தமிழை விழுங்கும் ‘தமிங்கிலம்’!

தமிழை விழுங்கும் ‘தமிங்கிலம்’!
Updated on
2 min read

அடுத்த தலைமுறை மொழி எப்படி இருக்கும் என்பதை இன்றைய இளைஞர்கள் பயன்படுத்தும் மொழியின் வடிவில் கண்டுகொள்ளலாம். தமிழ் பேசும் அனைவரிடமும் எழுத்து வழக்கு ஒன்றாகவே இருந்தாலும், இன்றைய இளைஞர்களின் அலைபேசி வழக்காக ‘தமிங்கிலம்’தான் இருக்கிறது.

இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமல்ல, அரசியல் தலைவர்கள், உயர் அலுவலர்களின் அலைபேசித் தொடர்புப் பெயர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருப்பதைக் காணலாம். அவர்தம் குறுஞ்செய்திகள், புலனத் தொடர்புகள் (வாட்ஸ்ஆப்) மிகப் பெரும்பாலானவை தமிழும் ஆங்கிலமும் கலந்த கலப்புமொழியில் இருப்பதையும் காணலாம். ‘Nee ippa Enna Thaan da Solla varra?’ எனத் தொடரும் உரையாடல் தமிழ் எழுத்து அழிவின் தொடக்கம்!

தமிங்கிலப் பயன்பாடு அதிகரிக்க, சொற்சுருக்கம் மட்டுமே காரணமல்ல, பன்னாட்டுப் பண்பாட்டுக்கே உரிய ‘பயன்படுத்து, தூக்கியெறி’ எனும் அலட்சியமும் ஒரு காரணம். நூறாண்டுக்கு முன் ‘மணிப்பிரவாள’ நடையை மாற்ற மறைமலை (அடிகள்) எனும் தமிழ்மலை எழுந்தது. மொழிப்போர் வரலாற்றையே அறியாதவர்க்குத் தமிழியக்க வரலாறு தெரியாதுதான். ஆனால், நாம் விட்டுவிட முடியுமா?

எழுத்துகளை விழுங்கிய ‘இங்க்லீஷ்’: உலகில் ஏறத்தாழ 100 மொழிகள், ஆங்கில எழுத்துகளையே பயன்படுத்துகின்றன. லத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு முதலிய வளமான மொழிகளின் சொற்களை மட்டுமின்றி, அவற்றின் எழுத்து வடிவங்களையும் எடுத்துக்கொண்டு ஒரு கலப்பு எழுத்து வடிவில் அம்மொழிகளை ஆங்கிலம் ஆட்டுவித்து நூறாண்டுகள் ஆகின்றன.

மலேசிய நாட்டின் மலாய் மொழி, 20ஆம் நூற்றாண்டுவரை அரபு மொழியோடு தொடர்புடைய ‘ஜாவி’ எழுத்துகளில் எழுதப்பட்டது. பின்னர், ஆங்கில எழுத்து வடிவமே அதிகாரபூர்வ எழுத்தாக மலேசிய அரசால் அறிவிக்கப்பட்டு, இன்றும் நடைமுறையில் உள்ளது. இந்தத் தலைமுறை மலேசியர்கள் மலாய் மொழியை, ஆங்கில எழுத்துகளில் மட்டுமே எழுதுகின்றனர்.

அழியும் மொழிகள்: இந்திய அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஒன்றான கொங்கணி, கோவா மாநிலத்தில் பேச்சுவழக்கில் உள்ளது. எனினும், தேவநாகரி, அரபி, கன்னடம், மலையாளம், லத்தீன், ஆங்கிலம் என - மக்கள் வாழும் இடத்துக்கேற்ப – ஐந்து வகை எழுத்துகளில் எழுதப்படுவதால், கொங்கணி சுய எழுத்து வடிவத்தை இழந்துவருகிறது. இப்படியாக அழிந்துபடும் மொழிகளின் பட்டியலில் நம் அன்னைத் தமிழும் சேர வேண்டுமா?

பாடம் தேவை: இன்றைய இணைய வளர்ச்சியில், கணினியில் கிடைக்கும் அனைத்தும் அலைபேசியிலும் கிடைக்கிறது. செல்பேசி-கணினியில் எதைப் பார்க்கலாம், எதைப் பார்க்கக் கூடாது (Do’s and Don’ts) என்பது பற்றி, நம் பள்ளிக் கல்வியில் பாடம் வைக்க வேண்டும். தமிழில் அந்தச் சாதனங்களைப் பயன்படுத்தக் கற்றுத்தர வேண்டும். ‘இணையத் தமிழ்’ கட்டாயப் பாடமாக வேண்டும்.

மாணவர்க்கு மடிக்கணினி தரும்போது, ஆங்கிலத்துடன் தமிழ் ஒருங்குறி (UNICODE) எழுத்துருவும் தர வேண்டும். ‘ர’ எழுத்தை, துணைக்கால் போல அச்சிடும் சில தமிழ் எழுத்துருக்களைக் கவனமாகத் தவிர்க்க வேண்டும். வீரமாமுனிவர், தந்தை பெரியார் உள்ளிட்ட பலர் செய்த மாற்றங்களோடு இன்றைய தமிழ் எழுத்து எளிதாகி நிலைத்து நிற்கிறது. அப்படிக் கட்டமைக்கப்பட்ட எழுத்து வடிவைத்தான் இப்போது சிதைத்து வருகிறோம் என்று சொன்னால் இளைஞர்கள் புரிந்து நடப்பார்கள்.

அரசு தலையிட வேண்டும்: 1733இல் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ஜார்ஜ் அரசு ஆணையிட்ட பின்னரே லத்தீன் கலவாத ஆங்கிலத்தைப் பரவலாகப் பேசுவதும் எழுதுவதும் இங்கிலாந்திலேயே கட்டாயமானது. இதைப் பற்றிப் பேராசிரியர் இரா.இளவரசு ஒரு சிறு நூலே எழுதியிருக்கிறார். இந்தத் தகவல்கள், எல்லாத் தமிழர்களையும் சென்றடைய வேண்டும்.

தலைவர்கள், அலுவலர்கள் போன்றோர் பேசும்போதும், அலைபேசி-கணினித் தகவலிலும், தமிங்கிலத்தை அறவே தவிர்க்க அரசு ஆணை வெளியிட வேண்டும். தமிழ் வலைப்பக்கப் படைப்புகளுக்கும், தமிழ்-விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களுக்கும், காணொளி, செல்பேசி, புலனம் முதலானவற்றில் தமிழிலேயே பங்களிப்போர்க்கும் பரிசுகள் வழங்கிப் பாராட்ட வேண்டும். தமிழ் அமைப்புகளுடன் இணைந்து மாவட்டம்தோறும் இதைச் செயல்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரும்வகையில் உரிய சான்றிதழ்களும் தரலாம்.

அலைபேசியின் தொடர்புப் பெயர்களைத் தமிழில் வைத்திருப்போரை மாவட்டவாரியாகப் பாராட்டிச் சான்றளித்து ஊக்குவித்தால், தமிழ்ப் பயன்பாடு உயர வாய்ப்புள்ளது. அலைபேசிப் பயன்பாடு, குறுஞ்செய்தி, புலனம், முகநூல், சுட்டுரை, வலைப்பக்கம் என இணையத் தொடர்புகள் அனைத்தும் தமிழிலேயே தொடர ஊக்குவிக்கலாம்.

தமிழ் எழுத்துக்கு வந்திருக்கும் இந்த ஆபத்து எளிதாக எடுத்துக்கொள்ள முடியாதது என்பது முதலில் அரசுக்குப் புரிய வேண்டும். இல்லையேல், உலகமே வியக்கும் நமது பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கக்கூடத் தெரியாத அடுத்த தலைமுறை தமிழ்நாட்டிலேயே வளரக்கூடும். இது வெறும் ஊகமல்ல, உண்மை!

தமிழ் எழுத்து வடிவத்தைக் காக்க, தமிங்கிலத்திலிருந்து இளைஞர்களைத் திருப்ப, உரிய அறிஞர்களைக் கொண்டு ஆலோசிப்பதும், பள்ளிக் கல்வியிலிருந்தே செயற்படுத்த அரசாணை கொண்டுவந்து சிற்றூர் வரை கண்காணிப்பதுமே தமிழ் எழுத்துகளைக் காப்பாற்றும். இல்லையேல், தமிங்கிலம் எனும் திமிங்கிலம் நம் தாய்த்தமிழை விழுங்கிவிடும்! - நா.முத்துநிலவன் தமுஎகச மாநிலத் துணைத் தலைவர், தொடர்புக்கு: muthunilavanpdk@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in