

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 1919-ல் பிறந்தவர் சுசுமு ஓனோ. மொழியியல் அறிஞரான இவர், டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
1950-களில் ஜப்பானிய மொழியின் மூலத்தை அவர் ஆராயத் தொடங்கினார். முதலில் ஜப்பானிய மொழியை கொரியன் உள்ளிட்ட சில மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். பிறகு, அவரது கவனம் திராவிட மொழிகளின் மீது திரும்பியது. தமிழ் மொழியையும் ஆராயத் தொடங்கினார். தமிழ் படிக்க தமிழகத்துக்கு வந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பொற்கோவிடம் தமிழ் கற்றார்.
தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் இடையில் இலக்கியம், இலக்கணம், கல்வெட்டு, நாட்டார் வழக்காற்றியல் போன்றவற்றின் அடிப்படையில் உள்ள உறவை சுசுமு வெளிப்படுத்தினார். மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் இடையிலான உறவுபற்றி அவர் உரையாற்றினார்.
ஜப்பானிய மொழிகளின் வேர்ச்சொற்கள் தமிழோடு பொருந்துவதை விளக்க 500 சொற்களைச் சான்றாகக் காட்டிக் கட்டுரை எழுதியிருக்கிறார் சுசுமு. ‘தமிழ் - ஜப்பானிய ஒலி ஒப்புமை' என்ற நூலையும் அவர் எழுதினார்.
தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் மொழிக்கூறுகளில் ஒப்புமை இருப்பதுபோலவே இலக்கியப் பாடுபொருளிலும் ஒற்றுமை உள்ளது என்று சுசுமு அறிவித்தார். இரண்டு மொழிகளுக்கும் இடையே உள்ள உறவை 30 ஆண்டுகளாக ஆய்வுசெய்து 1999-ல் அதை நூலாக வெளியிட்டார். தனது 89-வது வயதில், 2008-ல் பேராசிரியர் சுசுமு ஓனோ டோக்கியோவில் இயற்கை எய்திய நாள் இன்று.