

தமிழில் ஒரு புத்தகத்தின் 600 பிரதிகள் விற்பனை ஆனாலே மிகப் பெரிய விஷயம் எனப் பரபரப்பாகப் பேசப்படுவது உண்டு. இந்தச் சூழலில், ஒரு புத்தகத்தின் நான்கு லட்சம் பிரதிகளை விற்று முன்னுதாரணம் ஆகியிருக்கிறது நன்செய் பதிப்பகம். 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பதிப்பகம், பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புத்தகத்தின் வழி இந்தச் சாதனையைச் செய்திருக்கிறது.
சமூக நூல்களை வெளியிடும் எண்ணத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பதிப்பகம், இதுவரை 50க்கும் மேற்பட்ட விலையடக்கப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது. ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகம் முதலில் 48 பக்கங்களில் ரூ.10க்கு வெளியிட்டது நன்செய். இந்தப் புத்தகத்திற்குக் கிடைத்த மிகப் பெரும் ஆதரவால், மூன்றே மாதங்களில் லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்தன.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடந்த காலகட்டத்தில்தான் புத்தகம் சமூகத்துக்குத் தேவை எனக் கருதி, இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்ததாக அதன் பதிப்பாளர் தம்பி சொல்கிறார். இப்போது இந்தப் புத்தகம் ரூ.20க்கு விற்பனையில் உள்ளது. இந்த வரிசையில் அம்பேத்கரின் ‘சாதியை அழித்தொழிக்கும் வழி’ புத்தகத்தை ரூ.20க்கு வெளியிட்டுள்ளனர்.
பேராசிரியர் வீ.அரசு தொகுத்த புதுமைப்பித்தன் கதைகளையும் ‘சீர் வாசகர் வட்டம்’ என்ற பெயரில் விலையடக்கப் பதிப்பாகப் பதிப்பித்துள்ளனர். 102 கதைகள் அடங்கிய இந்தப் புத்தகத்தை ரூ.150க்குத் தருகிறார்கள். இந்த வரிசையில் மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ (மொழிபெயர்ப்பு: தொ.மு.சி.ரகுநாதன்) நாவலை விலையடக்கப் பதிப்பாக ரூ.150க்கு இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டிப் பதிப்பித்துள்ளனர். நன்செய் பதிப்பகம், சீர் வாசகர் வட்டம் நூல்கள் சென்னைப் புத்தகக் காட்சியில் அரங்கு எண்கள் 158 - 159இல் கிடைக்கும்.
புதுமைப்பித்தன் கதைகளை விலையடக்கப் பதிப்பாகக் கொண்டுவர வேண்டும் என்றால், அதிகமான அளவு அச்சிட வேண்டிய தேவை இருக்கிறது. குறைந்தது 5 ஆயிரம் பிரதிகள் அச்சிட வேண்டும் என்பதால், அதை ‘க்ரவுட் ஃபண்டிங்’காகத் திரட்டிப் பதிப்பித்துள்ளனர். இதற்கும் நல்ல வரவேற்பு. திட்டமிட்டபடி பிரதிகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
சமூகத்துக்குத் தேவையான கருத்துகளையும் படைப்புகளையும் விலையடக்கப் பதிப்புகளாகக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு மக்கள் மத்தியிலும் வரவேற்பு இருக்கிறது என்பதை இந்த விற்பனை மூலம் அறிந்துகொள்ள முடியும்.