கட்டுரை.

சிஐஎஸ்எஃப் எனப்படும் தொழிலகப் பாதுகாப்புப் படை (Central Industrial Security Force), ஏறத்தாழ 3,000 வீரர்களுடன் 1969இல் தொடங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்தியத் துணை ராணுவப் படைகளில் ஒன்றான சிஐஎஸ்எஃப், தற்போது 1,63,590 பணியாளர்களைக் கொண்ட, முதன்மையான பல திறன் கொண்ட அமைப்பாக வளர்ந்துள்ளது. தற்போது அணுமின் நிலையங்கள், விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட 353 நிறுவனங்களுக்கு இந்தப் படை பாதுகாப்பு வழங்குகிறது.

விமானநிலையப் பாதுகாப்பு: 1999இல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814 கடத்தப்பட்ட பிறகு, விமானநிலையப் பாதுகாப்பை சிஐஎஸ்எஃப் வசம் ஒப்படைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முன்வைத்த முன்மொழிவுக்கு, பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒப்புதல் அளித்தது.

இந்தக் காலகட்டத்தில்தான், அதாவது, 2000ஆம் ஆண்டில் முதன்முறையாக விமானநிலையப் பாதுகாப்பைக் கையாளும் பணி சிஐஎஸ்எஃப் வசம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் விமானநிலையங்களில் இந்தியாவின் பாதுகாப்பு மேலாண்மை பல மடங்கு மேம்பட்டுள்ளது என்றால் அதற்கான பெருமை சிஐஎஸ்எஃப் படையையே சேரும். இந்தப் படையுடன் சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் (பிசிஏஎஸ்), மாநில காவல் படைகள் மற்றும் பிற துறைகள் விமானநிலையங்களில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய ஒன்றாக இணைந்து செயல்பட்டுவருகின்றன.

நிதர்சன நிலவரம்: இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக விமானநிலைய சிஐஎஸ்எஃப் பாதுகாப்புக் காவலர்கள் பேசும் மொழி தொடர்பான புகார்களை அரசியல் தலைவர்களும், பிற ஆளுமைகளும் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்துவருகிறார்கள். இந்தப் புகார்கள் மொழி அரசியல் நோக்கம் கொண்டவை என்று ஒரு சாரார் கூறும் நிலையில், இதன் உண்மை நிலையை அறிவோம்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஆங்கிலமும் தமிழும் தெரிவதில்லை; இந்தியிலேயே பேசுகிறார்கள் என்பதுதான் இவர்களுடைய முக்கியக் குற்றச்சாட்டு. இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படும் பெரும்பாலான காவலர்கள், குறிப்பாக, உதவி துணை ஆய்வாளர் (ASl) மற்றும் துணை ஆய்வாளர் (Sl), பட்டப்படிப்பு முடித்தவர்கள். போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றுப் பணியில் சேர்ந்தவர்கள்.

அவர்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதில் ஐயமில்லை. மேலும், இந்தப் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு, விமானப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மேலாண்மை (Aviation Security and Safety Management - AVSEC) என்ற பயிற்சிப் பாடங்கள் கற்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத, தமிழைக் கற்காத காவலர்களால் தமிழில் பேச முடியாது என்பது இயல்பான உண்மை. எனினும், இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை மறுக்கவும் முடியாது. ஆக, வேற்று மாநில பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தமிழ் தெரியவில்லை என்றாலும், இந்தி அறியாத பயணிகளுடன் ஆங்கிலத்தில் நிச்சயமாக உரையாட முடியும்.

ஆங்கிலமும் இந்தியும் தெரியாத பயணிகள், தமிழ் தெரியாத பிற மாநிலப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் பேச முடியாமல் அவதிக்குள்ளாகிறார்கள் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. சிஐஎஸ்எஃப் பணியாளர் இடமாற்ற சுற்றறிக்கை 22/2017இன்படி, மாநிலத்தைச் சார்ந்த வீரர்களுக்கு 30%, தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு (Home Sector) 30%, மற்ற மாநிலத்தினருக்கு 40% எனப் பிரித்து இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றன. ஆகையால், தமிழ்நாட்டு விமானநிலையங்களில் 30% வீரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

பாதுகாப்பு முக்கியம்: விமானநிலையத்துக்கு வரும் பயணிகளிடம் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் இன்முகத்துடன் நடந்துகொள்வதில்லை எனும் குற்றச்சாட்டும் உண்டு. அவர்கள் விமான நிறுவனத்தைச் சேர்ந்த வரவேற்பாளர்கள் அல்ல; பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான கண்காணிப்புப் பணியில் இருப்பவர்கள் என்பதைப் பயணிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

சோதனையின்போது பயணிகளிடம் மிக முக்கியமான கேள்விகளைக் கேட்டுத் தெளிவு பெற வேண்டியதே அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பணி. அந்தப் பணியில் சிறு சறுக்கல் நேர்ந்தாலும், தீவிரவாதம் உள்ளிட்ட மிகப் பெரிய சதிச் செயல்கள் அரங்கேறிவிடும். இதை மனதில் கொண்டால், சிஐஎஸ்எஃப் கடமையே கண்ணாக நடந்துகொள்வதன் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

மாற்றம் அவசியம்: எந்த ஓர் அமைப்பிலும் மேம்பாடு என்பது கால, தேச, வர்த்தமானங்களுக்கு ஏற்றாற்போல் தேவைப்படுகிறது. சிஐஎஸ்எஃப் காவலர்கள் குறித்த விமர்சனங்களையும் குறைபாடுகளையும் பயணிகள் தெரிவிக்கும்போது, அது குறித்து விசாரித்து மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியம். சிஐஎஸ்எஃப் படையும் இதற்கு விதிவிலக்கல்ல!

சமீபத்தில் எழுந்த சர்ச்சைக்குப் பிறகு, சிஐஎஸ்எஃப் மக்கள்தொடர்பு அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசுவதற்கு முயன்றேன். எனினும், அவர்களுடன் பேசவே முடியவில்லை. ஒன்றரை லட்சத்துக்கும் மேலான வீரர்களைக் கொண்ட சிஐஎஸ்எஃப் அமைப்புக்கு டெல்லியில் இரண்டு மக்கள்தொடர்பு அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் குரலைத் தவிர பொதுமக்களின் குரல் சிஐஎஸ்எஃப் தரப்பை எட்டுவது கடினம் என்பது இதன் மூலம் தெரிகிறது.

மேலும், இத்தகைய புகார்கள், குற்றச்சாட்டுகள் எழும்போது சிஐஎஸ்எஃப் தாமாக முன்வந்து விளக்கம் அளிக்க வேண்டும். அத்துடன், மாநில மொழி தெரிந்த மக்கள்தொடர்பு அதிகாரிகளை அந்தந்த மாநில விமானநிலையங்களில் நியமிக்க வேண்டும். அப்போதுதான், பொதுமக்கள் அவர்களை எளிமையாகத் தொடர்புகொண்டு, தங்கள் குறைகளைப் பதிவுசெய்ய முடியும்,

மொத்தத்தில், பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய இடம் விமானநிலையம் என்பதைப் பயணிகளும், அவ்வப்போது எழும் விமர்சனங்களுக்கு முகங்கொடுத்து மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை சிஐஎஸ்எஃப் தரப்பும் உணர்ந்துகொள்ள வேண்டும். மதம், மொழி, இனம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்.

- என்.தியாகராஜன்
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x