

டி.கே. பட்டேல் ஒரு பொருளாதார வல்லுநர். ஹாங்காங்கின் சர்வதேச வங்கி ஒன்றில் உயர் பதவி வகித்தவர். குஜராத்தி. மனைவி நித்தி பட்டேல் ஹாங்காங் கின் பாரம்பரியம் மிக்க பள்ளி ஒன்றில் ஆங்கிலம் படிப்பித்தார். இருவரும் ஓய்வுபெற்றுவிட்டார்கள். பட்டேல் இந்துஸ்தானி, கர்னாடக இசையில் ஈடுபாடு மிக்கவர். ரசிகர். புத்தகப் பிரியர். மனைவி நித்தி பட்டேலுக்குத் தோட்டக் கலையிலும் மொழியியலிலும் ஆர்வம் அதிகம். தம்பதியினர் ஹாங்காங்கின் எழிலான பகுதிகளில் ஒன்றான ஸ்டப்ஸ் சாலையில் வசிக்கிறார்கள். இரண்டு மகள்கள். நல்ல நிலையில் இருக்கிறார்கள். வாழ்க்கையின் மாலைப் பொழுதை ஓய்வாக அனுபவிக்க இதைவிட நல்ல பின்புலம் வேண்டுமா என்ன? ஆனால், பட்டேலின் மனம் ஓய்வெடுக்கச் சம்மதிக்கவில்லை.
பட்டேல் தனது நண்பர்களோடு சேர்ந்து 'ஹெல்ப் த பிளைண்ட் ஃபவுண்டேஷன்' எனும் சேவை நிறுவனத்தை நடத்திவருகிறார். பட்டேலின் நிறுவனம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், பார்வையற்ற மாணவர்களின் கல்லுரிப் படிப்புக்கு உதவித்தொகை வழங்கிவருகிறது. பார்வையற்ற மாணவர்கள் பயிலும் சிறப்புப் பள்ளிகளுக்கு நவீனக் கட்டிடங்களும் கட்டித் தருகிறது.
இரண்டு குஜராத்திகள்
தமிழ் மண், இரண்டு குஜராத்தி களின் வாழ்க்கைப் பாதையை மாற்றிப் போட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்கா விலிருந்து தாயகம் திரும்பிய மோகன்தாஸ் காந்தி, இந்தியாவின் நிலையைப் புரிந்துகொள்வதற்காக நாடு முழுவதும் ரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தார். 1921-ம் ஆண்டு மதுரையில் விவசாயிகளின் நிலையைக் கண்டு மனம் வருந்தினார். அந்த எளிய விவசாயிகளைப் போலவே உடுத்தத் தொடங்கினார். நான்கு முழ வேட்டியும் ஒரு மேல் துண்டுமே அவரது ஆடையானது. ஆங்கிலேயர்களின் 'அரை நிர்வாணப் பக்கிரி' போன்ற கேலிப் பேச்சுகள் அவரைத் தீண்டவில்லை. அந்த அரையாடையே மகாத்மாவின் அடையாளமானது.
அந்தச் சம்பவம் நிகழ்ந்து 82 ஆண்டு களுக்குப் பிறகு, 2003-ம் ஆண்டு இன்னொரு குஜராத்தி - டி.கே.பட்டேல் - ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள ஹாங்காங் கிலிருந்து சென்னை வந்திருந்தார். அடையாறு காந்தி நகரில் காலை நேரம் நடைப் பயிற்சி மேற்கொண்டார். புனித லூயி பார்வையற்றோர் - காது கேளாதோர் பள்ளியைக் கடந்தபோது, அதன் விடுதிக் கட்டிடம் சிதிலமடைந்திருப்பதைக் கண்டார். பச்சாதாபத்தோடு அந்த இடத்தைக் கடந்துபோக அவரால் முடியவில்லை. தம் சொந்தச் செலவில் பள்ளிக்கு வகுப்பறைகளும் விடுதிகளும் கட்டிக் கொடுத்தார் பட்டேல். இதற்குப் பிறகு, அவரது வாழ்க்கை பார்வையற்றவர்களின் நலனோடு பின்னிப் பிணைந்துவிட்டது.
இந்தியாவில் பார்வையற்றவர்கள்
பார்வையற்றவர்களுக்கு இந்தியாவில் என்னவிதமான வசதிகள் உள்ளன? இப்போது இந்தியாவின் பெருநகரங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் சர்வதேசத் தரத்தில் கட்டப்படுகின்றன. பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்காகத் தரைகளில் பிரத்யேகமான ஓடுகள் பதிக்கப்படுகின்றன. அவர்கள் இந்த ஓடுகளைத் தங்கள் கோல்களால் தட்டி உணர்ந்துகொள்ள முடியும். இவை பாதைகளையும் திருப்பங்களையும் அவர்களுக்குப் புலப்படுத்தும். கட்டணக் கதவுகள், மின் தூக்கி, மின் ஏணி, நடைமேடை என்று எல்லா இடங்களுக்கும் அவர்களை இட்டுச் செல்லும். ஆனால், இந்த வசதிகள் மெட்ரோ நிலையத்தின் வாயிற்படிகளோடு முடிவுக்கு வந்துவிடுகின்றன. வெளியே வந்தால், அவர்களுக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது. நமது சாலைகள், போக்குவரத்துச் சாதனங்கள், கட்டிடங்கள் எவையும் ஊனமுற்றோரை மனதில்கொண்டு வடிவமைக்கப்பட்டவை அல்ல.
ஆனால், வளர்ந்த நாடுகளில் பார்வை யற்றவர்களால் சுயமாக இயங்க முடியும். பொது இடங்களில் உள்ள வரைபடங்கள் பிரெயிலி முறையிலும் அமைந்திருக்கும். நடைபாதைத் திருப்பங்கள் தோறும் மேலே சொன்ன தட்டை ஓடுகள் பதித்திருக்கும். சாலையைக் கடக்க வேண்டிய மஞ்சள் கோட்டுப் பாதைகளில் சிவப்பு விளக்கு எரியும்போது ஒரு ஒலியும், மஞ்சள் - பச்சை விளக்குகள் எரியும்போது வெவ்வேறு விதமான ஒலியும் கேட்கும். பார்வையற்றவருக்கான சமிக்ஞை வெளிச்சத்தில் இல்லை, ஒலியில் இருக்கிறது. அதனால், அவர்கள் பயன்படுத்தும் கணினிகள், திரையில் தோன்றும் எழுத்துக்களை வாசித்து அவர்கள் காதுகளில் சொல்லும். கணினியின் விசைப்பலகையைப் பார்வையுள்ளவர்களைக் காட்டிலும் அவர்களால் விரைவாகப் பயன்படுத்த முடியும். தாங்கள் வசிக்கும் நாடுகளில் பார்வை யற்றவர்கள் மற்றவர்களுக்குச் சமமாக வாழ்வதைப் பார்க்கும் வெளிநாட்டு இந்தியர்கள், தாய்நாட்டில் எதிர்கொள்ளும் 'குருட்டுக் கபோதி ஐயா' என்கிற ஓலத்தை எவ்விதம் எதிர்கொள்கிறார்கள்? சிலர் முகஞ்சுளித்துக் கடந்துபோகிறார்கள். சிலர் அவர்களது திருவோடுகளில் பிச்சையிடுகிறார்கள். சிலர் அடுத்த வேளை உணவு வழங்குகிறார்கள்.
பட்டேல் இதைத் தாண்டிச் சிந்தித்தார். பார்வையற்றவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கக் கல்வி அவசியம் என்பது பட்டேலின் கருத்து. அப்படியான கல்விக் கண்களைப் பார்வையற்றவர்களுக்கு வழங்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது பட்டேலின் நிறுவனம்.
கட்டிடங்கள்
சென்னை புனித லூயி பள்ளிக்கு பட்டேல் வழங்கிய விடுதியும் வகுப்பறைகளும் 2005-ல் பயன்பாட்டுக்கு வந்தது. அடுத்து 2012-ல் மதுரை சுந்தரராஜன்பட்டி பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகளும் நூலகமும் மாணவியர் விடுதியும் கட்டித் தந்தது பட்டேலின் நிறுவனம். தொடர்ந்து 2015-ல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சூசை நகரில் அமைந்துள்ள அமல ராக்கினி பார்வையற்றோர் பள்ளிக்கு மாணவியர் விடுதியும் விளையாட்டுத் திடலும் வழங்கியது.
உதவித்தொகை
பார்வையற்ற மாணவர்களின் பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டித் தருவதோடு நிறுவனம் இன்னொரு முக்கியமான பணியைச் செய்துவருகிறது. அது பார்வையற்ற மாண வர்களின் கல்லூரிப் படிப்புக்கு உதவுவது.
இந்தியாவில் பார்வையற்ற பிள்ளைகள் பலரும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். ஏழ்மையும் அறியாமையும் மிக்க குடும்பங்களில் பிறந்தவர்கள். இவர்களின் பெற்றோர்கள் பார்வைக் குறைபாட்டைத் தெய்வ குற்றமாகக் கருதி, மன உளைச்சலில் வாழ்பவர்கள். இவர்களில் கணிசமானோர் பள்ளிப் படிப்போடு நின்றுவிடுகிறார்கள். நகரங்களில் இருக்கும் கல்லூரிகளின் விடுதிக் கட்டணங்களைப் பலராலும் கட்ட முடிவதில்லை. அதனால், பட்டேலின் நிறுவனம் கல்லூரிகளில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கிவருகிறது. ஒரு மாணவருக்கு ஆண்டொன்றுக்குச் சராசரியாக ரூ.25,000 வழங்கப்படுகிறது.
2008-ல் சென்னையில் தொடங்கப்பட்டு, பின் பல்வேறு தமிழக நகரங்களுக்கு விரிந்த இத்திட்டம், தற்போது தமிழகத்தின் எல்லையைத் தாண்டி டெல்லி, மும்பை, நாசிக், நாக்பூர், புணே, வடோதாரா, கான்பூர், காசி, விஜயவாடா, பெங்களூர், மைசூர் முதலான நகரங்களுக்கும் விரிந்திருக்கிறது. இதுவரை இந்தத் திட்டத்தின்கீழ் 367 மாணவர்கள் பட்டம் பெற்றிருக்கிறார்கள். நடப்புக் கல்வியாண்டில் 1,043 மாணவர்கள் உதவி பெற்றுவருகிறார்கள். கல்லூரியில் இளங்கலை பயிலும் பார்வையற்ற மாணவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளை சென்னையிலிருந்து ஒருங்கிணைப்பவர், நிறுவனத்தின் அறங்காவலர் ஜே.வி.ரமணி (மின்னஞ்சல்: ramani@helptheblindfoundation.org, தொலைபேசி: + 91-9003330197).
கல்வி பெற்றவர்களே கண்ணுடையவர்கள் என்கிறார் வள்ளுவர். பட்டேலுக்கும் அவரது நிறுவனத்துக்கும் அதுவே வேத வாக்கு. பார்வையற்றவர்களுக்குக் கல்வி வழங்குபவர்கள், அவர்களுக்குக் கண்களை வழங்குகிறார்கள், அவர்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறார்கள். அந்தப் பணியைப் பட்டேலின் நிறுவனமும் ஆரவாரமின்றிச் செய்துகொண்டிருக்கிறது.
- மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com