

கே.நல்லதம்பி, தமிழ் - கன்னடம், கன்னடம் - தமிழ் மொழிபெயர்ப்பாளர். நேமிசந்த்ரா எழுதிய ‘யாத்வஷேம்’ நாவலை மொழிபெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். மொழிபெயர்ப்புக்காக ‘குவெம்பு பாஷா’ விருது, ‘ஸ்பாரோ’ மொழியாக்க விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
கவிதைகளை மொழிபெயர்ப்பது சவாலான காரியம். உங்கள் முதல் முயற்சியே கவிதை மொழிபெயர்ப்புதான் இல்லையா?
எனக்கு லங்கேஷ் கவிதைகளில் ஈடுபாடு உண்டு. சின்ன கிண்டல் உள்ள குறுங்கவிதைகள் அவை. அவற்றில் 400 குறுங்கவிதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தேன். தமிழ் மொழிபெயர்ப்பை வாசித்த பலரும் கவித்துவத்தை உணர முடிந்ததாகச் சொன்னார்கள்.
கன்னடம் - தமிழ், தமிழ் - கன்னடம் இந்த மொழிபெயர்ப்புச் செயல்பாட்டில் எது உங்களுக்கு எளிமையானது?
கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதுதான் எனக்கு எளிமையாக இருக்கிறது. நான் கர்நாடகத்தில் பிறந்து வாழ்ந்தாலும் சிறுவயதிலிருந்தே கன்னடம் கற்றிருந்தாலும் தமிழ்தான் என் சிந்தனை மொழியாக இருந்தது. அதுதானே என் தாய்மொழி!
தமிழ் வட்டார வழக்குச் சொற்களை எப்படி மொழிபெயர்க்கிறீர்கள்?
எனக்கு எல்லா கர்நாடக வட்டார வழக்கும் பரிச்சயம் இல்லை. மைசூருவில் வாழ்வதால் அந்த வட்டார வழக்கு மட்டும்தான் பரிச்சயம். அதனால், தமிழ் வட்டார வழக்குச் சொற்களை இந்த வட்டார வழக்குக்கு நிகராகவே மொழிபெயர்க்கிறேன்.
எப்படி மொழிபெயர்ப்புக்குப் படைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
முதலில் அந்தப் புத்தகம் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இரண்டாவது, நாம் மொழிபெயர்க்கவிருக்கும் நூல் மாதிரி ஒரு நூல் மொழிபெயர்க்கப்படும் மொழியில் இருக்கக் கூடாது. மூன்றாவது, ஏதாவது ஒரு சிறப்பம்சம் இருக்க வேண்டும்.
சமகாலக் கன்னட இலக்கியம் எப்படி இருக்கிறது?
அதற்குத் தனி இயல்புகள் உண்டு. தமிழில் பல போக்குகள் இருப்பது மாதிரி கன்னடத்தில் பலப் பல போக்குகள் இருக்கின்றன. என்ன போக்குகளில் எழுதினாலும் அந்தப் படைப்புகள் வழியே மனிதம் என்பதைத்தான் நான் பார்க்கிறேன்.
மொழிபெயர்ப்பதில் இருமொழிப் பின்னணி உங்களுக்கு இருக்கும் தனிச்சிறப்பு இல்லையா?
இருமொழிப் பண்பாடும் தெரிவதால் எனக்கு எளிதாக இருக்கிறது. உதாரணமாக, பெருமாள் முருகனின் ‘மாதொருபாக’னில் பொங்கலைப் படையலாக வைப்பது பற்றிய குறிப்பு வருகிறது. இதை அப்படியே நான் எழுத முடியாது. கன்னடர்களுக்கு, ‘பொங்கலைப் படையலாக வைத்தார்கள்’ என்றால் புரியாது. அவர்களுக்குக் காலையில் சிற்றுண்டிப் பொங்கல் மட்டும்தான் தெரியும். ஒரு சுவையான சம்பவம், ஒரு பொங்கலுக்கு என் நண்பனை அழைத்திருந்தேன்.
அவன் பொங்கல் எல்லாம் சாப்பிட்டு விடைபெறும்போது, “உங்க அம்மாவுக்குச் சோறு வடிக்கத் தெரியாதா? சோறு ரொம்பக் கொழஞ்சிருக்கு” எனக் குறைபட்டான். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “இது புத்தரிசிப் பொங்கல் சோறு. இது இப்படிச் செய்யறதுதான் சிறப்பே” என்று சொன்னேன். இந்தப் பின்னணியில்தான் பொங்கல் என்றால் என்ன, அதை எதற்காகப் படைக்கிறார்கள் என்று ஒரு அரைப் பக்கத்துக்குச் சின்ன குறிப்பு எழுதினேன். இதை வாசித்த வாசகர்கள் பலர் ‘ஓ! இதுதான் பொங்கலா? நாங்க என்னமோன்னு நெனச்சோம்’ என்றார்கள்.
இம்மாதிரி கன்னடம் - தமிழில் ஏதாவது உதாரணம்?
‘ஓடை’ நூலில் சமையல் குறிப்புகள் நிறைய இருக்கின்றன. உதாரணமாக, ‘ஜனக்கா’ என்ற ஒரு குழம்பு வகை இருக்கிறது. கடலை மாவைப் பயன்படுத்திச் செய்யும் குழம்பு இது. இது தமிழர்களுக்குப் புதிது. அதுபோல் ஊர்ப் பெயர்கள், குடும்பப் பெயர்கள், கதாபாத்திரங்களின் பெயர்கள் எல்லாம் குழப்பமாக இருக்கும். வாசகர்களுக்குத் தடங்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக இதையெல்லாம் விளக்கியிருக்கிறேன்.
தமிழ் நவீன இலக்கியம் பற்றி கர்நாடகத்தில் என்ன அபிப்ராயம்?
தமிழ் நவீன இலக்கியம் கர்நாடகத்தில் பெரியளவுக்கு அறிமுகமாகவில்லை. சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’யே என் மொழிபெயர்ப்பில் இப்போதுதான் கன்னடத்தில் வருகிறது. தி.ஜானகிராமன் கதை என் மொழிபெயர்ப்புக்கு முன்பு ஒன்றுகூட மொழிபெயர்க்கப்பட்டதில்லை. நவீனக் கன்னட எழுத்துகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அளவில் நவீனத் தமிழ் எழுத்துகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டதில்லை என்றே தோன்றுகிறது.
- சந்திப்பு: மண்குதிரை, தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in