

இந்தியாவின் தேங்காய் உற்பத்தியில் 90% தென்னிந்தியாவில்தான் நடைபெறுகிறது. இந்தியாவில் தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாம் இடமும் (13%), மொத்த தென்னை சாகுபடி நிலப்பரப்பளவில் முதலிடமும் (36%) வகிக்கிறது. இந்தியாவில் மொத்த தென்னை உற்பத்தியில் சுமார் 9% இளநீராகப் பயன்படுத்தப்படுகிறது; மீதி 91% முழு தேங்காயாகச் சந்தைக்கு வருவது வீடு, சமயம், தொழில்சார் பயன்பாடுகளுக்கும் தேங்காய் எண்ணெய்க்கும் இதர மூலப் பொருள்களுக்கும் செல்கிறது.
தென்னையிலிருந்து பெறப்படும் நீரா பானம் (தெளுவு, பதநீர்), தென்னைக் குருத்திலிருந்து இயற்கையான முறையில் எடுக்கப்படும் சத்துள்ள இனிப்பான குடிநீராகும்; இது கலப்படமற்ற, மது-கள் சாயம் முற்றிலும் இல்லாத பானமாகும். ஆனால், நீரா பானத்தைப் பற்றிய விழிப்புணர்வு பொதுவாக இல்லை. இந்தியாவில் தேங்காய் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டாலும், தென்னையும் அதுசார்ந்த மதிப்புக்கூட்டிய பொருட்களான நீரா சர்க்கரை, கருப்பட்டி, கற்கண்டு, சாக்லெட், பிஸ்கட்போன்றவையும் ஏற்றுமதியாவதில்லை. மாறாக, ஆண்டுதோறும் பல ஆயிரம் டன் நீரா சர்க்கரை இறக்குமதி செய்யப்படுவது, நமது தென்னைப் பொருளாதாரத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறது.
தென்னை விவசாயப் பொருளாதார மேம்பாட்டுக்கு மத்திய-மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்கவில்லை, தகுந்த கொள்கை வழிமுறையையும் வகுக்கவில்லை. எனினும், கேரளம் (2014), கர்நாடகம், தமிழகம் (2017) என மாநில அரசுகள், தன்னிச்சையான நீரா பானம் இறக்க விதிகளை வகுத்துள்ளன. ஆனால், தமிழகத்தின் நீரா விதிகள் தென்னை விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் இல்லை.
தமிழகத்தில் நீரா பானம் இறக்குவதற்கு, 13 நிறுவனங்களுக்கு மட்டுமே தமிழக அரசு இதுவரை உரிமம் வழங்கியுள்ளது. அதன் மூலம் 9 லட்சம் லிட்டர் நீரா பானம் இறக்கி, ரூ.13 கோடி வரை வருவாய் பெற்று தென்னை விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள். நீரா பானம் மூலம் 18,000 கிலோ அளவுக்கு, மதிப்புக்கூட்டுப் பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937, 19, 11-B பிரிவுகளில் உள்ள சாராய வகைகளுக்கும் (கள்ளு), இயற்கையான நீரா பானத்துக்கும் உள்ள வேறுபாட்டு விதிகள் தெளிவாக இல்லை. கள்ளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இயற்கையான நீரா பானத்தை, உடல் நலத்தைப் பேணும் சத்துள்ள குடிநீராகக் கருதி, மாநிலத்தின் மதுவிலக்குச் சட்ட விதிகளை அரசு திருத்தினால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.47,500 கோடி வருமானமாகக் கிடைக்கும், விவசாயத்தில், ஆண்டுக்குக் குறைந்தது 2.40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் உருவாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கேரளத்தில் உரிமம் பெற்ற ஒருவர், 20 தென்னை மரங்களில் நீரா பானம் இறக்க அனுமதிக்கப்படுகிறார்; கர்நாடகத்தில் இந்தக் கட்டுப்பாடு முற்றிலும் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் இப்போதைய விதிகளின்படி, 5 மரங்களில் மட்டுமே நீரா பானம் இறக்குவதற்குத் தென்னை விவசாயிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை அரசு அதிகாரி (அலுவலர், கலால் உதவிஆணையர், தாசில்தார்கள்) வந்து குறித்துக் கொடுக்கும் மரத்தில் மட்டும்தான் நீரா பானம் இறக்க முடியும். இந்த விதிகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.
சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளின் ஆவணங்களின் சரிபார்ப்புக்குப் பிறகு, நீரா பானம் இறக்குவதற்கான உரிமத்தை, மாவட்ட ஆட்சியர் கடைசியாகவே வழங்குகிறார். அதற்குமுன், மத்தியதென்னை ஆராய்ச்சி நிறுவனத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்கிற கட்டாய விதிமுறை, விவசாயிகளுக்கு ஏற்றதாக இல்லை. ஏனென்றால், மத்திய அரசு மூலம் நிதி உதவியோ மற்ற உதவிகளோ நீரா இறக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படுவதில்லை.
எனவே, இந்த விதிமுறைகளை நீக்கிவிட்டு, இப்போதிருக்கும் கொள்கையைத் தமிழக அரசு மாற்றியமைக்க வேண்டும். ஒற்றைச்சாளர முறையில், இணையவழி மூலமாக நீரா இறக்கும் உரிமம் ஒரு வாரத்தில் தென்னை விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்; ஒரு விவசாயி குறைந்தது 25 முதல் 30 மரங்கள் வரை நீராபானம் இறக்க வழிவகுத்து, அரசு தென்னைப் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். - பா.சந்திசேகரன் பொதுக்கொள்கை ஆய்வாளர், தொடர்புக்கு: bc.sekaran04@gmail.com