

தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, அலைபேசி ஆகிய மூன்றும், சராசரித் தமிழர்களிடமும் பரவலாகப் புழங்கும் மின்னணுக் கருவிகளாக இன்று உள்ளன. இவை ஒவ்வொன்றும் அறிமுகமானபோது இவற்றை மையமாகக் கொண்டு பல நம்பிக்கைகள் உருவாகி வழக்கில் இருந்தன; அவற்றுள் சில அறிவியல் அடிப்படை இல்லாதவை. காலப்போக்கில் அவை ‘பொய்யாய்ப் பழங்கதை’யாய்ப் போயின.
இதுபோல், நம் முன்னோர்கள் காலத்தில் புதிய கருவிகள் அறிமுகமானபோது, அவர்கள் சிந்தனையிலும் அன்றாட சமூக வாழ்விலும் அவை ஏற்படுத்திய தாக்கம் என்னவாக இருந்திருக்கும் என்று கண்டறிய முயன்றதன் வெளிப்பாடே இக்கட்டுரை. இங்கு ரயில் போக்குவரத்தின் அறிமுகம் மட்டும் எடுத்துரைக்கப்படுகிறது.
நவீனத்துவம் பிறந்தது: இங்கிலாந்தில் தோன்றிய தொழிற்புரட்சி, நவீனத்துவச் சிந்தனையையும் புதிய கருவிகளையும் உலகுக்கு அறிமுகம் செய்தது. இவற்றுள் ஒன்றாக, தொழிற்கூடங்களுக்கும் வீடுகளுக்கும் அன்றாடம் தேவைப்பட்ட எரிபொருளான நிலக்கரியை அதிக அளவிலும் குறைந்த நேரத்திலும் கொண்டு செல்ல, நீராவியால் இயங்கிய ரயில் அறிமுகமானது.
‘ரயிலின் வரவு, உலகுக்கு இங்கிலாந்து வழங்கிய கொடை’ என்று டிரவாலியன் என்ற ஆங்கிலேய வரலாற்றாசிரியர் குறிப்பிடுவார். தம் காலனிய நாடாக இந்தியாவை ஆங்கிலேயர் மாற்றியபோது, இந்தியாவிலும் ரயில் போக்குவரத்தை அறிமுகம் செய்தனர். இதன் நோக்கம் என்ன என்பதை 1853 ஆகஸ்ட் 8இல் எழுதிய கட்டுரை ஒன்றில் கார்ல் மார்க்ஸ் அவதானித்துள்ளார்: ‘தங்கள் தொழிலுக்குத் தேவையான பருத்தியையும் இதர மூலப் பொருள்களையும் குறைந்த செலவில் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருப்புப் பாதைகள் அமைக்க விரும்புகிறார்கள் என்பதை நான் அறிவேன்.
இரும்பும் நிலக்கரியும் உள்ள ஒரு நாட்டில், போக்குவரத்தில் இயந்திர சாதனங்களைப் புகுத்தத் தொடங்கிவிட்டால், அதற்குப் பின்னால் அந்த நாடு அந்த இயந்திர சாதனங்களைத் தானே உற்பத்தி செய்வதைத் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியாவில் இருப்புப் பாதை அமைப்பு, நவீன இயந்திரத் தொழிலின் உண்மையான முன்னோடியாகத் திகழும்’ என்று மார்க்ஸ் உறுதிபடக் கூறியுள்ளார்.
வியப்பின் வெளிப்பாடு: மார்க்ஸ் போன்ற அரசியல் நிபுணர்களின் அவதானிப்பு போலன்றி, சராசரித் தமிழர்கள் அது இயங்குவதை வியப்புடன் பார்த்து அதைப் பாடல்களாக வெளிப்படுத்தியுள்ளார்கள். ‘ரயில் சாமி’ என்று அழைத்ததுடன், பொங்கலிட்டு வரவேற்று வணங்கியுள்ளார்கள். குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக நின்று, ‘குப்... குப்’ என்று அக்காலத்திய நிலக்கரி இன்ஜின் போல் ஒலி எழுப்பி, ரயில் விளையாட்டு விளையாடி மகிழ்ந்துள்ளார்கள்.
தமிழ்நாட்டின் முதல் ரயில் நிலையமான ராயபுரம் ரயில் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டியபோது, ‘ராயபுரம் ரெயில்வே ஸ்டேசன் கடைக்கால் கும்மி’ என்ற குறுநூல் வெளியாகியுள்ளது. கவிஞர்கள் சிலர் ‘ரயில் சிந்து’ படைத்துள்ளார்கள். வழிநடைச் சிந்து என்ற இலக்கிய வகைமையில் தலங்களின் பெயர்களை வரிசை முறையில் கூறுவது போன்று ரயில் நிலையங்களின் பெயர்கள் வரிசை ஒழுங்கில் இடம்பெறுவதுடன் சிலவற்றின் சிறப்பும் ‘ரயில் சிந்’தில் கூறப்பட்டிருக்கும்.
சாதியமும் ரயிலும்: சாதிகளுக்கு இடையிலான பாகுபாடு, பயணத்திலும் நிலவிய சூழலில் ரயில் பயணத்தில் உயர் சாதி, இடைநிலைச் சாதி, ஒடுக்கப்பட்ட சாதி என எல்லா சாதியும் ஒன்றாகப் பயணிக்க வேண்டியதாயிற்று. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில், சாதிய ஆதிக்க உணர்வை வெளிப்படுத்தலும் ரயில் பயணத்தையே புறக்கணித்தலும் நிகழ்ந்துள்ளன. ரயிலில் சமத்துவப் பயணத்தை விரும்பாத தனது தந்தையார் நடந்தே வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக முதுபெரும் தமிழ் அறிஞர் ஒருவர் எழுதியுள்ளார்.
மாணிக்கவேலு என்பவர் உயர்நிலைப் பொறியாளராகப் பணிபுரிந்துவந்தார்; இவர் சிறந்த தமிழ் அறிஞராகவும் விளங்கினார். ஒருசமயம் இவர் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, சாதியின் அடிப்படையில் இவருடன் பயணிக்க விரும்பாத ஒருவர், இவரை இறக்கிவிட முயன்றுள்ளார். ஆனால் இவர் உறுதியாக எதிர்த்து நின்றதால் அவரால் வெற்றியடைய முடியவில்லை. பட்டியல் சாதியினரான ஒருவர், தம் குடும்பத்துடன் சிதம்பரம்-மயிலாடுதுறைப் பாதையில் பயணித்துள்ளார்.
அவர் பயணச்சீட்டு எடுத்திருந்தும் பயணச்சீட்டுப் பரிசோதகர், ஒரு ரயில் நிலைய அதிகாரியின் துணையுடன் அவரைக் கீழே இறக்கிவிட்டுள்ளார். இந்நிகழ்வைத் தம் ‘குடிஅரசு’ இதழில் செய்தியாக வெளியிட்டு பெரியார் கண்டித்தார். தஞ்சை ரயில் நிலையத்தின் சிற்றுண்டி விடுதியில் குறிப்பிட்ட சில சாதியினருக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்ததைத் தடுத்து நிறுத்துவதிலும் பெரியார் வெற்றிபெற்றுள்ளார். இவை எல்லாம் தொடக்க கால நிகழ்வுகள். சமத்துவப் பயணத்தை நடைமுறைப்படுத்துவதில் காலப்போக்கில் ரயில் வெற்றிபெற்றது.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், 1949 இல் வெளியான ‘நல்லதம்பி’ திரைப்படத்தில் ‘கிந்தனார் சரித்திரம்’ என்ற கதாகாலட்சேபத்தை உடுமலை நாரயணகவியுடன் இணைந்து எழுதி இடம்பெறச் செய்தார். ‘கரகரவெனச் சக்கரம் சுழலக் கரும்புகையோடு வருகிறாயே’ என்று ரயிலை அழைத்துவிட்டு, ‘மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மத பேதத்தை ஒழித்திட்ட ரயிலே’ என்று பாராட்டுகிறார். - ஆ.சிவசுப்பிரமணியன் பேராசிரியர், பண்பாட்டு ஆய்வாளர், தொடர்புக்கு: sivasubramanian@sivasubramanian.in