

தமிழ்நாட்டின் முதன்மையான அறிவுத் திருவிழாவான சென்னை புத்தகக் காட்சி, இந்த ஆண்டு ‘சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி’ எனும் புது அடையாளம் பெறுகிறது.
தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து, சர்வதேசப் புத்தகக் கண்காட்சியை (ஜனவரி 16-18) நடத்துகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த முன்னெடுப்பு குறித்து, பொது நூலகத் துறை இயக்குநர் க.இளம்பகவத் ஐஏஎஸ் (முழு கூடுதல் பொறுப்பு) அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்:
சென்னையில் ‘சர்வதேசப் புத்தகக் கண்காட்சி’க்கான யோசனை எப்படிப் பிறந்தது?
“உலகின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சியானஜெர்மனியின் ஃப்ராங்ஃபர்ட் புத்தகக் கண்காட்சிக்கு, தமிழக அரசு ஐந்து பேர் கொண்ட குழுவைக் கடந்த ஆண்டு அனுப்பியது; உலகின் மிகப் பழமையான புத்தகக் கண்காட்சியுமான அதைப் பார்வையிட்ட குழுவினர், அங்கிருந்து விஷயங்களைக் கற்றுக்கொண்டு வந்தோம். அங்கு நாம் பெற்ற அனுபவம், சந்தித்த நபர்கள், அவர்கள் மூலம் கிடைத்த தொடர்புகள் ஆகியவற்றின் விளைவால், சென்னையில் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியை நடத்துவது எனத் தீர்மானித்தோம்.”
சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் நோக்கம் என்ன?
“‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும், இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும், திறமான புலமையெனில் வெளி நாட்டார் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்’ என்பது மகாகவி பாரதியின் கூற்று. அந்த வகையில், தமிழ்நாட்டின் வளமான இலக்கியத்தை, உலக மொழிகளுக்குக் கொண்டுசெல்வதும், உலகமொழிகளில் இருந்தும் தமிழுக்கு நல்ல இலக்கியம், அறிவுசார் நூல்களைக் கொண்டுவருவதுமான அறிவுப் பரிமாற்றம்தான், சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் அடிப்படையான நோக்கம்.”
சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் சாத்தியங்களும் சவால்களும் என்னென்ன?
“அமெரிக்கா, கனடா, பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், போர்ச்சுகல், ஜார்ஜியா, அர்ஜென்டினா, மலேசியா, சிங்கப்பூர், துருக்கி, கென்யா, உகாண்டா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், போட்ஸ்வானா, ஓமன் என நிறைய நாடுகள் ஆர்வமுடன் பங்கெடுக்கவிருக்கின்றன; அந்த நாடுகளின் பதிப்பாளர்கள், பதிப்புரிமை முகவர்கள் ஆகியோருடன் புத்தகங்களைப் பரிமாறுவதற்கான நடவடிக்கை, ‘ரைட்ஸ் டேபிள்’ என்கிற வழிமுறை மூலம் நடைபெறும்.
உலக-இந்திய பதிப்புப் போக்கு, அதன் தொழில்நுட்பம் ஆகியவை சார்ந்து பதிப்புத் துறை வல்லுநர்கள் பங்குபெறும் கருத்தரங்கம், மொழிபெயர்ப்பு-பதிப்பு நல்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் எனத் தமிழ்ப் பதிப்புலகை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் சாத்தியங்களைச் சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி உள்ளடக்கியிருக்கிறது.
குறுகிய காலத்தில் நிறையப் புத்தகங்களை மொழிபெயர்ப்பது சவாலாக அமையும். தமிழ் நூல்கள் பெரும்பாலும் ஆங்கிலம் வழியாகவே பிற மொழிகளுக்குச் செல்கின்றன. இந்த வழிமுறையில் பயிற்சிபெற்ற, தகுதியுள்ள நபர்களைக் கண்டறிந்து மொழிபெயர்ப்புகளைக் கொண்டுவருவதில் சவால்கள் உள்ளன.
சர்வதேசப் புத்தகக் கண்காட்சி என்கிற வடிவம் நமக்கு முற்றிலும் புதிது; தனிப்பட்ட முயற்சிகளைத் தாண்டி, பதிப்புரிமைப் பரிமாற்றத் திட்டங்களில் கலந்துகொண்ட அனுபவமும் நமக்கு இல்லை. எனவே அதற்குரிய பயிற்சி, தயாரிப்புகளை மேற்கொண்டு, சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தற்போது ஈடுபட்டுள்ளோம்.”
தமிழ்ச் சூழல் எப்படி இருக்கிறது?
“கடந்த 100 ஆண்டுகளில், ஒட்டுமொத்தமாகவே தமிழிலிருந்து 100-120 புத்தகங்கள் மட்டுமே பிற மொழிகளுக்குச் சென்றுள்ளன; பெரும்பான்மையாக ஆங்கிலத்திலும், பிற மொழிகளில்குறைவாகவும் அவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலகின் பல நாடுகளில் அரசு, அரசு சாரா நிறுவனங்கள், பண்பாட்டு அமைப்புகள் மொழிபெயர்ப்பு நல்கை, மானியம் ஆகிய வழிகளில் நூல்களைப் பிறமொழிகளுக்குக் கொண்டுசெல்கின்றன. தமிழ்நாட்டில், பாடநூல் நிறுவனம் இந்திய மொழிகளுக்குத் தமிழ் நூல்களைக் கொண்டுசெல்லும் பணியை முன்னெடுத்திருக்கிறது.
இப்போது சர்வதேசப் புத்தகக் கண்காட்சி வழியாக, இந்த முன்னெடுப்பு உலக மொழிகளுக்கு விரிவடைகிறது. தமிழ்ப்பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரிடம்இருக்கும் புத்தகங்களை, மொழிபெயர்ப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டிருக் கிறோம். 200க்கும் மேற்பட்ட புத்தகங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து குறைந்தது 30 புத்தகங்களாவது பிறமொழிகளுக்குச் செல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
கடந்த 100 ஆண்டுகளை ஒப்பிடுகையில், 30 என்பது சிறு எண்ணிக்கைதான் எனினும், இனி ஒவ்வோர் ஆண்டும் 30-50 நூல்களைப் பிறமொழிகளுக்குக் கொண்டுசெல்வதற்கான சிறந்த தொடக்கமாக இது அமையும் என நம்புகிறோம்.”
- சு.அருண் பிரசாத், தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in