

46ஆவது சென்னை புத்தகக் காட்சி நாளை (ஜனவரி 6) தொடங்குகிறது. புத்தகக் காட்சி எப்படிப் பயணிக்க வேண்டும்?
# பபாசி, ஆண்டுதோறும் நடத்தும் சென்னை புத்தகக் காட்சி, தமிழ்நாடு அரசின் நிதிப் பங்களிப்புடன் நடைபெறுகிறது. இந்த ஆண்டு, சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்கு தமிழக அரசு, ரூ.6.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. எனவே, தனியார் புத்தகக் காட்சியைப் போல் அல்லாமல், முன்னெப்போதையும்விடக்கூடுதல் பொறுப்புடன் புத்தகக் காட்சியைப் பபாசி நடத்த வேண்டும் என்பது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
# புத்தகக் காட்சியில் அரங்குகள் ஒதுக்குவதில் ஏற்படும் சலசலப்புகளுக்குப் பபாசி நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உறுப்பினர் அல்லாதோர், சிறு பதிப்பகங்கள் ஆகியோருக்கு வெளிப்படைத் தன்மையுடன் அரங்குகளை உறுதிசெய்வதன் மூலம் இப்பிரச்சினைக்கு முடிவுகட்ட முடியும். பொருளாதார வசதியின்மை காரணமாக ஒருவர் தம் புத்தகங்களைக் காட்சிப்படுத்த முடியாத சூழல் அறவே களையப்பட வேண்டும்.
# புத்தகக் காட்சியில் இடம்பெறும் புத்தகங்கள் தொடர்பான இலவசக் கையேட்டை மாணவர்களுக்கு வழங்கலாம். அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளைக் கொண்டுவரும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்குக் கூடுதலாக 5% அல்லது 10% கழிவு கொடுக்கலாம்.
# புத்தகக் காட்சி அரங்கினுள் ஏற்படும் சிக்னல் கோளாறு முற்றாகக் களையப்பட வேண்டும். டெபிட்-கிரெடிட் அட்டைகளைத் தாண்டி, எல்லோரும் இன்றைக்கு ஜிபே, ஃபோன்பே போன்ற வசதிகளைப் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். சிக்னல் கோளாறுகள் களையப்பட்டு, அரங்கினுள் பணம் செலுத்துவதில் விற்பனையாளர்-வாசகர் இடையே ஏற்படும் சங்கடங்கள் தவிர்க்கப்பட வேண்டும். மேலும், அரங்கின் எல்லா மூலைகளிலும் ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட வேண்டும். தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்லும் இடத்தில் ஒன்றிரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் எந்தவகையிலும் உதவாது.
# நட்சத்திரப் பேச்சாளர்கள் தினமும் உரையாற்றும் பேச்சரங்கத்தில் இலக்கியவாதிகள், எழுத்தாளர்களுக்குக் கூடுதல் இடம் அளிக்கலாம். பிற துறைப் பேச்சாளர்களும் தாம் படித்த நூல்களைப் பற்றிப் பேச வழிசெய்யலாம். எழுத்து சார்ந்த அனைத்துத் துறையினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம்.
# ஒவ்வொரு பதிப்பகமும் அதன் முக்கியமான நூல்கள் குறித்த மிகச் சுருக்கமான அறிமுகக் குறிப்பை அரங்கில் காட்சிப்படுத்துவது, புத்தகங்களைத் தேர்வுசெய்வதில் வாசகர்களுக்கு உதவும்.
# பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள், தம்மைச் செதுக்கிய நூல்கள் குறித்துப் பேசவைத்து, அவற்றை எழுத்து-காணொளி வடிவங்களில் அரங்கின் உள்ளும்-வெளியிலும் காட்சிப்படுத்தலாம்.
# இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான நிகழ்ச்சிகள், போட்டிகளை பபாசி முன்னெடுக்க வேண்டும். மொழிபெயர்ப்பு நூல்கள், சர்வதேச இலக்கியங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து இளம் வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையிலான நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
# புத்தகக் காட்சியை மையப்படுத்தி அச்சு, காட்சி, ஒலி எனப் பல்லூடகங்கள் வழி, புத்தக அறிமுகம், விமர்சனங்கள் செய்பவர்களைக் கண்டறிந்து, புத்தகக் காட்சியின் முடிவில் அவர்களுக்குப் பரிசளிக்கலாம்.
# புத்தக விற்பனை பலசரக்கு வியாபாரம் அல்ல; அதன் நோக்கம் விற்பனை மட்டும் கிடையாது. எனவே, வாசிப்புப் பண்பாட்டை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்லும் எல்லா முன்னெடுப்புகளையும் பபாசி மேற்கொள்ள வேண்டும். அதுவே எல்லா பதிப்பகங்களின் புத்தகங்களும் பரவலாவதற்கான வழியாக அமையும்.
- அபி, தொடர்புக்கு: editpage@hindutamil.co.in