

நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்தும், தீவிரமாகவும் இயங்கிவரும் எழுத்தாளர் இமையம். ‘செல்லாத பணம்’ நாவலுக்கு 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர். ‘கோவேறு கழுதைகள்’, ‘ஆறுமுகம்’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற நாவல்களை எழுதியுள்ளார். ‘தாலிமேல சத்தியம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு, இந்தப் புத்தகக் காட்சியில் வெளிவந்துள்ளது.
இந்தத் தொகுப்பில் உள்ள பத்துக் கதைகளுக்குப் பொதுவான அம்சம் என்று ஏதேனும் உள்ளதா?
இன்றைய தமிழ்ச் சமூகத்தில் என்னவெல்லாம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றனவோ அவற்றைப் பேசும் கதைகள் என்பதுதான் பொதுவான அம்சம். உதாரணமாக ‘தாலிமேல சத்தியம்’ என்பது கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது நடந்த விஷயம்தான். ‘கவர்மண்ட் பிணம்’ என்பது கரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் இறந்த ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட கதை.
சிறுகதை, நாவல் - என கதையின் வடிவத்தை எப்படித் தீர்மானிக்கிறீர்கள்?
கதையின் மையம்தான் அதைத் தீர்மானிக்கும். சில கதைகள் இன்னும் எழுது என்று கேட்கும்; சில கதைகள் இது போதும் என்று சொல்லிவிடும். அதனுடைய குரலைப் பின்தொடர்ந்து போவதுதான் என் வேலை. ‘பெத்தவன்’, ‘எங்கதெ’, ‘வாழ்க வாழ்க’ எல்லாம் சிறுகதையாக எழதத் தொடங்கி நாவலாக மாறியவை.
அனுபவங்களை, கேள்விப்படும் சம்பவங்களை எப்படிக் கதையாக மாற்றுகிறீர்கள்?
கதைகளுக்கான மையம் என்பது ஒரு தகவலாகவோ, காட்சியாகவோ, செய்தியாகவோ, சொற்களாகவோ வரும். அவற்றைப் பின்தொடர்ந்துபோகும்போது அவை இந்தச் சமூகத்துக்கு எவ்வளவு முக்கியமானது? இதை எழுதுவதன் மூலமாக நாம் இந்தச் சமூகத்துக்கு என்ன செய்யப் போகிறோம் என்பன போன்ற கேள்விகள்தான், கதையாக வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கின்றன. நாம் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான செய்திகளைக் கடக்கிறோம். என்னை வந்தடையும் செய்தியோ தகவலோ என்னைக் கோபமடைய வைக்கவேண்டும். அல்லது கண்ணீர் சிந்தவைக்க வேண்டும். அப்போதுதான் அது கதையாக மாறும்.
தமிழ்ச் சிறுகதை அடைந்துள்ள மாற்றங்கள்?
கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக எழுதிவருகிறேன். கதை சொல்லும் முறைகளில் கதையைக் கட்டமைக்கும் விதத்தில் எழுதப்படும் மொழியில் பல புதிய முயற்சிகள் வந்துள்ளன. இவை வெற்றியா, தோல்வியா என்பது முக்கியமல்ல. எல்லாமே முயற்சிகள்தான்.
ஆனால், அவற்றில் நிலைத்து நிற்கக்கூடிய கதைகள், காலத்தால் செத்துப்போன கதைகள் என்று உள்ளன. வாழ்க்கைதான் மிக முக்கியமான கருவி. மொழியும் மிக முக்கியமான கருவி. வாழ்க்கையும் மொழியும் ஒரு எழுத்தாளனுக்கு ஒன்றுகூடி வந்தால், அந்தக் கதை நிற்கும். வடிவத்துக்காகவோ ஒரு தத்துவத்துக்காகவோ மட்டுமே எழுதப்படும் கதைகள் தோற்றுப்போகும். மார்க்ஸியம், பெண்ணியம் போன்ற தத்துவங்களைப் பேசுவதற்காக எழுதுகிறவர்கள் முன்தீர்மானத்துடன் வருகிறார்கள்.
சமகால எழுத்துகளை வாசிக்கிறீர்களா?
வாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். நிறைய பேர் எழுத வந்திருக்கிறார்கள். ஆனால், கடந்த பத்திருபது ஆண்டுகளில் பெரியதாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர்கள் என்று யாரையாவது சொல்ல முடியுமா என்றால் எனக்குத் தெரியவில்லை. என்னுடைய ‘கோவேறு கழுதைகள்’, ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’, அசோகமித்திரனின் ‘தண்ணீர்’, ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’, தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’, பாமாவின் ‘கருக்கு’ என இதுதான் இவருடைய அடையாளம் என்று சொல்லும்படியான கதைகள் எழுதப்படுவதில்லை. சில எழுத்தாளர்களுக்குத் தமிழ் மொழிப் பயிற்சியே இல்லை.
உங்களுடைய அடுத்த படைப்பு?
‘நெஞ்சறுப்பு’ என்னும் நாவலை எழுதிவருகிறேன். அதில் ஒரு வரி உண்டு. ‘நெஞ்சால் நெய்த காதல் நெஞ்சறுக்குமா’. அறுக்கும் என்று சொல்கிறது இந்தக் கதை.
- சந்திப்பு: ச.கோபாலகிருஷ்ணன்
தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in