

நான் வசிக்கும் வீதியில் உள்ள ஓர் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணை, சமீபத்தில் ஒரு பேரங்காடியில் பார்த்தேன். வாங்கிய பொருள்களுக்குப் பணம் செலுத்துவதற்காகக் கையில் ரூபாய் நோட்டுகளுடன் தடுமாறிக்கொண்டிருந்தார். அவரை அணுகி, ‘ஏன் இந்தச் சிரமம்? கைப்பேசி வழியாகவே பணம் அனுப்ப வேண்டியதுதானே?’ என்றேன்.
‘என் கைப்பேசியில் அந்த வசதி இல்லை; என் ஏடிஎம் அட்டைகூட எப்போதும் என் கணவரிடம்தான் இருக்கும்’ என அவர் சொன்னது அதிர்ச்சியளித்தது. மனைவியின் ஏடிஎம் அட்டையைக் கணவனே வைத்துக்கொள்வது கூடப் பாலினச் சமத்துவமின்மையின் வெளிப்பாடுதான்; இதுவும் ஒருவகையான வன்முறைதான்.
வேலைக்குச் சென்று பொருளாதார நிலையில் மேம்பட்டிருந்தாலும், பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான். தற்போதைய நிலையில், இந்தியா பாலினச் சமத்துவத்தை எட்டுவதற்கு இன்னும் 90 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என சர்வதேசத் தொழிலாளர் நல ஆணையத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. குடும்பத்தின் கட்டுமானம், அமைதி கருதிப் பெண்களின் புகார்கள் பெரும்பாலும் பதிவுசெய்யப்படுவதில்லை.
கணவன் அடிப்பதுகூட நல்லதுக்குத்தான் என்று நம்பும் பெண்கள் இன்றும் இருப்பது கொடுமை. வீட்டிலும் பணியிடங்களிலும் பொதுவெளியிலும் பெண்கள் அவமதிக்கப்படுவது தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. ‘வேலைக்குப் போகாதே, கெட்டுப் போகாதே’ என்று சொல்லும் பிற்போக்குச் சிந்தனையாளர்கள் எல்லா காலத்திலும் இருப்பார்கள். வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொன்ன ஆன்மிகப் பெரியோர்கள்கூட இருக்கிறார்கள்.
ஆனால், பெண்கள் வெளியே செல்லக் கூடாது எனக் கட்டுப்படுத்திய காலம்போய், ‘வெளியே செல், பிரச்சினைகளை எதிர்கொள்’ என்று சொல்லும் புதிய தலைமுறை மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் ஆண்களும் பெண்களும் அடக்கம். அதேவேளையில், பாலியல் சமத்துவம் பற்றிப் பேசுகிற பெரும்பான்மையான குழுக்கள்கூடச் சம்பிரதாயமாக நடந்துகொள்கின்றன. அரசு அதிகாரிகளும் கடமை தவறுவதைப் பார்க்க முடிகிறது.
சமீபத்தில், மூன்று வயதுக் குழந்தை ஒன்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது. பதற்றத்தை அறிந்துகொண்ட அந்தக் குழந்தையின் தாய், மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தார்; காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால், மருத்துவர், காவல் துறை அதிகாரி, உயர் அதிகாரிகள் எல்லோரும், அது அந்தக் குழந்தையின் கற்பனை என்று வாதிட்டார்கள். எந்த நிலையிலும் அது ஒரு வழக்காக மாறுவதைத் தவிர்ப்பதற்காக, குழந்தையின் கற்பனை எனச் சொல்லி, அந்தத் தாயின் குற்றச்சாட்டை நிராகரித்தார்கள்.
அந்தப் பெண்மணி காயப்பட்டுப்போய் ஒதுங்கிக்கொண்டார். திருமணத்தில் ஆண்-பெண் இருவரும் மெட்டி அணிகிறார்கள். ஆனால் பெண்கள் அணியும் மெட்டி, காலம் முழுக்க அவர்களின் காலில் இருக்கிறது; ஆண்கள் அணியும் மெட்டி, வெறும் திருமணச் சடங்காக எஞ்சிவிடுகிறது. பாலினச் சமத்துவம் சார்ந்த கேள்விகள்கூட இப்படித்தான் அலட்சியப்படுத்தப்படுகின்றன. நம் தமிழ்க் கவிஞர்கள், பெண்களைச் ‘சகி’ என விளித்துக் கவிதைகள் எழுதுவார்கள்.
தமிழக அரசு ‘சகி’ என்கிற பெயரில் பெண்களுக்கான உதவி எண் 181-ஐ இப்போது நிறுவியிருக்கிறது. அது பாதிக்கப்படும் பெண்களுக்கு உண்மையாகவே உதவிகரமாக இருக்க வேண்டும், பெண்கள் பாதுகாப்பிலும் சமத்துவத்திலும் முன்னேற்றம் ஏற்படப் பல தடைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கு இன்னும் 100 ஆண்டுகள் ஆகக் கூடாது! - சுப்ரபாரதிமணியன்
எழுத்தாளர், தொடர்புக்கு: subrabharathi@gmail.com