

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு புத்தகம் எழுதும் களப்பணிக்காக திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்தபோது, அவர் என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது. ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று பொது மேடையில், முதல்வர் ஜெயலலிதாவை அவர் பாராட்டியிருந்தார். பிராமணியத்தை எதிர்த்த திராவிட கழகத் தலைவரான அவர், பிராமணரான ஜெயலலிதாவைப் பாராட்டுவதும், பிராமண எதிர்ப்பிலிருந்து பிறந்த ஒரு திராவிடக் கட்சித் தலைவியாக ஜெயலலிதா இருப்பதும் முரண்பாடாகத் தெரியவில்லையா என்று கேட்டேன். இல்லவே இல்லை என்றார் அவர் அழுத்தமாக.
“ஜெயலலிதா பாசாங்குக்காரர் இல்லை. தான் ஒரு பகுத்தறிவுவாதி என்று என்றுமே சொன்னதில்லை. பெரியார் கனவுகண்ட புதுமைப் பெண்ணாக நான் அவரைக் காண்கிறேன். சுதந்திரமாக, துணிச்சலாக, நேர்மையாகச் செயல்படும் தன்மை உள்ளவராக. ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று பெரியார் நினைத்தாரோ அத்தகைய சிறப்புகளைக் கொண்டவர் அவர்.”
இன்று மக்கள் மத்தியில் கட்சிக்கு அப்பாற்பட்டு மிக அதிகபட்ச செல்வாக்கையும் மதிப்பையும் அன்பையும் பெற்ற மக்கள் தலைவராக ஜெயலலிதா வளர்ந்திருப்பது, அவர் கடந்து வந்திருக்கும் பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது எனக்கு மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அரசியல் களத்தில் தலைமைப்பீடம் என்று வரும்போது, பால், இன பேதம் என்பது இல்லை என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், ஆணாதிக்கம் மிகுந்த இந்திய அரசியலில், முக்கியமாக தந்தைவழி மரபுசார்ந்த தமிழகத்தில் ஒரு பெண் நுழைவதும், அதில் வெற்றி பெறுவதும் அசாதாரண விஷயம் என்பதில் சந்தேகமில்லை.
பெண் என்ற காரணத்தாலேயே பல முட்டுக்கட்டைகளையும் எதிர்ப்புகளையும் அவமானங்களையும் அவர் சந்திக்க நேர்ந்தது என்பது அவரது வாழ்க்கைச் சரித்திரத்தை அறிந்தவர்கள் நன்றாக உணர்வார்கள். ஆனால், மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த பலவீனத்தையே அவர் தனது பலமாக, ஆக்கபூர்வ ஆயுதமாக மாற்றிக்கொண்டார்.
தெய்வீக பிம்பம்
ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும் அவர் மீண்டு, அதிக பலத்துடன் எழுந்தது எப்படி? இனி அவர் அரசியல் வாழ்வு முடிந்தது என்று இரங்கற்பா பாடியவர்கள் அவரது தளராத முன்னேற்றத்தைக் கண்டு வாயடைத்துப்போனது ஏன்? ஒரு பிரபல நடிகையாக இருந்தவர், கர்நாடகத்தில் பிறந்தவர், திராவிட இயக்கம் எதிர்த்த பிராமண வகுப்பில் பிறந்தவர் - அனைத்திந்திய திராவிடக் கட்சியின் தலைவியாக, நான்குமுறை தேர்தலில் வெற்றிபெற்று இன்று மக்கள் ஆராதிக்கும் அன்னையாக, அவர் சார்ந்த கட்சி தன் இருப்புக்கு நம்பியிருக்கும் தலைவியாக, ரட்சிக்கும் தெய்வமாக உருவானது மகா பெரிய அதிசயமாகத் தோன்றுகிறது.
அவருடைய வாழ்வு சொல்லும் செய்தி மிகத் தெளிவானது - உற்றார், உறவினர், புரவலர் என்று யாருமற்ற தனி நபராக ஒரு பெண் இந்திய அரசியலில் வெற்றிபெறுவதும் தலைமைப் பீடத்தில் தொடர்ந்து இருப்பதும் அசகாய சூரத்தனம். இன்னொரு செய்தியும் முக்கியமானது: அத்தகைய போராட்டம் மிகுந்த வாழ்வில் எப்படி ஒரு பெண் தன்னையே மாற்றிக்கொள்வாள் என்பது.
1983-ல் ஜெயலலிதா நாடாளுமன்ற உறுப்பினராக டெல்லி வந்தபோது, தமிழ்நாடு இல்லத்தில் ஒரு இந்தி பத்திரிகைக்காக பேட்டி காணச் சென்றேன். முன்னாள் நடிகை என்று சொல்ல முடியாத வகையில், மிக எளிமையாக, ஒப்பனை செய்யாத இயல்பான முகத்துடன் இருந்தார். நாடாளுமன்றத்தில் அவர் குஷ்வந்த் சிங் போன்ற அறிவுஜீவிகளின் நற்சான்றைப் பெற்றிருந்தார். வட இந்தியர்கள் இத்தகைய ஒரு பெண்ணைச் சந்தித்ததில்லை. நல்ல நிறத்துடன், சுத்தமான ஆங்கிலம் பேசும் முன்னாள் நடிகை, அவர்களை ஆச்சரியப்படுத்திய விஷயமாக இருந்திருக்க வேண்டும். எனது பேட்டியின்போது ஜெயலலிதா மிகுந்த தன்னம்பிக்கையுடன் பேசினார்.
அனேகமாக எனது கேள்விகளுக்குச் சவால் விடுவதுபோலவே அவருடைய பதில்கள் இருந்தன. அவரது தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி நான் குதர்க்கமாக ஒரு கேள்வி கேட்டபோது, அவர் படபடத்தது இன்னமும் நினைவிருக்கிறது. ‘‘டெல்லியில் அமர்ந்துகொண்டு பேசாதீர்கள்.. தமிழ் நாட்டுக்கு வந்து பாருங்கள்.. மக்கள் அவரை எப்படி தெய்வமாக மதிக்கிறார்கள் என்று.”
இப்போது நினைத்துப்பார்க்கும்போது தோன்றுகிறது - ‘ஒருநாள் என்னையும் மக்கள் தெய்வமாகப் போற்றுவார்கள்’ என்று அவர் சொல்லாமல் சொன்னாரோ? அன்று அது மிகப் பெரிய கற்பனைக் கூற்றாகத் தோன்றியிருக்கும். தமிழக ஆணாதிக்க அரசியல் சூழலில், பிராமண எதிர்ப்பு மிக்க சூழலில், தமிழ் எங்கள் மூச்சு என்று முழங்கிய வரலாற்றில், வீட்டில் தமிழைவிட கன்னடத்தை அதிக சரளத்துடன் பேசிய, மைசூரில் பிறந்த பிராமணரான ஜெயலலிதா, முன்னாள் நடிகை, ஒரு பெண், தமிழக முதல்வராவதா? எத்தனை அபத்தமான கற்பனை?
அவமானத்துக்கான பரிகாரம்
அதிசயம், ஆனால் உண்மை. அசாத்தியம் என்று நினைத்ததை அவர் தனி நபராகச் சாத்தியமாக்கினார். எம்ஜிஆரின் வாரிசு அவர்தான் என்று கட்சித் தொண்டர்கள் நினைத்து அவரை ஆதரித்தாலும், தலைமைப் பண்புகள் இல்லாமல் அவர் கட்சியின் தலைவராகத் தொடர்ந்து இருப்பது சாத்தியமில்லை. அதுவும் எப்படிப்பட்ட தலைவி! அவருக்கு அடுத்து எவரும் இல்லை என்பதுபோன்ற சக்திவாய்ந்த தலைவி! பாலின, மத, இன, கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்ட வீச்சை அவரது ஆளுமை அடைந்ததற்கு அவரது சொந்த முயற்சியும் மதியூகமுமே காரணம் என்று தோன்றுகிறது.
அவர் முதல் இருமுறை முதல்வராக இருந்த காலகட்டங்களில், நான் தமிழ் ‘இந்தியா டுடே’யின் ஆசிரியையாக இருந்தபோது, மிகக் கூர்ந்து அவரது ஆட்சியையும் செயல்பாடுகளையும் கவனித்திருக்கிறேன். அவருடைய அமைச்சர்கள், ஆண்கள் சாஷ்டாங்கமாக அவர் முன் விழுந்து வணங்குவதை அவர் புன்னகையுடன் ஏற்றதைக் கண்டு முகம் சுளித்திருக்கிறேன். இப்போது புரிகிறது, அதுவும் அவரது ஒரு உத்தி என்று. ஆண்களைச் சற்று எட்டி நிறுத்த வேண்டிய அவசியம் தமிழகச் சூழலில் மிக அவசியமாக இருந்தது.
எந்த ஆணுடனும் பதவிக் காலத்தில் அவர் நெருக்கமாகப் பேசினார் என்கிற பேச்சுக்கு இடமளித்தால், மக்கள் மனதில் அவர்மீதான மதிப்பு குறைந்துபோகும் என்று அவருக்குத் தெரியும். தவிர, எதிரணி அதைச் சாக்காக வைத்து அவதூறு பரப்பும். அதனால், விழட்டும் ஆண்கள் அவர் காலடியில். ஆண் உலகம் அவரை அவமானப்படுத்தியதற்கான பரிகாரமாக இருக்கட்டும்.
ஃபீனிக்ஸ் பிறவி
அவர் தவறுகள் செய்தபோது தப்பாமல் விமர்சித்திருக்கிறேன். மாநில முதல்வராக அவர் பணியாற்றுகையில், பெண் என்கிற காரணத்தால் தவறுகளை மன்னிக்க முடியாது என்று தோன்றும். ஒரு பெண்ணாக அவரிடமிருந்து மென்மையான அணுகுமுறையை எதிர்பார்த்தேன். அவரது எதேச்சாதிகார, அடக்குமுறைச் செய்திகள் வந்தபோது ஏமாற்றத்துடன் கூசிப்போயிருக்கிறேன். சமூகத்தில் முக்கிய பதவியில், மாநிலத் தலைமைப் பதவியில் இருக்கும் பெண், அதிகக் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாக நேரிடும் என்பது உண்மை. ஏனென்றால், அவர் ஆண் தலைவர்களிடமிருந்து வேறுபட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கும்.
அதனாலேயே அவரை மக்கள் 1996 தேர்தலில் புறக்கணித்தார்கள். பிறகு, அவர் சிறையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் இருந்தபோது நிலைமை மாறிவிட்டது. ஏகப்பட்ட ஊழல் வழக்குகள் அவர்மீது போடப்பட்டன. நகைகள், சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இனி அவருக்கு அரசியல் எதிர்காலமில்லை என்றார்கள். அவர் சொல்லிக்கொண்டதைப் போல அவர் ஃபீனிக்ஸ் பறவைதான். ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும் அவர் தன்னைப் புதுப்பித்துக்கொண்டதே அவரது வெற்றிக்குக் காரணம் என்று தோன்றுகிறது.
அவரது தேர்தல் பிரச்சாரங்களை நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அலங்காரப் பேச்சு இருக்காது. நீண்ட பிரசங்கம் இருக்காது. ஆனால், கேட்பவர் நெஞ்சில் ஆணித்தரமாகப் பதியும் வகையில், எதிரியைத் தாக்குவதாக இருக்கும். காதிலும் கழுத்திலும் நகை இல்லாமல் அவர் மக்கள் முன்னால் நிற்கையில், பெண்கள் கூட்டம் உருகிப்போவதை நான் நேரில் கண்டேன். ‘ அந்தப் படுபாவி... எல்லாத்தையும் புடுங்கி வெச்சுக்கிட்டாராமில்லே’ என்று பெண்கள் பேசினார்கள்.
ஜெயலலிதா புடவை தலைப்பை விரித்து, ‘‘உங்கள் சகோதரி மடிப்பிச்சை கேட்கிறேன்” என்று சொன்னபோது, இது என்ன நாடகத்தனம் என்று நான் நினைத்தது உண்மை. ஆனால், அவருக்குப் பெண்களின் உணர்வுகள் புரிந்திருந்தன. 1996-ல் அவரை நிராகரித்தவர்கள் அதை முற்றிலும் மறந்து, 2001-ல் அவருக்கு அமோக வெற்றியை அளித்தார்கள். ஆனால், அவர் தவறு செய்தபோதெல்லாம் நிராகரித்தார்கள். அவர் சளைக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
அதைவிட ஆச்சரியம், அவர் தனது கட்சியைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டது. கட்சிக்கு அவரது முகமே பலம் என்பதால் இருக்கலாம். இருந்தும், ஒரு பெண் அதை சாதித்தது நம்ப முடியாததாக இருக்கிறது. வாக்கு வங்கி சரியவில்லை.. எதிர்க் கட்சியை அடியோடு பலவீனப்படுத்தினார்.. எப்படிச் சாத்தியமாயிற்று? சகோதரி மிகச் சுலபமாக அம்மா ஸ்தானத்துக்கு மாற முடிந்தது.
அம்மாவின் பெயரிலேயே எல்லா மக்கள் நலத் திட்டங்கள்; அவருடைய முகமே எங்கும். அரசாங்கத்தில் அவர் ஒருவரே பிரதானம். கட்சி அதை பவ்யத்துடன் ஏற்றுக்கொண்டது. அமைச்சர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டபோது, பேசாமல் ஏற்றுக்கொண்டார்கள். கட்சியில் சிறு முணுமுணுப்பு கிளம்பாது. அவரில்லாமல் அவர்கள் இல்லை. அவரே அவர்களுடைய சூத்திரதாரி. தெய்வம்.
பெண்களின் நாயகி
பெண்களுக்கு என்று இருக்கும் பிரத்தியேகப் பிரச்சினைகளை அவர் புரிந்துகொண்டார். பள்ளிகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு சைக்கிள் கொடுத்தது பெரிதில்லை, சானிடரி நாப்கின்கள் தேவை, கழிப்பறை தேவை என்று செயல்பட்டது புதுமையானது. பேருந்து நிலையங்களில் இளம் தாய்மார்களுக்குக் குழந்தைக்குப் பாலூட்ட வசதியாகத் தனியாக ஒரு அறைக்கு ஏற்பாடு செய்ததும் புதுமை.
அதனாலேயே பெருவாரியான பெண்கள் அவருக்கு விசுவாசிகளாக மாறிப்போனார்கள். அவர் நோய்வாய்ப்பட்டபோது கோயில்களுக்குச் சென்று பூஜை செய்தார்கள். அங்கப்பிரதட்சணம் செய்தார்கள். காவடி எடுத்தார்கள். அவர் சிறையில் இருந்தபோதும், நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பும் கடவுளை வேண்டினார்கள். அம்மா சோதனைகளைக் கடந்தபோது கடவுள் அம்மாவின் பக்கம் என்று நம்பினார்கள்.
அமைச்சர்களும் அதிகாரிகளும் அவரைக் கண்டு அஞ்சிச் செயல்படுவதுபோல எந்த மாநிலத்திலும் கண்டதில்லை. அவரை ஆராதிக்கும், அன்பு செலுத்தும் மக்கள் கூட்டம் அவருக்கு இருப்பது போல தமிழகத் தலைவர்கள் வேறு எவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த இரு நிலைகளையும் தனது அடையாளமாக இருத்திக்கொண்ட பெண்மணியை வேறு எங்கும் பார்க்க முடியாது.
சாதாரணப் பெண்ணாக வாழ்ந்திருக்க முடியும். அவமானங்களைக்கண்டுகொள்ளாமல், சோதனைகளுக்குச் சவால் விடாமல் இருந்திருக்க முடியும். வரலாற்றிலிருந்து மறைந்திருக்க முடியும். ஆனால், அவரது வாழ்க்கை அசாதாரணமானதாயிற்று. வரலாறு படைத்தது. ஏனென்றால் அவர் ஜெயலலிதா!
- வாஸந்தி, ஜெயலலிதாவைப் பற்றிய ‘அம்மா’ (ஆங்கிலம்) உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்,
மூத்த பத்திரிகையாளர்
தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com