

ஒளிர்ந்துகொண்டிருந்த இலங்கை இருளில் மூழ்கிப் பல மாதங்களாகின்றன. இலங்கும் நாடு என்பதால் ‘இலங்கை’ எனப் பெயர் கொண்ட இலங்கைத் தீவில் இப்போது ஒளி இல்லை. நாற்புறமும் நீரால் சூழப்பட்ட இலங்கை நாடு, இப்போது கடன்களால் சூழப்பட்ட நாடாக, பசியால் சூழப்பட்ட நாடாக அறியப்படுகிறது. நீந்திக் கடந்தாவது இத்தீவைவிட்டுச் சென்றுவிட வேண்டும் என்கிற விரக்தி நிலைக்கு இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதிகரிக்கும் நெருக்கடி: இலங்கையில் தமிழர் தேசம், சிங்கள தேசம் என்ற இரண்டு தேசங்கள் அங்கீகரிக்கப்படுமானால் அதுவே இலங்கைத் தீவின் பலமும் வளமுமாகும் என்று போராளிகள் நம்பினார்கள். முள்ளிவாய்க்கால் யுத்த முடிவில், தமிழர் தரப்பிடமிருந்து வடக்கு கிழக்கைப் பெற்று இலங்கையுடன் இணைத்துக்கொண்டதாக, அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச பெருமைப்பட்டார். ஆனால், இன்று தங்கள் பகுதிகளைவிட்டே சிங்கள மக்கள் புலம்பெயர்கின்றனர். எங்களிடமிருந்து நாட்டைப் பறிக்க வேண்டும் என நினைத்தார்கள். இறுதியில் அவர்களும் வாழ முடியாத நிலை உருவாகிவிட்டது.
புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றபோதும், பொருள்களின் விலை உயர்வு கூடிக்கொண்டே இருக்கிறது. தொடர்ச்சியாக மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்படுகின்றன. அரசை நடத்த முடியாத நிலையில், வரியைப் பன்மடங்கு அரசு அதிகரித்துவருவதால், பொருள்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. அத்துடன் இலங்கையில் இதுவரையில் தனிநபர் வருமான வரி அறவிடப்படாத (வசூலிக்கப்படாத) நிலையில், இப்போது அதனையும் நடைமுறைப்படுத்தியுள்ளார் அதிபர்.
நாள்கூலி வேலைகளுக்குச் செல்லும் மக்களால் வாழ்க்கையை முழுமையாகச் சமாளிக்க முடியவில்லை. ஒரு கிலோ மீன் ரூ.2,500 வரையில் விற்கப்பட்டால் ஏழை எளிய மக்களால் எப்படி இலங்கையில் வாழ முடியும்? அரசு அலுவலர்கள், நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரர்கள் என்று எவரும் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் எனப் பலரும் இலங்கையைவிட்டு வெளியேறிவருகின்றனர்.
கொழும்புவில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களிலும் நாட்டின் பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் மக்கள் நிறைகின்றனர். சட்டவிரோதக் கடற்பயணங்களும் இலங்கையில் அதிகரிக்க, பொருளாதார நெருக்கடியே காரணம். இதில் அதிகமாகச் செல்வது சிங்களர்கள்தான். போர் வெற்றி பற்றிச் சில ஆண்டுகள் பெருமை பேசிக்கொண்டாலும் இலங்கைக்குக் கடந்த சில ஆண்டுகளாக, அடுத்தடுத்து சோதனைகளும் துயரங்களும்தான் வந்துகொண்டிருக்கின்றன.
தகிக்கும் கண்ணீர்: வடக்கு கிழக்கில் உள்ள வீதியோரங்களில் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தினமும் மண்ணில் அழுது புரள்கின்றனர். ‘போரில் கையளிக்கப்பட்ட என் பிள்ளையைத் தாருங்கள்’ என்று போராடுகிற தாய்மார்களின் நிலமாகவும், ‘போரில் கொல்லப்பட்ட என் தாய், தந்தையருக்கான நீதியைத் தாருங்கள்’ என்று போராடுகிற குழந்தைகளின் நிலமாகவும் இருக்கிறது ஈழம். மகிந்த ராஜபக்ச, மைத்திரிபாலா சிறிசேனா, கோத்தபய ராஜபக்ச... இப்போது ரணில் விக்கிரமசிங்கே எவரும் இந்தக் குரல்களுக்குச் செவிசாய்க்கவில்லை.
கோத்தபய ஆட்சிக் கலைப்பு நடந்த நாட்களில், ஒரு கட்டிடத்தைத் திறந்துவைக்க வந்த மகிந்த ராஜபக்ச மக்களின் எதிர்ப்பு தாங்காமல் தப்பிச் சென்றார். ஈழத் தாய்மார் மண்ணை வாரித் திட்ட அந்த மண்ணுக்குள் ராஜபக்ச மறைந்தோடினார். ‘எங்கள் வயிறுகள் எரிந்துகொண்டிருக்கிற வரையில் நீங்கள் நிம்மதியாக ஆட்சிபுரிய முடியாது’ என்று நொந்து துடித்துச் சொல்கிற ஈழத் தாய்மார்களின் வார்த்தைகள்தான் இலங்கைத் தீவை உலுப்பிக்கொண்டிருக்கின்றனவா? போரில் விதைத்த வினைகளை இலங்கை அரசு அறுவடை செய்துகொண்டிருக்கிறதா? போரில் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வேண்டும்.
அரசிடம் வழங்கிய எங்கள் பிள்ளைகளை மீளத் தர வேண்டும். எம் மண்ணில் நாம் நாமாக வாழ வேண்டும் - இப்படி முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஈழ நிலம் நெருப்போடு தகித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில்தான் இலங்கைப் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அடிப்படையாக, முதலில் இனப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பன்னாட்டுச் சமூகம் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவும் தமிழர்களுக்குத் தீர்வை வழங்க வேண்டும் என்பதை இலங்கை அரசிடத்தில் நிர்ப்பந்தித்தே வருகிறது.
நிதி உதவியின் நிதர்சனம்: இலங்கைக்கு நான்கு ஆண்டு காலத்துக்கு 2.9 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) இணக்கம் தெரிவித்தபோதும், உதவி கிடைப்பதில் இழுபறி நிலையே இன்னும் தொடர்கிறது. ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணுதலை ஐஎம்எஃப் நிபந்தனையாக வைக்கவில்லை.
ஆனால், முழு இலங்கையிலும் நல்லிணக்கம் ஏற்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மாத்திரம் கூறுகிறது. அத்துடன் மின்சார சபை, லங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றை நாடாளுமன்றச் சட்டம் வாயிலாகத் தனியார்மயப்படுத்த வேண்டும் என்று நாணய நிதியம் கடுமையான நிபந்தனை விதித்திருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்க புதிய அதிபராகப் பதவி ஏற்றதும் ஐஎம்எஃப் ஆதரவு எப்படியாவது கிடைத்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் இலங்கையில் இன்னமும் வலுவான ஆட்சி ஏற்படாமையினால்தான் ஐஎம்எஃப் கடனுதவியை வழங்காமல் இழுத்தடிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
அதேவேளை சுமார் 60 பில்லியன் டாலர் கடனுள்ள நாடு வெறும் 2.9 பில்லியன் நிதியைப் பெற்று நெருக்கடியைச் சமாளிக்க முடியுமா? அதுவும் நீண்ட காலத்தில் பகுதி பகுதியாகக் கட்டமைப்பு மாற்றங்களுக்காக மாத்திரமே நிதி உதவி வழங்கப்படும். அப்படிப் பார்த்தால் ஐஎம்எஃப் வழங்கும் நிதி உதவி இலங்கை நெருக்கடிக்குத் தீர்வைத் தராது.
வாக்குறுதி நிறைவேறுமா?: ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்டவை தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண்பதன் ஊடாகவே இலங்கை வலுவான நிலைக்குத் திரும்ப முடியும் என்பதை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், அண்மையில் அதிபர் ரணில் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் மிக முக்கியத் தரப்புக்களாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், சம்பந்தன் உள்ளிட்ட தமிழர் தலைவர்களும் கலந்துகொண்டனர். ஜனவரி 31க்குள் அடுத்த மிக முக்கியமான சந்திப்பு தமிழ்த் தரப்புடன் நடக்கும் என்றும் பிப்ரவரி 4ஆம் தேதி இலங்கை சுதந்திர தினத்துக்கு முன்பு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைப்போம் என்றும் ரணில் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
கடந்த காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளைப் போலப் பொய்த்துவிடாமல் நல்லது நடக்க வேண்டும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு. இவற்றுக்கு இடையே, வடக்கு கிழக்கு மக்களுக்குத் தீர்வை முன்வைக்கக் கூடாது என்ற இனவாதிகளின் கூச்சலும் தொடங்கியுள்ளது. இத்தகைய போக்குகளினால்தான் இலங்கை இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இனியும் இலங்கை அரசு தன்னைத் திருத்திக்கொள்ளாது விட்டால், நாட்டில் என்னதான் எஞ்சியிருக்கும் என்பதே முக்கியமான கேள்வி!
- தீபச்செல்வன் கவிஞர், பத்திரிகையாளர், தொடர்புக்கு: deebachelvan@gmail.com