

என் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம், ஐந்து மாதங்களுக்கு முன்னர், தாய்லாந்தில் யானைகள் சரணாலயத்தில் ஒரு நண்பகலில் நிகழ்ந்தது. அழகான, தனிமையான அந்த யானையைப் பார்த்தபோது, எனது பணிகளில் ஒன்றாக அந்தப் பூங்காவைச் சுத்தம் செய்துகொண்டிருந்தேன். அதன் முன்னங்கால் மிக மோசமாக உருக்குலைந்திருந்தது. அந்த யானை ஏன் தனிமையில் இருக்கிறது என்றும் அதன் உடல்நிலை குறித்தும் பூங்கா ஊழியரிடம் கேட்டேன்.
காபு எனும் அந்த யானைக்கு 26 வயதாகிறது, என்னைப் போலவே. சுமார் ஓராண்டுக்கு முன்னர் மீட்கப்பட்ட காபு, எந்த யானைக் கூட்டத்துடனும் இணைந்திருக்க விரும்பவில்லை. சட்ட விரோதமாக மரம் வெட்டும் கும்பலால், குட்டியாக இருந்ததி லிருந்தே மரங்களைச் சுமக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. அதிக எடை கொண்ட மரத் துண்டுகளை மலைச் சரிவுகளில் தூக்கிச் செல்லப் பணிக்கப்பட்ட யானை அது. வாதை நிறைந்த தருணம் ஒன்றில், மரத் துண்டு ஒன்று நழுவி அதன் மீது விழுந்ததில் அதன் முன்னங்கால் மோசமாக நொறுங்கியது. அதன் பின்னரும் தொடர்ந்து கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்பட்டதால், அதன் காயம் ஆறவே இல்லை. மீட்கப்பட்டபோது அது பலவீனமாக, அதிர்ச்சியடைந்த நிலையிலேயே இருந்தது. சரணாலயத்துக்கு அது கொண்டுவரப்பட்டபோது அதன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது என்றார் அந்த ஊழியர்.
அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பிய நான், பிற யானைகள் அருகில் நின்றதுபோலவே அதன் அருகே நின்றேன். ஆனால், அடுத்து நடந்த விஷயத்தை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எனது செயல்களைப் போலவே தானும் செய்ததுடன், என்னை நெருங்கி வந்தது. அருகில் நெருங்க நெருங்க, உறுதியான அதன் உடல் பலத்தை என் உடல் மீது உணர முடிந்தது. அது எனக்குப் பாதுகாப்பு உணர்ச்சியைக் கொடுத்தது. எனவே, அதைத் தழுவிக்கொள்வதுபோல் அதை இன்னும் ஒட்டி நின்றேன். அதை நெருங்கும்போது, கருமையான அதன் கண்களைப் பல முறை பார்த்தேன். அதன் துதிக்கையின் மேல் பகுதியைத் தடவிக் கொடுத்தேன். அது என்னைத் திரும்பிப் பார்த்ததும் அதிசயித்து நின்றேன். தன் வாழ்நாள் முழுவதும், சொல்ல முடியாத பயங்கரக் கொடுமைகளை அனுபவித்த அந்த விலங்கு, இன்னமும் ஒரு மனிதன் மீது நம்பிக்கை வைத்து, அவனிடம் அன்பைக் காட்ட விரும்பியது.
காபுவைப் போலவே, மீட்கப்பட்ட ஆசிய யானைகளுக்காக நடத்தப்படும் ‘எலிஃபன்ட் நேச்சர் பார்க்’ (இ.என்.பி.) சரணாலயம் அது. சுற்றுச்சூழல் ஆர்வலர் லேக் சாய்லெர்ட்டால் உருவாக்கப்பட்டது. வடக்குத் தாய்லாந்தின் மலைக் கிராமம் ஒன்றில் பிறந்தவர் சாய்லெர்ட். அவர் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு யானையுடன் சிறு வயதிலிருந்தே பழகியவர். துயரமான சூழலில் பல ஆசிய யானைகள் இருப்பதை நேரில் கண்ட அவர், அவற்றுக்குப் பாதுகாப்பான இடத்தை உருவாக்க நினைத்தார்.
ஆப்பிரிக்க யானைகளை விடவும் மிகவும் ஆபத்தான நிலையில் ஆசிய யானைகள் வாழ்கின்றன என்பது அவ்வளவாக அறியப் படாத உண்மை. கிட்டத்தட்ட 50,000 ஆசிய யானைகள்தான் மிச்சமிருக்கின்றன. தாய் லாந்தில் இருக்கும் சுமார் 6,000 யானைகளில் பாதிக்கும் மேற்பட்டவை அடைத்துவைக்கப் பட்டிருக்கின்றன. ‘அடக்கிவைத்தல்’ எனும் பெயரில் யானைகளைப் பிடித்து வளர்க்கும் பண்டைய மரபு, யானைகள் நலன் தொடர்பான பிரச்சினைகளை மட்டும் உருவாக்கவில்லை; வன விலங்குகளின் எண்ணிக்கை குறை வதற்கும் காரணமாக இருக்கிறது. இவற்றை யெல்லாம் விடக் கொடுமை, குட்டி யானையின் ஆன்மாவையே சிதைத்து, மனிதனின் கட்டுப் பாட்டில் இருக்க அதைக் கட்டாயப்படுத்துகின்ற வழக்கம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்வது தான்.
தென் கிழக்கு ஆசியாவின் சுற்றுலாத் துறையில் சவாரிக்காகப் பயன்படுத்தப்படும் யானைகள், தெருக்களில் அமைதியாக ஓவியம் வரையப் பழக்கப்பட்ட யானைகள்கூட இது போன்ற அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப் பட்டவைதான் என்று விலங்குகள் உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன. தாய் யானையிட மிருந்து பிரித்துவைக்கப்படும் குட்டிகள், நகரவோ, தரையில் படுக்கவோ முடியாத அளவுக்கு நெருக்கமாக உருவாக்கப்பட்ட மரத் தடுப்புகளில் வைக்கப்படும். பல வாரங்களுக்குத் தொடரும் இந்தக் கொடுமையின்போது, உணவு, குடிநீர், உறக்கம் எல்லாம் கடுமை யாகக் கட்டுப்படுத்தப்படும். குட்டிகளைக் காயப் படுத்துவதும் உண்டு.
யானைகள் உணர்வுபூர்வமான, மேம்பட்ட விலங்குகள். தங்கள் குடும்பத்துடன் நீண்ட உறவைக் கொண்டிருப்பவை. மிக அழகான இந்த விலங்குகளுடன் பழகியிருக்கும் யாராலும் அவற்றின் உணர்திறனையும், அறிவுத்திற னையும் சந்தேகிக்க முடியாது. அடக்கிவைத்துக் கொடுமைப்படுத்துவது அவற்றின் வாழ்வில் எத்தனை ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும். சில யானைகள் அடங்கிப் போய்விடுவதும் சில மனிதர்களிடம் மூர்க்கமாக நடந்துகொள்வதுண்டு. இரண்டுமே உளவியல்ரீதியான பாதிப்பின் விளைவுகள்தான்.
மழைக்காடுகளாலும், ஆறுகளாலும் சூழப்பட்ட ‘எலிஃபன்ட் நேச்சர் பார்க்’ சரணால யத்தைப் பொறுத்தவரை, மீட்டுக் கொண்டுவரப் பட்ட யானைகள் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம். எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. தங்கள் வாழ்வை அமைதி யாக, சந்தோஷமாக, களிப்புடன் வாழலாம். இங்கிருக்கும் யானைகள் புதிய குடும்ப உறவுகளை ஏற்படுத்திக்கொள்கின்றன. சில யானைகள் குட்டி போட்டிருக்கின்றன. புரவலர்களின் உதவிகள், சுற்றுலா ஆகிய வற்றின் மூலம் இந்தச் சரணாலயத்துக்கு வருமானம் கிடைக்கிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரு நாள் தங்கலாம்; தன்னார்வலர்கள் இரண்டு வாரங்கள் வரை தங்க முடியும் நான் அப்படித்தான் அங்கு தங்கினேன்.
சரி, நான் இங்கு எப்படி வந்தேன்? அது ஒரு சோகக் கதை. குழந்தைப் பருவத்திலிருந்து பல அவமதிப்புகளை எதிர்கொண்ட நான் 13 வயதாவதற்கு முன்பிருந்தே என்னை நானே காயப்படுத்திக்கொள்ளத் தொடங்கிவிட்டேன். என்னைக் காயப்படுத்திக்கொள்வதன் மூலம் அந்த எண்ணங்கள் நீங்கிவிடும் என்று ஒரு நினைப்பு. ஒரு நாள் என்னுடைய பிரச்சினைக்கு வேறு வகையான தீர்வுகளும் இருக்கலாம் என்று உணர்ந்த பின்னர்தான் இங்கு வந்து சேர்ந்தேன். யானைகளைக் குளிப்பாட்டுவது, அவற்றுக்கான உணவைத் தயாரிப்பது, மருத்துவரிடம் அவற்றை அழைத்துச் செல்வது என்று பல்வேறு பணிகள் இங்கு எனக்குத் தரப்பட்டன. பூங்காவைச் சுத்தம் செய்வது, மரக்கன்றுகள் நடுவது போன்ற பணிகளும்!
அந்தச் சரணாலயத்திலிருந்து புதிய உணர்வுகளுடன், எனது வலிகளை எதிர்கொள்ளும் நம்பிக்கையுடன், என்னை நானே காயப்படுத்திக் கொள்ளும் பழக்கத்தை விட்டுவிட முடியும் எனும் நம்பிக்கையுடன் திரும்பினேன். காபு எனது உத்வேகத்தின் ஊற்றாக இன்னமும் இருக்கிறது. வாழ்நாள் முழுதும் வதைகளை அனுபவித்தும் நம்பிக்கையை இழக்காமல் ஒரு யானையால் இருக்க முடியும் என்றால், எனது வலிகளிலிருந்து மீண்டு வர வழியில்லை என்று என்னால் எப்படிச் சொல்ல முடியும்!
© ‘தி கார்டியன்’ | தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்