ஒன்றரை ஆண்டில் 196 நாடுகள்!

ஒன்றரை ஆண்டில் 196 நாடுகள்!
Updated on
1 min read

எப்படி சச்சின் டெண்டுல்கர் செய்ததெல்லாம் சாதனையாக இருக்கிறதோ, எப்படி கருணாநிதி தொட்டதெல்லாம் சாதனையாக இருக்கிறதோ அப்படி ஒரு சாதனையைப் படைத்திருக்கிறார் அமெரிக்கப் பெண் கசன்ட்ரா டி பேகோல்.

அப்படி என்ன சாதித்துவிட்டார் என்கிறீர் களா? வெறும் ஒன்றரை வருடத்துக்குள் இந்தப் பூகோளத்தில் உள்ள அத்தனை நாடுகளுக்கும் சென்றுவந்திருக்கிறார். ‘குறைந்த வயதில் உலகைச் சுற்றியவர்’, ‘மிகக் குறைந்த நாட்களில் உலகின் பல பகுதிகளுக்குச் சென்றவர்’, ‘15 மாதங்களில் 254 விமானங்களில் பயணித்தவர்’, ‘குறுகிய காலத்தில் உலகின் வெவ்வேறு பகுதியிலிருந்து சூரியனைப் பார்த்தவர்’, ‘குறுகிய காலத்தில் நான்கு பாஸ்போர்ட் புத்தகங்களைக் காலி செய்தவர்’ என்று சில உப சாதனைகளும் இவருடன் சேர்ந்துவிட்டன. இலோ லியு என்பவரது கின்னஸ் சாதனையையும் இவர் முறியடித்தார்.

அமெரிக்காவின் கனெக்டிகட் நகரைச் சேர்ந்த இவரின் வயது 27. இந்த உலகத்தை ஒரு ரவுண்ட் வந்தால் எப்படியிருக்கும் என்ற சாதாரண ஆசையையே லட்சியமாக்கி, ‘இலக்கு 196’ என்ற பெயரில் வீட்டிலிருந்து கிளம்பினார் கசன்ட்ரா. 2015 ஜூலையில் அமெரிக்காவிலிருந்து கிளம்பிய இவர், உலகிலுள்ள 196 நாடுகளில் இதுவரை 190 நாடுகளுக்குச் சென்றுவிட்டார். மீதமிருக்கும் 6 நாடுகளையும் இந்த வாரத்துக்குள் நிறைவு செய்துவிடுவார் என்கிறார்கள்.

இந்தப் பயணத்துக்குச் சுமார் 2 லட்சம் டாலர் (நம் நாட்டு மதிப்பில் சுமார் ரூ.1.30 கோடி) செலவழித்திருக்கிறார் கசன்டிரா. சென்ற எல்லா நாடுகளிலும் இரண்டு முதல் 5 நாட்கள் தங்கி அந்நாட்டின் இயற்கை அழகு, கலாச்சாரம், சுற்றுச்சூழல் குறித்த தகவல்களையும், புகைப்படங்களையும் எடுத்து இன்ஸ்டாகிராம் மூலம் உலகமறியச் செய்கிறார். இவர் எடுத்த சில புகைப்படங்கள் பிரமிக்க வைக்கின்றன.

கல்லூரியில் படிக்கும்போது, அமெரிக்கா வில் உள்ள ஒரு மழைக் காட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கிறார் கசன்ட்ரா. அப்போது கிடைத்த அனுபவம் காரணமாக உலகத்தையே சுற்றிவர வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது.

இதற்காக உணவகங்களில் உணவு பரிமாறுதல், வணிக வளாகங்களைச் சுத்தம் செய்தல், தோட்டங்களில் செடிகளை நடுதல் போன்ற வேலைகளைச் செய்து சேர்த்த பணத்தில் தனது 24 வயதில் ஒரு சுற்றுலா சென்றார். அப்போது அவரால் வெறுமனே 24 நாடுகளுக்கு மட்டுமே செல்ல முடிந்திருக்கிறது. உலகத்தையே சுற்ற வேண்டும் என்று முடிவு செய்த அவர், முந்தைய பயணம் மூலம் கிடைத்த அனுபவத்தோடு, பயணச் செலவுக்கு விளம்பர உபயதாரர்களின் உதவியை நாடினார். சாதித்துவிட்டார்.

நாமெல்லாம் பக்கத்து மாவட்டத்துக்குப் பயணப்பட்டாலே, அலுப்பாகி அரை நாள் விடுப்பெடுத்துவிடுகிறோம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in