

பெருந்தொற்று நெருக்கடியில் வாழ்வாதாரத்தை இழந்த பல குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்த்தன. இப்போதுவரை அந்தக் குடும்பங்களின் வாழ்க்கை பழைய நிலைக்குத் திரும்பவில்லை.
கோவையில் சுயநிதி மேல்நிலைப் பள்ளி ஒன்றின் விவரங்களைப் பார்த்தபோது, 500 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருப்பது தெரிந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூரிலும் தனியார் பள்ளி ஒன்றிலிருந்து 400 மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு மாறியுள்ளார்கள். ஒட்டுமொத்தமாக, தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு மாறியுள்ளார்கள். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை மேம்படுத்தி, பாதுகாக்கும் அவசியத்தை இது உணர்த்துகிறது.
சாதனைப் பள்ளிகள்: ஈரோடு மாநகராட்சியின் இடையன்காட்டு வலசுவில் அமைந்த உயர்நிலைப் பள்ளி, 1917க்கு முன்பே ஆரம்பப் பள்ளியாகத் தொடங்கப்பட்டது; 1987இல் நடுநிலைப் பள்ளியான இது, 2010இல் உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. தொடக்கம் முதலே பொதுத் தேர்வில் 100% தேர்ச்சியுடன் சாதனையைத் தொடர்கிறது.
2016 இல் தொடங்கிய சூரிய ஒளி மின் உற்பத்தியில், தமக்குப் போக மீதியை மின்வாரியத்துக்கு வழங்குகிறது. 2017இல் தூய்மைப் பள்ளிக்கான விருதைப் பெற்றது. பெற்றோர்-ஆசிரியர் கழக உதவியுடன் மாடித் தோட்டம் அமைக்கப்பட்டு, அதற்கான ஊழியர்களும் நியமிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது; அங்கு விளையும் காய்கறிகள் சத்துணவில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தப் பள்ளியில், 6 முதல் 10 வகுப்புகளில் 639 மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். போதிய இடவசதி இல்லாததால் கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க முடியவில்லை, விளையாட்டுத் திடல் அமைக்க முடியவில்லை என்பதெல்லாம் இங்கு பெரும் குறைகளாக இருக்கின்றன. இருப்பினும், இந்தப் பள்ளியின் சாதனைகள் பாராட்டுக்குரியவை. 1918இல் ஈரோடு நகர்மன்றத் தலைவராக இருந்த தந்தை பெரியார், இப்பள்ளியைப் பார்வையிட்டுள்ளார். அவர் முயற்சியில் மாதம் ஒரு ரூபாய் சம்பளத்தில் ஒரு துப்புரவுப் பணியாளர் நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அசோக் நகர் பள்ளி: சென்னை அசோக் நகரில் 1962 இலிருந்து மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. 4,157 பேர் இங்கு படிக்கிறார்கள். மாநகரில் உள்ள பள்ளிகளிலேயே, இந்த எண்ணிக்கைதான் அதிகம். 10, 2 பொதுத் தேர்வுகளில் 98% தேர்ச்சியுடன் இந்தப் பள்ளி இயங்கிவருவது பெரும் சாதனையாகும். இந்தப் பள்ளியில் மொத்தம் 124 ஆசிரியர்கள் உள்ளனர். ஒரு நூலகம் வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தேடிச் செல்லும் விதத்தில் இந்தப் பள்ளி இயங்கிவருகிறது.
விருகம்பாக்கம் பள்ளி: விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பள்ளி, 2002இல் மேல்நிலைப் பள்ளியானது. கரோனாவுக்குப் பின் 120 மாணவர்கள் அதிகரித்து, இப்போது 3,200 பேர் படிக்கிறார்கள். 90 ஆசிரியர்கள் 3 உடற்பயிற்சி ஆசிரியர்கள் உள்ளனர். இப்பள்ளி மாணவிகள், ஹாங்காங்கில் நடந்த தெற்காசிய சர்வதேசப் போட்டியில் 100 மீட்டர் தடையோட்டப் பந்தயத்திலும் நீளம் தாண்டுதலிலும் தங்கம் வென்றனர். தேவைக்கு ஏற்பச் சிறப்பு வகுப்புகள் மாலை 4 முதல் 5 மணி வரை நடத்தப்படுகின்றன. 2வில் 96% மாணவிகள் தேர்ச்சி பெற்றுவருகின்றனர்.
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சியில் இருபாலர் பயின்றுவந்த பள்ளியில் இருந்து, 1984இல் பெண்கள் உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது; 1996இல் மேல்நிலைப் பள்ளியானது. இப்போது 724 மாணவிகள் படிக்கிறார்கள். கற்றல் இழப்பை ஈடுசெய்ய, அரசு முன்னெடுத்த ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் அல்லாமல், இந்தப் பள்ளியில் தலைமையாசிரியர் ஒரு புதிய உத்தியை மேற்கொண்டார். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களில் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தி, கற்றல் திறனை அறிந்து, அதற்கேற்ப சிறப்புப் பயிற்சி தருகின்றனர்.
ஆசிரியர்களின் பணி: மேற்கண்ட பள்ளிகளோடு, தமிழ்நாட்டில் ஏராளமான சாதனைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் எல்லாம் ஆசிரியர்கள் தலைமையாசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு ஆகியோரின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் முக்கியமானவை; ‘இல்லம் தேடிக் கல்வி’, அறிவியல் செயல்பாடுகளுக்கான ‘வானவில் மன்றம்’ ஆகிய திட்டங்களும் வரவேற்புக்குரியவை.
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு இல்லாமல், கல்வி நிலையங்கள் சிறந்து விளங்க முடியாது. அண்மையில், ஆசிரியர்களிடமிருந்து ஒரு முக்கியமான கோரிக்கை எழுந்தது. கல்வியியல் மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) அமைப்புக்காக, கணினியில் தகவல் பதிவேற்றம் செய்வதற்காக அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. இது மிக அவசியமான பணிதான். தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டால், மேலாண்மை எளிதாகும். ஆனால், இந்தப் பணிகளுக்காகக் குறுவள மைய அளவுகளில் அலுவலர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர்களின் கற்பித்தல் பணியைப் பாதிக்கக் கூடாது.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு, திட்டமிட்ட செயல்பாடு முக்கியம். ஒரு பஞ்சாலையில், ஒரு ஆண்டில் 10 ஆயிரம் மீட்டர் துணி உற்பத்தி குறைந்துபோனால், அடுத்த ஆண்டில் அந்த உற்பத்தியைச் செய்து ஈடுகட்டிவிடலாம். கல்வி என்பது அப்படியானது அல்ல. ஓராண்டில் நமது கவனம் குறைவாக இருந்தால் அது மாணவர்களின் எதிர்கால வளர்ச்சியையே முடக்கிவிடும். எனவேதான், ஆசிரியர்களுடைய பணிக் கலாச்சாரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது. அதற்கேற்ப அரசு திட்டமிட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய, விளிம்புநிலைக் குடும்பங்களில் இருந்துவரும் குழந்தைகள், பெரும்பான்மையாக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். சாதனை படைக்கும் அரசுப் பள்ளிகளின் பின்னணியில் ஆசிரியர்களோடு அரசு, பெற்றோர், சமூகம் ஆகியோரின் பங்களிப்பைப் பார்க்க முடிகிறது. இவ்வாறே அனைத்து அரசுப் பள்ளிகளையுமே சாதனைப் பள்ளிகளாக்கிட நாம் முயல வேண்டும். - ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தைலைமக் குழு உறுப்பினர், சிபிஎம், தொடர்புக்கு: grcpim@gmail.com