தருணங்கள் 2022: முடிவுறா யுத்தம்

தருணங்கள் 2022: முடிவுறா யுத்தம்
Updated on
4 min read

சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோது, அதன் அங்கமாக இருந்த உக்ரைன் உள்ளிட்ட பகுதிகள் பிரிந்து தனி நாடானதைக் கசப்புடன் கவனித்துவந்தவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அந்நாட்டின் மீது ஒரு கண் பதித்திருந்தார். 2014இல் கிரைமியா பகுதியை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதால் அச்சமடைந்த உக்ரைன், நேட்டோ அமைப்பில் உறுப்பினராக முடிவெடுத்தது. 2017இல் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேறியது. இது தங்கள் பாதுகாப்புக்கு உலைவைக்கும் எனக் கொந்தளித்த ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. கடும் உயிர்ச்சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தினாலும் பிரதான நகரம் எதையும் ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. எண்ணெய் முதல் உணவு தானியங்கள்வரை தட்டுப்பாடு ஏற்பட்டது. யுத்தம் புத்தாண்டிலும் தொடர்கிறது.

அனல் மூட்டிய அக்னிபத்

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட அக்னிபத் திட்டத்தின்படி, 4 ஆண்டுகள்தான் பணி; திறமையின் அடிப்படையில் 25% பேர் மட்டுமே பணியில் தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டது. இது இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் ராணுவத்தின் வலிமையையும் குறைக்கும் என விமர்சனங்கள் எழுந்தன. பிஹார், ஹரியாணா போன்ற மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இத்திட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘இது கட்டாயப் பணி இல்லை; விருப்பம் உள்ளவர்கள் சேரலாம்’ என்றது.

நம்பிக்கையை விதைத்த நடைப்பயணம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா முழுவதும் நடந்து செல்வதற்கான 150 நாள் பயணத்தைச் செப்டம்பர் 7 அன்று கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த நடைப்பயணத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்களும் பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் பங்கேற்றனர். இது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் விமர்சித்தாலும், கோவிட் கட்டுப்பாடுகளைக் காரணமாகக் கூறி, ராகுலின் பயணத்துக்குத் தடை ஏற்படுத்த பாஜக அரசு முயல்வதாகக் காங்கிரஸ் ஆதரவாளர்களும் குற்றம்சாட்டினர். பின்னடைவுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொண்டர்களுக்கும் ராகுலின் ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ புத்துணர்ச்சி அளித்திருப்பதை மறுக்க முடியாது.

வரவேற்கத்தக்க ஒப்பந்தம்

ஐ.நா. அவையின் காலநிலை மாற்றப் பணித்திட்டப் பேரவையின் 27ஆவது காலநிலை மாநாடு (COP27) நவம்பர் மாதம், எகிப்தில் நடத்தப்பட்டது. இதில் புதை படிவ எரிபொருள்களை ஆதரிப்பவர்களும் எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றது உள்ளிட்ட காரணங்களுக்காகப் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கான ‘இழப்பு பாதிப்புக்கான நிதியம்’ உருவாக்கப்பட வேண்டும் என்றும் காலநிலைப் பேரிடர்களால் அதிகமாகப் பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட வேண்டும் என்றும் மூன்றாம் உலக நாடுகள் நீண்ட காலமாக வைத்துவரும் கோரிக்கைகளுக்கான ஒப்பந்தம் இந்த மாநாட்டில் முடிவாகியிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

நிலைகுலைந்த ‘நாணயம்’

கிரிப்டோநாணய முறைகேடுகளையும் அவற்றால் விளையும் ஆபத்துகளையும் கையாள்வது எப்படி என்று உலக நாடுகள் குழம்பிக்கொண்டிருக்கின்றன. கிரிப்டோ முறைகேடுகளைத் தடுக்கும் முயற்சியாக இந்திய அரசின் பட்ஜெட்டில் கிரிப்டோநாணயங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் சொத்துக்களின் பரிமாற்றத்துக்கு 30% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு தனது அதிகாரபூர்வ டிஜிட்டல் ரூபாயையும் அறிமுகப்படுத்தியது. அமெரிக்காவில் இயங்கிவந்த கிரிப்டோநாணயப் பரிமாற்ற நிறுவனமான எஃப்டிஎக்ஸ் திவாலானது, கிரிப்டோநாணயங்கள் மீதான நம்பிக்கையைக் கடுமையாகச் சரித்தது. பலர் தங்களிடமிருந்த கிரிப்டோநாணயங்களை விற்றதால், கிரிப்டோ வர்த்தகமே நிலைகுலையும் சூழல் உருவானது.

வலுவிழந்த ரூபாய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, முதல் முறையாக ரூ.80க்குக் கீழ் சரிந்தது. இது தொடர்பான விமர்சனங்களுக்குப் பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “அமெரிக்க டாலர் தொடர்ச்சியாக வலுவடைந்துவருகிறதே தவிர, இந்திய ரூபாய் சரியவில்லை” என்று விளக்கமளித்தார். மேலும் பிற நாடுகளின் நாணயங்களைவிட, இந்திய ரூபாய் சிறப்பாகவே செயல்படுவதாகவும் கூறினார். இது மேலும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் பாதிக்கும், பணவீக்கம் அதிகரிக்கும் என்று பொருளியலாளர்கள் கூறினர்.

ஆட்கொல்லி ரம்மி

ஆன்லைன் ரம்மி விளையாடி, பணத்தை இழந்து, வாழ்வைத் தொலைத்துத் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவந்தாலும், அதைத் தடை செய்யும் முயற்சியில் தமிழக அரசால் வெற்றிபெற முடியவில்லை. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கான தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக ஆளும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குற்றம்சாட்டிவருகின்றன.

இன்னலுற்ற இலங்கை

2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பால் சுருங்கிய சுற்றுலா, பெருந்தொற்றால் சரிந்த பொருளாதாரம் ஆகியவற்றுடன் ராஜபக்ச சகோதரர்களின் தவறான கொள்கைகளும் சேர்ந்து இலங்கையை இக்கட்டில் தள்ளின. உணவுக்கும், எரிபொருளுக்கும் நாடே வரிசையில் நின்றது; மக்கள் பொறுமையிழந்து போராட்டத்தில் குதித்தனர். அயல்நாட்டுக்குத் தப்பிச்சென்ற அதிபர் கோத்தபய, ஆட்சி மாறி சற்றே அமைதி திரும்பியதும் நாடு திரும்பினார். முதலில் பிரதமராகவும் பின்னர் அதிபராகவும் ஆன ரணில் விக்கிரமசிங்கே, தேசத்தை மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 2,900 கோடி டாலரைப் பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருக்கிறது இலங்கை. அரசுப் பாதுகாப்பில் தங்கியிருந்த கோத்தபய, துபாய்க்குப் பயணமாகிவிட்டார். துயர நிலையிலிருந்து இன்னும் மீளவில்லை இலங்கை!

விண்வெளி ஆராய்ச்சியில் புதிய பாய்ச்சல்

அமெரிக்காவின் நாசா விண்வெளிக்கு அனுப்பிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, 15 லட்சம் கி.மீ. பயணித்து விண்ணில் நிலைபெற்றது. அறிவியலாளர்களின் அயராத முயற்சியால் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜேம்ஸ் வெப் எடுத்த ஐந்து ஒளிப்படங்கள் வெளியிடப்பட்டன. இதுவரை கிடைத்திருப்பதிலேயே விண்வெளியின் தெளிவான ஒளிப்படத்தை அனுப்பியது ஜேம்ஸ் வெப் தான். மிகப் பழமையான நட்சத்திர மண்டலங்களின் ஒளிப்படத்தையும் அனுப்பியுள்ளது. பெருவெடிப்புக்குப் பிறகு உருவான முதல் விண்மீன்கள், புவியைப் போலவே உயிரிகள் வாழச் சாத்தியமுள்ள புறக்கோள்கள் ஆகியவை தொடர்பான கேள்விகளுக்கு விடை காண்பதில் ஜேம்ஸ் வெப் அனுப்பியுள்ள ஒளிப்படங்கள் பெரும் பங்காற்றும் என நம்பப்படுகிறது.

பொருளாதாரப் பெருந்தொற்று

107 வளரும் நாடுகளில் பொருளாதாரச் சூழல் மோசமாக இருப்பதாக, ஐ.நா. வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது. பிரிட்டனில் பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 9%ஆக அதிகரித்தது. இந்தச் சூழலில் பிரதமராகப் பொறுப்பேற்ற லிஸ் ட்ரஸ் எடுத்த நடவடிக்கைகள், பொருளாதாரச் சிக்கலைப் பெரிதாக்கியதால் 45 நாள்களில் அவர் பதவிவிலகினார். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் பொருளாதாரச் சிக்கல்கள் தீவிரமடைந்திருந்தன. ரஷ்யா-உக்ரைன் போரின் விளைவுகளும் பல நாடுகளின் பொருளாதாரத்தை அச்சுறுத்தின. மீண்டும் உலகளாவியப் பொருளாதார மந்தநிலை ஏற்படுமோ என்னும் அச்சம் நிலவியது. சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவிவருவது பொருளாதாரம் குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in