

சென்னைப் புத்தகக் காட்சியின் வரலாற்றில் முதல் முறையாக, பால்புதுமையினருக்கான தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ‘Queer Publishing House’ என்ற பெயரில் அரங்கு எண் 28 இல் இது அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பால்புதுமையினர் சமூகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பலரின் சுயசரிதை, சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைத் தொகுப்பு என 40க்கும் மேற்பட்ட நூல்கள் இந்த அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கிரேஸ் பானுவின் ‘திருநங்கை கிரேஸ் பானுவின் சிந்தனைகள்’, லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய ‘ஐ அம் வித்யா’, திருநம்பி அருண் கார்த்திக் எழுதிய ‘என்னிலிருந்து பார்’ கவிதைத் தொகுப்பு, திருநங்கை அஜிதாவின் ‘ஒரு களையின் கவிதைகள்’, திருநங்கை நேஹாவின் ‘RIP’, கிரீஷின் ‘விடுபட்டவை’ உள்ளிட்ட பல நூல்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பால்புதுமையினரின் ஆங்கில ஆக்கங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சென்னைப் புத்தகக் காட்சி வழங்கியுள்ள இந்த வாய்ப்பின் மூலம், பால்புதுமையினரின் எழுத்துகளைக் கவனப்படுத்தும் வகையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பால்புதுமையினரின் இலக்கியம் உருவாகவும் இது வழிவகுக்கும் என்பது அரங்கை நிர்வகிப்பவர்களின் கருத்து. இங்குள்ள நூல்கள் வழி, பால்புதுமையினரின் வாழ்க்கைப் போராட்டங்களையும் அனுபவங்களையும் வாசகர்கள் அறிந்துகொள்ள முடியும்.