

புற்றுநோயுடன் போராடிவந்த பறவை ஆர்வலரும் காட்டுயிர்ப் புகைப்படக் கலைஞருமான ராம்கி ஸ்ரீனிவாசன் (49), டிசம்பர் 17 இரவு பெங்களூருவில் காலமானார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்ற ராம்கி, 1995 முதல் தனியார் துறையில் பணியாற்றிவந்தார். பறவை பார்த்தலில் ஆர்வம் கொண்டிருந்த அவர், 2007 முதல் அதில் முழுமூச்சுடன் இறங்கி, காட்டுயிர்ப் புகைப்படக் கலைஞராகப் பரிணமித்தார். ‘என்னால் காட்டுயிர்களுக்கு என்ன பயன்?’ என்ற கேள்வி அவருள் எழ, சேகர் தத்தாத்ரி எனும் காட்டுயிர் ஆவணப்பட இயக்குநருடன் இணைந்து ‘கன்சர்வேஷன் இந்தியா’ எனும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார்.
சைபீரியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு வலசை செல்லும் அமூர் வல்லூறுகள் நாகாலாந்தில் வேட்டையாடப்படுவதை அறிந்தார். அரசு அதிகாரிகள் முதல் வேட்டைக்காரர்கள் வரை அனைவருடனும் பேசி அந்தப் பறவைகளைக் காத்தார். காட்டுயிர் ஒளிப்படக் கலையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தார்மிக நெறிமுறைகளில் அக்கறை காட்டினார்.
2017இல் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பிற உயிர்களின் வேதனைக்குத் தீர்வுகாண விழையும் குணம் கொண்ட ராம்கியின் கவனம், கண் புற்றுநோயால் (retinoblastoma) பாதிக்கப்பட்ட ஏழைச் சிறார்களின் பக்கம் திரும்பியது. இதற்கென பிரத்யேகமாக ஒரு தளத்தை (www.wildlifeforcancer.com) தொடங்கிய அவர், இக்ஷா ஃபவுண்டேஷன் எனும் தொண்டு நிறுவனத்தின் துணையுடன் அந்தச் சிறார்களுக்கு உதவிவந்தார். அவரது மரணம் எல்லா வகையிலும் பேரிழப்பு!