

மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் ‘பாரதி நினைவு நூற்றாண்டு மலர்’ தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. பாரதி இயல் அறிஞர்களின் கட்டுரைகள், பாரதியின் சமகாலத்தவர்களின் கட்டுரைகள் என இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, மு.கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் கட்டுரைகளும் தொகுப்புக்குச் சிறப்புச் சேர்க்கின்றன. மூத்த பாரதி ஆய்வாளர் சீனி விசுவநாதனின் கட்டுரை தொகுக்கப்பட்டதன் மூலம் அவருக்கு இந்நூல் சிறப்புச் செய்துள்ளது. தொ.மு.சி.ரகுநாதன், ஆ.இரா.வேங்கடாசலபதி, ய.மணிகண்டன், பழ.அதியமான், பாரதி கிருஷ்ணகுமார், கடற்கரய் மத்தவிலாச அங்கதம், பாரதி பாஸ்கர் உள்ளிட்ட ஆளுமைகளின் கட்டுரைகளும் இதில் கவனத்துடன் தொகுக்கப்பட்டுள்ளன.
பாரதி 100 நினைவு நூற்றாண்டு மலர்
ஆசிரியர்: வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப.
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியீடு.
****
விடுதலைப் போராட்ட வீரரான வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது. வ.உ.சி. என்னும் ஆளுமையைப் பறைசாற்றும் விதமாக அரிய தகவல்கள் இதில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. வ.உ.சி. இயல் குறித்துக் கவனம் கொள்ளத்தக்க ஆய்வுகளைச் செய்த அறிஞர்கள் பலரின் கட்டுரைகள் இந்தத் தொகுப்புக்குச் சிறப்பு சேர்க்கின்றன.
பேராசிரியர்கள் வீ.அரசு, ஆ.சிவசுப்பிரமணியன், ஆ.இரா.வேங்கடாசலபதி, ஆகியோரின் கட்டுரைகள் அந்த வகையில் குறிப்பிடத்தகுந்தவை. இவை அல்லாமல் ப.திருமாவேலன், ரெங்கையா முருகன் உள்ளிட்டவர்களின் கட்டுரைகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. சுதந்திரப் போராட்ட வீரர் என்பதைத் தாண்டி, அவரின் பன் முகத்தைத் தெரிந்துகொள்ள இந்நூல் உதவும்.
வ.உ.சி. 150 மலர்
ஆசிரியர்: வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப.
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியீடு.
****
சிறப்பு
உலகப் புகழ்பெற்ற அமெரிக்கக் கவிதாயினியான எமிலி டிக்கின்சனின் கவிதைகள் செவ்வியல் தனிமையைப் பாடுபொருளாகக் கொண்டவை. தமிழில் டிக்கின்சனின் கவிதைகள் தாக்கத்தை விளைவித்துள்ளன. இவரது கவிதைகளை எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான அனுராதா ஆனந்த் இந்தத் தொகுப்பில் செறிவுடன் மொழிபெயர்த்துள்ளார். டிக்கின்சனின் 46 கவிதைகளை அனுராதா தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளார். கவிதை வாசகர்கள் வாசித்துப் பார்க்க வேண்டிய தொகுப்பு.
எமிலி டிக்கின்சன் (தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்)
தேர்வும்
மொழிபெயர்ப்பும்:
அனுராதா ஆனந்த்
சால்ட் பதிப்பகம்
விலை: ரூ.130
****
செம்மை
சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் இமையத்தின் 10 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. வேட்பாளரிடம் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கிறார் இமையத்தின் கதாநாயகி அலமேலு. அந்த வேட்பாளர் தோற்றுவிடுவதால் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கிறார். இந்தப் பின்னணியில் தலைப்புக் கதை செல்கிறது. வெளிவந்தபோதே கவனம் பெற்ற இதுபோன்ற கதைகள் கொண்ட தொகுப்பு இது.
தாலிமேல சத்தியம்
இமையம்
க்ரியா பதிப்பகம்
விலை: ரூ.325
****
ஆஹா..!
சென்னை நந்தனத்தில் நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியில் தமிழக சிறைத் துறை தனி அரங்கை (அரங்கு எண் 286) அமைத்துள்ளது. இந்த அரங்கில் வாசகர்கள் புத்தகங்களைத் தானமாக அளிக்கலாம். அவை சிறை நூலகத்தில்
சேர்க்கப்பட உள்ளது.
****
கங்கை நதியும் கங்கா தேவியும்
குடவாயில் பாலசுப்ரமணியன்
அன்னம் அகரம் வெளியீடு
விலை: ரூ.190
ஆஷ் படுகொலை
புனைவும் வரலாறும்
மருத்துவர் நா.ஜெயராமன்
விடியல் பதிப்பகம், விலை: ரூ.250
நெருங்கிவரும் இடியோசை
பிபூதிபூஷண் பந்தோபாத்யாயா
தமிழில்: சேதுபதி அருணாச்சலம்
சுவாசம் பதிப்பகம், விலை: ரூ.220
யுகபாரதி கவிதைகள் (முழுத் தொகுப்பு)
நேர் நிறை பதிப்பகம், விலை: ரூ.750
பொருள்கோள் ஓர் அறிமுகம்
க.பூரணச்சந்திரன்
அடையாளம் பதிப்பகம், விலை: ரூ.140
| இந்த சிறப்புப் பக்கத்தில் வெளியிடப்படும் புத்தகங்கள் குறித்த குறிப்புகள் ‘இந்து தமிழ் திசை’க்கு அனுப்பப்பட்ட புத்தகங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை ‘சென்னை புத்தகக் காட்சி-2023’ எனக் குறிப்பிட்டு ‘இந்து தமிழ் திசை, 124, கஸ்தூரி மையம், வாலாஜா சாலை, சென்னை 600002’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும். |