

தமிழ் க்ரைம் நாவல் மன்னன் எனக் கொண்டாடப்படுபவர் ராஜேஷ்குமார். அவரது நாவல்களைப் படிக்காமல் வாசிப்புப் படிக்கட்டில் ஏற முடியாது. 1970களில் சிறுகதைகள் வழியாக எழுதத் தொடங்கியவர் ராஜேஷ்குமார். ‘வாடகைக்கு ஓர் உயிர்’ நாவல் வழி தமிழ்வாணன் பாணியில் தமிழ்க்ரைம் த்ரில்லர் வகைமையில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தார்.
தமிழ்வாணன் மறைந்த பிறகு அவர் இயங்கிய ‘கல்கண்டு’ இதழில் ராஜேஷ்குமார், ‘ஏழாவது டெஸ்ட் ட்யூப்’ என்கிற தனது முதல் தொடர்கதையைத் தொடங்கினார். 1,000க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். சாட்டிலைட் சானல்களும் ஸ்மார்ட்போனும் இல்லாத காலகட்டத்தில் ராஜேஷ்குமார் நாவல்கள் சக்கைப்போடு போட்டன. மாத நாவல்கள்; அதுவும் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இவரது நாவல்கள், ஸ்டாலுக்கு வரும்புத்தம் புது அச்சு வாசனைக்காகக் காத்திருந்த தீவிர வாசகர்கள் இவருக்கு உண்டு.
வாசிப்பு ஊடகத்தில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்திலும் ஒலிபுத்தகச் செயலிகளிலும் ராஜேஷ்குமார் தொடர்ந்து தீவிரமாக எழுதிவருகிறார். சமீபத்தில் பிஞ்ச் செயலியில் வெளிவந்த ‘நள்ளிரவில் செய்திகள் வாசிப்பது துர்கா’ என்ற நாவல் பல லட்சம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளது. அந்த நாவலை இரு தொகுதிகளாகத் தனது சொந்தப் பதிப்பகமான ஆர்.கே.பப்ளிஷிங் மூலம் இந்தப் புத்தகக் காட்சிக்குக் கொண்டுவந்துள்ளார். விலை முறையே ரூ.265, ரூ.285. இவை அல்லாமல் ராஜேஷ்குமார் குறுங்கதைகள் தொகுப்பும் கொண்டுவந்துள்ளனர். விலை ரூ.250.