

இந்த ஆண்டின் தொடக்கத்தில், தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவே கரோனாவை மறக்கத் தொடங்கியிருந்தோம். ஆனால், ஆண்டு தொடங்கிய இரண்டே மாதங்களில் ரஷ்யா-உக்ரைன் போர் மூண்டது. இந்நிகழ்வு அரசியலில் மட்டுமல்ல, அறிவியலிலும் பாதிப்பைக் கொண்டுவந்தது. இத்தகைய சூழலிலும், உலகளவிலும் இந்திய அளவிலும் திருப்பம் தந்த அறிவியல் நிகழ்வுகள் பல நடந்தேறியுள்ளன.
உலகளாவிய அறிவியல் நிகழ்வுகள்: ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி: சந்தேகத்துக்கு இடமின்றி, இந்த ஆண்டின் முக்கிய அறிவியல் நிகழ்வாக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கருதப்படுகிறது. அகச்சிவப்புக் கதிர்களை உள்வாங்கும் இந்தத் தொலைநோக்கியானது, ஹப்பிள் தொலைநோக்கியைவிடத் துல்லியமாகவும் நுணுக்கமான தரவுகளுடனும் ஆழ்புலத்தைப் படம்பிடித்திருக்கிறது.
பெருவெடிப்பின்போது உருவான முதல் விண்மீன் கூட்டங்கள், பூமியைப் போன்று உயிர்வாழத் தகுந்த புறக்கோள்கள் பிரபஞ்சத்தில் வேறெங்கும் இருக்கின்றனவா, விண்மீன் கூட்டங்கள் எவ்வாறு ஒன்றோடொன்று இணைகின்றன என்பன போன்ற பல்வேறு அம்சங்களைத் தொடர்ந்து கண்டறிந்துவருகிறது.
செயற்கை நுண்ணறிவு: செடி, கொடி தொடங்கி அனைத்து உயிரினங்களிலும் ஆயிரக்கணக்கான புரத வகைகள் உள்ளன. புரதங்களின் வடிவம் என்ன, அவற்றில் உள்ள மூலக்கூறுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று கண்டறிவது உயிரியலிலும் வேதியியலிலும் முக்கியமாகும். முன்பு ஒரு புரதத்தின் அமைப்பைக் கண்டறிவதற்கே பல ஆண்டுகள் ஆகும்.
ஆனால், சில மாதங்களிலேயே 20 கோடிக்கும் மேலான புரதங்களின் வடிவமைப்பைக் கணித்துள்ளது செயற்கை நுண்ணறிவு. மேலும், இவ்வாண்டில் புகைப்படங்கள், காணொளிகள் உருவாக்கத்திலும் எடிட்டிங் முதற்கொண்டு ஆற்றல், விண்வெளி எனப் பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் நீள்கிறது.
ஜோடி சிறுகோள்களைத் திசைதிருப்பும் பரிசோதனை (Double Asteroid Redirection Test–DART): 12,742 கி.மீ. விட்டம் கொண்ட புவியை, வெறும் 10 – 15 கி.மீ. விட்டமே கொண்ட ஒரு சிறுகோள் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மோதியதில், புவியிலிருந்த டைனசோர் உள்பட மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழிந்துபோயின. தற்போது புவியைச் சுற்றியுள்ள 20 ஆயிரத்துச் சொச்சம் சிறுகோள்களில் ஆபத்தை விளைவிப்பவை ஆயிரக்கணக்கில் உள்ளன. இவற்றிலிருந்து பூமியைக் காக்கும் முதல்முயற்சியாக, டிமார்போஸ்-டிடிபோஸ் என்னும் ஜோடி சிறுகோள்களில், ஒன்றன் மீது நாம் அனுப்பிய ‘டார்ட்’விண்கலம் மோதி, இரண்டு சிறுகோள்களின் பாதையிலும் மாற்றத்தை உண்டுபண்ணியுள்ளது.
அச்சுறுத்தும் விண்பொருட்களின் தாக்கத்திலிருந்து எதிர்காலத்தில் பூமியைப் பாதுகாக்க இக்கண்டுபிடிப்பு உதவும். இவை தவிர, கனடாவில் பூமிப் பரப்புக்கு அடியில் உள்ள உறைபடலத்தில், 35,000 ஆண்டுகாலப் பழமையான கம்பளி யானைக் (woolly mammoth) குட்டியின் படிமம் கண்டுபிடிக்கப்பட்டது; மூன்றாண்டுகளுக்கும் மேலாகப் பராமரிப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட ‘செர்ன் துகள் முடுக்கி’ மீண்டும் தன் பணியைத் தொடங்கியது; கீமோதெரபி இல்லாமல், மருந்து வழியாகவே பெருங்குடலில் உண்டாகும் புற்றுநோயை 10க்கும் மேற்பட்ட நபர்களில் குணப்படுத்தியது; மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்புவதில் சோதனையோட்டமான ஆர்டிமிஸ்-1 (ARTEMIS-1) விண்கலத்தின் வெற்றி எனப் பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.
இந்த ஆண்டு அறிவியல் நிகழ்வுகளுக்குப் பஞ்சமில்லை என்றாலும், பாதகமாகவும் சில நடந்தேறியுள்ளன. உக்ரைன்-ரஷ்யப் போரானது அறிவியலிலும் பாதிப்பைத் தந்துள்ளது. குளிர்ப் பிரதேசங்களிலிருந்து எடுக்கும் மாதிரிகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளில் ரஷ்யா கைதேர்ந்தது. மேலும், ரஷ்யாவின் உதவியும், தொடர்பும் இல்லாமல் ஆர்க்டிக் பகுதியில் ஆய்வு மேற்கொள்வது சிக்கலானதால், காலநிலை மாற்றம் சார்ந்த ஆய்வுகள் பாதிக்கப்பட்டன.
இந்திய அறிவியல் நிகழ்வுகள்: தடுப்பூசி: கரோனா நோய்த்தொற்றுக்கான கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது மட்டுமல்லாமல், பலர் அந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார்கள். கரோனா தொற்றுக்கு நாசிவழி செலுத்தப்படும் (iNCOVACC) முதல் தடுப்பு மருந்தை இந்தியா இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஊசிவழியே தடுப்பூசி செலுத்துவதற்குத் தேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் தேவை. ஆனால், நாசிவழி எளிதானது. இம்மருந்து கரோனா தொற்றுக்கானது என்றாலும், எதிர்காலத்தில் பல்வேறு நோய்களுக்குமான தடுப்புமருந்துக் கண்டுபிடிப்புகளில் முக்கிய நகர்வாகவும் இது இருக்கும்.
திரவக் கண்ணாடித் தொலைநோக்கி: சர்வதேச திரவக் கண்ணாடித் தொலைநோக்கி (4m International Liquid Mirror Telescope) எனப்படும் இந்தியாவின் முதல் திரவநிலைத் தொலைநோக்கியானது, உத்தராகண்டில் உள்ள ஆர்யபட்டா நோக்குதற்குரிய அறிவியல் ஆய்வு மையத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஒரு குவளையில் நீரை எடுத்து அதை வேகமாகச் சுற்றினால், அது பரவளைய வடிவை மேற்கொள்ளும் அல்லவா? அதேபோல, திரவப் பாதரசமானது, 4 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு பரப்பில் வைத்துத் தொடர்ச்சியாகச் சுற்றிக்கொண்டே இருக்கும்படி வைக்கப்படும்.
இவ்வகைத் தொலைநோக்கிகளைத் தயாரிப்பது எளிது. பெருவெளியில் உள்ள விண்மீன் கூட்டங்கள், விண்மீன் வெடிப்பு முதல் சூரியக் குடும்பத்தில் உள்ள சிறுகோள்கள், வால்வெள்ளிகள் எனப் பலவித விண்பொருள்களை ஆராய இவை பயன்படும்.
ககன்யான் (Gaganyaan): விண்வெளியிலிருந்து மனிதர்கள் புவிக்குத் திரும்பும்போது, அவர்களைத் தாங்கிவரும் பாராசூட்டானது மிதமான வேகத்தில் பயணித்துத் தரையிறங்க வேண்டும். புவிப் பரப்பிலிருந்து 2,500 மீட்டர் உயரத்துக்கு விமானத்தில், பாராசூட் அமைப்புகளும் விண்வெளி வீரர்களின் எடைக்கு ஏற்ப மாதிரிப் பொருள்களும் எடுத்துச்செல்லப்பட்டு, அங்கிருந்து விடுவிக்கப்பட்டன; இந்த ஆய்வு வெற்றியில் முடிந்தது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஒரு முக்கியப் படியாக இது அமைந்தது.
தாழ்வெப்பப்பெட்டி (cryostat): மைனஸ் 270 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலை, ‘தாழ்வெப்பம்’ ஆகும். சர்வதேச அணுக்கருச் சேர்க்கை ஆய்வு நிறுவனத்தில் பயன்படவுள்ள 16,000 கனமீட்டர் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட தாழ்வெப்பப் பெட்டியை இந்தியாவின் லார்சென் அண்ட் டூப்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. இத்தொழில்நுட்பமானது, மருந்துப் பொருட்களைச் சேமிக்க, எம்.ஆர்.ஐ இயந்திரங்களில் இருக்கும் காந்தங்களைச் செயல்பட வைக்க எனப் பல இடங்களில் அவசியமானது.
பல்வேறு துறைகளில் சிறப்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இவ்வாண்டின் வருந்தத்தக்க விஷயமாக இந்திய அறிவியலாளர்களுக்கு வழங்கப்படும் விருதுகளின் எண்ணிக்கையும் நல்கையும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. ஆய்வை நோக்கிய முனைப்பைக் குறைக்கும் செயல் இது. உலக மக்கள்தொகை இந்த ஆண்டு 800 கோடியைத் தொட்டுள்ளது; இதில் இந்திய மக்கள்தொகை மட்டும் 130 கோடிக்கும் மேலே.
எனவே, இந்தியச் சூழலை மையப்படுத்தி வேளாண், மருத்துவம், சுற்றுச்சூழல் எனப் பல்துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்நிலையில் ஆய்வுப் பணிக்குள் மாணவர்களையும் பல்துறை நிபுணர்களையும் உள்ளிழுக்கும்படி அறிவியல் கொள்கைகளை அமைத்து, அதற்கேற்றபடி நிதியும் ஒதுக்குவது காலத்தின் கட்டாயமாகிறது. - இ.ஹேமபிரபா, அறிவியல் எழுத்தாளர் தொடர்புக்கு: hemazephyrs@gmail.com