2022: சர்வதேசம், தேசம், மாநிலம்...

2022: சர்வதேசம், தேசம், மாநிலம்...
Updated on
8 min read

சாதனைச் சம்பவங்கள்:

மின்னும் தென்னிந்தியத் திரை

2022இல் இந்தித் திரைப்படங்கள் தொடர் தோல்விகளைத் தழுவ, தென்னியத் திரைப்படங்களோ எட்டுத்திக்கும் வெற்றி முரசு கொட்டின. ரூ.16 கோடியில் எடுக்கப்பட்ட ‘காந்தாரா’ கன்னடப் படம் சுமார் ரூ.400 கோடி வசூலை அள்ளியது. ‘பொன்னியின் செல்வன்-1’, ‘விக்ரம்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘டாணாக்காரன்’, ‘கார்கி’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘லவ் டுடே’, ‘சர்கார்’, ‘டான்’ எனப் பல வகையான தமிழ்ப் படங்களும் வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டன. மலையாள, தெலுங்குப் படங்களும் இந்த கட்டா குஸ்தியில் முத்திரை பதித்தன.



இந்திய மொழிக்கு இலக்கிய புக்கர்

இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி, ‘ரீட் சமாதி’ என்ற தன் இந்தி நாவலின் மொழிபெயர்ப்புக்காக இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்று, சர்வதேச இலக்கியக் கவனம் பெற்றார். இந்திய மொழி எழுத்தாளர் ஒருவர் புக்கர் பரிசு பெறுவது இதுவே முதல் முறை. மா என்ற 80 வயதுப் பெண், சமூகம் விதித்த கோட்டையும் இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கோட்டையும் தாண்டித் தன் காதலைத் தேடிச் செல்லும் கதை இது. இந்தோ-பாக். பிரிவினையால் பிரிந்த காதலை, சமூகப் பின்னணியுடன் கீதாஞ்சலி சொல்லியிருக்கிறார்.

பொன்னியின் செல்வன் கிளப்பிய புயல்

வரலாற்று ஆர்வமில்லாத தலைமுறைக்கு வரலாற்றைப் புகட்ட வராது வந்த மாமணி ஆனது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். புகழ் மிக்க சோழ வரலாற்றின் அடிப்படையில் கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவின் திரைவடிவமான இப்படம் அனைத்துத் தரப்பினரையும் வசீகரித்தது. வந்தியத் தேவன், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், பெரிய பழுவேட்டரையர், குந்தவை, நந்தினி என கதாபாத்திரங்களின் பெயர்கள் கதைக்கப்பட்டன. குடவாயில் பாலசுப்ரமணியம், இரா.கலைக்கோவன் எனச் சோழ வரலாற்றாசிரியர்களின் பெயர்கள் ஊடகங்களில் அடிபட்டன.

விடைபெற்ற பெருந்தொற்றுக் காலம்!

ஒருநாள், வாரம், மாதம் என நீண்டு இரண்டாண்டுகள் நீடித்த கரோனா பெருந்தொற்றுக் காலம் கடந்தாண்டு விடைபெற்றது. கட்டுப்பாடுகள், வேலை இழப்புகள், கட்டாய இடப்பெயர்வுகள் என இந்தப் பொதுமுடக்கக் காலத் துயரங்களின் பட்டியல் நீண்டது. பொருளாதார ரீதியில், மன ரீதியில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இப்போது மீண்டுவருகிறார்கள். சீனா உள்ளிட்ட சில உலக நாடுகளில் இப்போது மீண்டும் தொற்று பாதித்துள்ளது.

ஹைபிரிட் வேலை முறை

கரோனா பொதுமுடக்கத்தால் வீட்டிலிருந்து வேலை என்ற முறை பிரபலமானது. கூகுள், ஆப்பிள், டிவிட்டர் எனப் பல சர்வதேச நிறுவனங்கள் கரோனா தொடக்கத்திலேயே இம்முறையை அறிவித்தன. பெருந்தொற்றுக் காலத்தில் பெருமளவிலானோருக்கு அது கட்டாயமானது. நிலைமை சகஜமானதும், வீட்டிலிருந்து வேலை பார்த்துக்கொண்டு, தேவை என்றால் அலுவலகம் செல்லும் ஹைபிரிட் வேலை முறை பிரபலமாகிவருகிறது. சர்வதேச அளவில் 62% பணிகள் இம்முறையில் இருப்பதாக ஓர் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கிரிக்கெட்டில் சமத்துவம்

வீராங்கனைகளுக்குச் சம ஊதியம் வழங்கப்படும் எனக் கடந்த ஆண்டு பிசிசிஐ அறிவித்தது. சர்வதேச விளையாட்டுச் சங்கங்களில் செல்வச் செழிப்புமிக்க இந்தியக் கிரிக்கெட் கவுன்சில் ஆண்/பெண் அணிகளுக்கு வழங்கும் ஊதியத்தில் ஓரவஞ்சனையுடன் செயல்பட்டது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆண்/பெண் அணிகளுக்கு ஊதிய நிர்ணயத்தில் ஜனநாயகத்தை அறிவித்தது. இதையடுத்து, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் கிரிக்கெட் கவுன்சிலும் அதை நடைமுறைப்படுத்தியது.



வடிகால் பணி; வாழ்த்து மழை

பரபரப்பான சென்னையில் பல ஆண்டுகளாகச் சீர்செய்யப்படாத மழைநீர் வடிகால் சரிசெய்யப்பட்டது. தாமதமாகப் பணிகளைத் தொடங்கிப் போக்குவரத்துக்கு இடையூறாகிப் பெருத்த விமர்சனத்தைச் சந்தித்த சென்னை மாநகராட்சி, பலத்த மழைபெய்தும் வெள்ளம் வராதபோது பாராட்டைப் பெற்றது. துரிதமாகச் செயல்பட்டு தேங்கிய மழை நீரை வடிகாலுக்குத் திருப்பிவிட்டதும் வரவேற்பைப் பெற்றது.

கோல்டன் குளோப் விருது

ஆஸ்கருக்கு அடுத்தபடியாக உலக அளவில் கொண்டாடப்படும் விருது, கோல்டன் குளோப் விருது. சிறந்த ஆங்கிலம் அல்லாத படப் பிரிவின் இறுதிப் பட்டியலில் ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ தெலுங்குப் படம் தேர்வாகியுள்ளது. சிறந்த பாடலுக்கான பிரிவில் இந்தப் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலும் இடம்பிடித்துள்ளது. 2009இல் ஏ.ஆர்.ரஹ்மான் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப் பாடலுக்காக இந்த விருதைப் பெற்றுள்ளார். கீரவாணிக்கும் அந்த வாய்ப்பு கிட்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.

செஸ் ஒலிம்பியாட்

இந்தியாவின் செஸ் தலைநகரமாக அறியப்படும் சென்னையில், தமிழக அரசு ஒருங்கிணைத்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த ஆண்டின் பேசு பொருள்களுள் ஒன்று. வேட்டி, சட்டை அணிந்து வணங்கும் செஸ் ஒலிம்பியாட்டின் ‘தம்பி’ சின்னம் தமிழகம் முழுவதும் பிரபலமானது. செஸ் பலகை வண்ணம் தீட்டப்பட்ட பிறகு, நேப்பியர் பாலம் புதிய சுற்றுலாத் தலமானது.
நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற கோலாகலமான விழாவும் இதுவரை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டுகளில் இது தனித்துவமிக்கது என்பதைப் பறைசாற்றியது.

மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகள்

தமிழக அரசு மாவட்டந்தோறும் புத்தகக் காட்சியை தென்னிந்தியப் புத்தகப் பதிப்
பாளர்கள். விநியோகிஸ்தர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்புடன் கடந்தாண்டு நடாத்தியது. புத்தகக் காட்சிக்குத் தமிழக அரசு மானியம் அளித்தது. இதனால் தமிழகத்தில் ஓர் அறிவுச் சூழலை மேம்படும். மேலும் புத்தகக் காட்சிகளை ஒட்டித் தமிழ் எழுத்தாளர்கள், அறிஞர்கள் ஆகியோரின் பங்களிப்புகளையும் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடுசெய்தது. தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி ஆகிய தென் மாவட்ட இலக்கியத் திருவிழாவாக ‘பொருநை இலக்கியத் திருவிழா’வை நடத்தியது.

சர்ச்சைச் சித்திரங்கள்

சிறைபட்ட சித்ரா

தேசியப் பங்குச் சந்தையின் (என்எஸ்இ) தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா பங்குப் பரிவர்த்தனை முறைகேட்டில் ஈடுபட்டதாகச் சர்ச்சையில் சிக்கினார். இமயமலை மர்மச் சாமியார் சிரோமணி, தன்னை வழிநடத்தியதாகக் கூறி, ஏகப்பட்ட ஊகங்களுக்கு வழிவகுத்தார். மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டார். ஒரு வழக்கில் பிணை கிடைத்துவிட்டாலும், முறைகேட்டு வழக்கில் இன்னும் பிணை கிடைக்கவில்லை.

எல்லாம் எலான் செயல்

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கும் விஷயத்திலும், அதன் பின்னரும் செய்த அதிரடிச் செயல்களாலும் விவாதத்துக்கு உள்ளானார். ‘ப்ளூ டிக்’ பெறக் கட்டணம் என அறிவித்து, போலிக் கணக்குகள் உருவாக அவரே காரணியானார். தான் தலைமை நிர்வாக அதிகாரியாகத் தொடரலாமா எனக் கருத்துக்கணிப்பு நடத்தி, ‘வேண்டவே வேண்டாம்’ என 58% டிவிட்டர்வாசிகளால் புறக்கணிக்கப்பட்டார். ‘தொழிலுக்குப் புதிது என்பதால் நிறைய தவறுகளைச் செய்துவிட்டேன்’ என ஒருவழியாக ஒப்புக்கொண்டார்.

சர்ச்சை சினிமா

1990களில் காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்களின் கதையைச் சொன்ன திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்தப் படம் கன்னியாகுமரி வரை பேசப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் படத்தை வானளாவப் புகழ்ந்தனர். ஆனால், இந்தப் படம் பொதுவெளியில் விமர்சிக்கப்பட்டது. கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படம் குறித்து இஸ்ரேல் இயக்குநர் நடாவ் லாபிட் சொன்ன கருத்துகள் அனலைக் கூட்டின.

ஹிஜாப் சர்ச்சைகள்

இந்தியாவிலும் ஈரானிலும் இருவேறு விதமாகப் பேசுபொருளானது ஹிஜாப். கர்நாடகத்தில் பள்ளி ஒன்றில், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்குச் சென்றதைப் பள்ளி நிர்வாகம் தடுத்தது. மாணவிகள் போராட்டத்தில் இறங்கவே, விவகாரம் சூடுபிடித்தது. ஹிஜாபுக்குக் கர்நாடக அரசு விதித்த தடையை உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது. மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். ஈரானிலோ ஒரு இளம்பெண் ஹிஜாபைச் சரியாக அணியவில்லை எனக் கைதுசெய்யப்பட்டுக் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததால் போராட்டம் வெடித்தது.

கலக்கமூட்டிய கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறை வடிவமெடுத்தது. பள்ளி வாகனங்களுடன் காவல் துறை வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. அதுதொடர்பாக, ஆண்டின் இறுதிவரை கைதுப்படலம் தொடர்கிறது. மாணவியின் மரணம் தொடர்பாக சமூக ஊடகங்களில் சகலவிதமான ஊகங்களும் பரவின. பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியைகள் என ஐவர் கைதுசெய்யப்பட்டனர். முழுமையான விசாரணை அறிக்கை மூன்று மாதங்களுக்குள் தயாராகிவிடும் என நவம்பர் இறுதியில் சிபிசிஐடி தெரிவித்தது.

எகிறிய எரிபொருள் விலை

உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் விலை இந்தியா உள்படப் பல நாடுகளில் அதிகரித்தது. ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் எண்ணெய் இறக்குமதியை இந்தியா மேற்கொண்டது. ஆனாலும் ரூ.100க்கும் அதிகமாக எரிபொருள் விற்பனையானது. முன்னதாக உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் காரணமாக விலை உயர்வு நிறுத்திவைக்கப்பட்டதாகவும், தேர்தல் முடிந்தவுடன் விலை உயர்ந்ததாகவும் விமர்சனம் எழுந்தது. 2022 தீபாவளிக்கு முன்னதாகப் பெட்ரோல் விலையில் ரூ.5, டீசல் விலையில் ரூ.10 குறைத்தது மத்திய அரசு.

சர்ச்சைச் சிவிங்கிப்புலிகள்

இந்தியாவில் அற்றுப்போய்விட்ட சிவிங்கிப் புலிகள், கடந்தாண்டு நமீபியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன. மத்தியப் பிரதேசம் கூனோ தேசியப் பூங்காவில் 8 சிவிங்கிப் புலிகளைப் பிரதமர் மோடியே தனது பிறந்தநாளில் திறந்துவிட்டுப் பெருமிதம் கொண்டார். பின்னர், அவை தனிமைப்படுத்தல் முகாம்களில் அடைக்கப்பட்டன. ‘மோடி எதற்கெடுத்தாலும் பொய் சொல்கிறார். இந்தியாவுக்கு மீண்டும் சிவிங்கிப்புலிகளைக் கொண்டுவர முதலில் முயற்சியெடுத்தது நாங்கள்தான்’ எனக் காங்கிரஸ் கடுகடுத்தது.

புல்டோசர் அரசியல்

சட்டவிரோத ஆக்கிரமிப்பு முதல் கலவரம் வரை பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களின் வீடுகளை-விசாரணை முடிவதற்கு முன்பாகவே-புல்டோசர் வைத்துத் தரைமட்டமாக்கும் ‘அதிரடி’ நடவடிக்கையை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு மேற்கொண்டது. பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் இந்தப் பாணி பரவியது. எதிர்க்கட்சிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இதைக் கண்டித்தனர். ஆனாலும் இந்தப் போக்கு தொடர்கிறது.

மற்றும் ஒரு மசூதி சர்ச்சை

ஒளரங்கசீப் காலத்தில் காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டுத்தான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டது என இந்துக்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மசூதியின் கட்டமைப்பைக் காணொளியாகப் பதிவுசெய்ய 2022 மே மாதம் உத்தரவிட்டது. மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாக இந்துக்களும், அது நீரூற்று என்று முஸ்லிம்களும் வாதிட்டனர். வாராணசி நீதிமன்றம் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை சென்ற வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

வார்த்தைகளால் விளைந்த வன்முறை

ஞானவாபி விவகாரம் குறித்த தொலைக்காட்சி விவாதத்தில், நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா பேசியது சர்ச்சையானது. பாஜகவைச் சேர்ந்த நவீன் ஜிந்தலும் சர்ச்சைக்குரிய வகையில் டிவீட் செய்தார். பல இடங்களில் வன்முறை வெடித்தது. ராஜஸ்தானைச் சேர்ந்த கன்னையா லால் எனும் தையல் கலைஞர் நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்ததற்காக, மத அடிப்படைவாதிகளால் படுகொலைசெய்யப்பட்டார். நூபுர் ஷர்மாவுக்கு எதிராக கத்தார், ஓமன், பாகிஸ்தான் உள்ளிட்ட 57 நாடுகள் அடங்கிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓஐசி) கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தியது.

உலவிய சொற்கள்

பூமர்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான இருபது ஆண்டுகளில் பிறந்தவர்களை மேற்குலகம், ‘பூமர் குழந்தை’ என அடையாளப் படுத்துகிறது. புதிய விழுமியங்களுடன் வாழ்க்கையை அணுகும் இளம் தலைமுறையினர், ‘பூமர் குழந்தை’களின் மனோபாவத்தை ‘ஓகே பூமர்’ என்கிற ஒற்றைச் சொல்லால் மறுதலிக்கின்றனர். தமிழ் இணைய உலகிலும், ‘பூமர்’, ‘யங் பூமர்’ ஆகிய சொற்கள் வகைதொகையில்லாமல் அள்ளித் தெளிக்கப்பட்டன.

ஒடிடி - வெப்சீரிஸ்

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலம் ‘ஒடிடி’ தளங்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கு வித்திட்டது. வெப்சீரிஸும் பரவலாகியிருக்கிறது. திரையரங்குகளில் வெளியாகும் படங்கள், சில மாதங்கள் கழித்து ‘இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக’ வெளியாகும் நிலை மாறித் திரையரங்குகளிலிருந்து நேரே ஒடிடியில் வந்துவிடுகின்றன. ‘ஒடிடி-யா, தியேட்டரா?’ என்ற சூழல் வந்துள்ளது. எந்த மொழிப் படமாக இருந்தாலும் சொந்த மொழியில், ஒடிடியில் காண முடியும் என்பது ஒரு வசதி,

பன்நெருக்கடிகள் (Polycrises)

பெருந்தொற்று, அதிதீவிரக் காலநிலை நிகழ்வுகள், மூன்றாம் உலகப் போருக்கான அச்சுறுத்தல், பணவீக்கம், பொருளாதார மந்தத்துக்கான முன்கணிப்புகள், மனநலப் பிரச்சினைகள் எனச் சமகாலத்தின் முதன்மைப் பிரச்சினைகளின் பட்டியல் பெரிது. இப்படி அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு எனப் பல தளங்களில் தீவிரமடைந்து வரும் சிக்கல்களும் மனிதச்செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளும் தீவிரமடையும் இக்காலகட்டத்தை, ‘பன்நெருக்கடி’களின் (Polycrises) காலமாக அரசியல்-பொருளாதார வரலாற்றறிஞர்கள் வரையறுக்கின்றனர். ஏறக்குறைய இதே பொருளில், நீடித்த காலத்துக்கு நிலவும் ஸ்திரமின்மையையும் பாதுகாப்பின்மையையும் குறிக்கும் சொல், ‘நிரந்தர நெருக்கடிகள்’ (Permacrisis).

லே-ஆஃப்

‘கரோனா’வைவிட அதிகம் அச்சமடையச் செய்த சொல், ‘லே-ஆஃப்’. பொதுமுடக்கத்தால் சிறு-குறு நிறுவனங்கள் தொடங்கி பெருநிறுவனங்கள் வரை சரமாரியான ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. 2022இல் இயல்புக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் வந்தது ‘லே-ஆஃப்’. மெட்டா, அமேசான், அலிபாபா, டிவிட்டர் என உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கையால், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த ஆண்டு வேலையிழந்தனர்.

5ஜி

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் 4ஜி தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டமாக, 5ஜி சேவை அக்டோபர் 1
அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அபரிமித இணைய வேகம், குறையும் தாமதம், பெரிய வலைப்பின்னல் வசதி, கூடுதலான நம்பகத்தன்மை ஆகிய திறன்களின் மூலம் பயனர்களுக்குச் சீரான, மேம்பட்ட இணைய அனுபவத்தை 5ஜி நெட்வொர்க் வழங்கும். இந்திய மாநிலங்களில் பெரும்பான்மையாக வட மாநிலங்களே, 5ஜி பற்றிய கூகுள் தேடல்களில் அதிகம் ஈடுபட்டுள்ளன; குஜராத் அதில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது!

திராவிட மாடல் அரசு

கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் ஆட்சி-நிர்வாகத்தை முதன்மையாக ஆக்கிரமித்த சொல், ‘திராவிட மாடல்’. 2021 சட்டமன்றத் தேர்தலில் வென்று திமுக ஆட்சியைப் பிடித்தது; முதல்வராகப் பொறுபேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இதுதான் ‘திராவிட மாடல்’, என அச்சொல்லுக்கு விளக்கம் கூறினார்.

எழுவர் விடுதலை
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, 31 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய எழுவரையும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு விடுதலை செய்தது. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான மிகப் பெரிய அரசியல்-நிர்வாகப் பிரச்சினையாக நீடித்துவந்த ‘எழுவர் விடுதலை’, ஒரு தனித்த சொல்லாகத் தமிழக வரலாற்றில் பதிவாகிவிட்டது.

வாடகைத்தாய்

திரைப் பிரபலங்களான நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தைத் தொடர்ந்து, சில மாதங்களிலேயே அவர்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது பேசுபொருளானது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக (Surrogacy) அவர்கள் தெரிவித்த நிலையில், ‘வாடகைத்தாய்’ எனும் சொல், பொதுவெளியில் அதிகம் விவாதத்துக்குள்ளானது.

யுனிவர்ஸ்

“எனது ‘கைதி’யை இன்னொருமுறை பார்த்துவிட்டு ‘விக்ரம்’ அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் :)” என ‘விக்ரம்’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய தினம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தது, தமிழ்த் திரையுலகில் ‘யுனிவர்ஸ்’ கருத்தாக்கத்தின் பரவலாக்கத்துக்குத் தொடக்கமாக அமைந்தது.

வேர்டில்

குறுக்கெழுத்துப் புதிர்களின் நவீன வடிவமாக, சொல் விளையாட்டாக, கடந்த ஆண்டு பிரபலமானது ‘வேர்டில்’ (Wordle). ஜாஷ் வேர்டில் என்பவர் உருவாக்கிய ‘வேர்டில்’ விளையாட்டை, 7 இலக்க தொகையைக் கொடுத்து ‘நியூ யார்க் டைம்ஸ்’ வாங்கும் அளவுக்கு அதன் ‘மவுசு’ கூடியிருந்தது. ஆங்கிலம் தவிர்த்து ஒவ்வொரு மொழியினரும் தங்களுக்கான வேர்டிலை உருவாக்கிக் கொண்டனர். தமிழிலும்கூட இணையவாசிகளின் சொற்களஞ்சியத்தில் சில சொற்களையேனும் புதிதாகச் சே த்ததாக நம்பப்பட்டது!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in