

இன்றைய சமூக ஊடக யுகத்தில், ஒவ்வொரு மணித் துளியும் நம்மை வந்தடையும் செய்திக் குவியல்களால், முக்கிய நிகழ்வுகள்கூட மனதில் தங்காமல் போய்விடுவதுண்டு. திரும்பிப் பார்க்கும்போதுதான் அவற்றின் முக்கியத்துவம் புலப்படும். 2022இல் உலகம் எதிர்கொண்ட சில முக்கிய நிகழ்வுகள்...
உலகை உலுக்கிய உக்ரைன் போர்: அன்றைய சோவியத் ஒன்றியத்தில் அங்கம்வகித்த உக்ரைன், நேட்டோ அமைப்புடன் இன்று இணைய முயன்றதை ஏற்றுக்கொள்ளாத ரஷ்யா, அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. அணு உலைகளைக் கையில் வைத்திருக்கும் உக்ரைன் நேட்டோவில் இணைவது தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சீறினார் ரஷ்ய அதிபர் புடின். பிப்ரவரி 24இல்தொடங்கிய ரஷ்யத் தாக்குதல்களில் தலைநகர் கீவ் உள்படப் பல நகரங்கள் பாதிக்கப்பட்டன.
லட்சக்கணக்கான உக்ரைனியர்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாகத் தப்பி ஓடினர். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள் அவஸ்தைக்குள்ளாகின. உக்ரைனில் தங்கியிருந்த இந்திய மாணவர்கள் கடும் போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பினர். அவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாகியிருப்பது இன்னுமொரு வேதனை.
போர்க் குற்றங்களில் ரஷ்யப் படைகள் ஈடுபட்டதாக உக்ரைன் குமுறியது. மின்னுற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி, உக்ரைனை இருளில் ஆழ்த்தியது ரஷ்யா. போர் தொடுத்ததுடன் அணு ஆயுத எச்சரிக்கையையும் விடுத்த ரஷ்யாவை உலகம் வெறுப்புடன் பார்த்தது. வெளிப்படையாக ரஷ்யாவைக் கண்டிக்காத இந்தியா, பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தியது.
குழம்பித் தெளிந்த பிரிட்டன்: ஒரே ஆண்டில் மூன்று பிரதமர்கள் எனத் தடுமாறியது பிரிட்டன். பெருந்தொற்றுக் கட்டுப்பாடு அமலில் இருந்தபோது, பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நண்பர்களுக்கு மது விருந்து அளித்ததால் விமர்சனத்துக்குள்ளான பிரதமர் போரிஸ் ஜான்சன், பொருளாதாரம் உள்ளிட்ட மேலும் பல நெருக்கடிகளால் ஒருகட்டத்தில் பதவி விலகினார். அவருக்கு மாற்றாக வந்த லிஸ் டிரஸ் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதாகச் சொல்லி அதைச் செய்யத் தவறியதால், வந்த வேகத்திலேயே பதவியிழந்தார். ஒருகாலத்தில் காலனியாதிக்க தேசமாகக் கோலோச்சிய பிரிட்டனின் புதிய பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றது கவனம் ஈர்த்தது.
அல்லலுறும் ஆப்கானியர்கள்: தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் தலைவிரித்தாடும் வறுமை உலகை உலுக்கியது. எல்லா கட்டமைப்புகளும் உருக்குலைந்துகிடக்கும் ஆப்கனை, தீவிரவாதத் தாக்குதல்கள் அதிரவைத்தன. இந்தியா போன்ற நாடுகள் செய்துவந்த வளர்ச்சிப் பணிகள் தடைபட்டு நிற்கும் நிலையில், மீண்டும் அந்நாடுகளின் தயவை நாட வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்கள் தாலிபான் ஆட்சியாளர்கள்.
அமெரிக்க அதிர்வுகள்: அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளாகப் பெண்களின் தனிப்பட்ட அடிப்படை உரிமையாக இருந்த கருக்கலைப்புச் சட்டத்தை, அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் புரட்டிப் போட்டிருக்கிறது. பழமைவாதம், வெள்ளையினவாதம் போன்றவற்றுடன் அடையாளப்படுத்தப்படும் டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் களமிறங்கலாம் எனும் செய்தி, அமெரிக்காவையும் தாண்டி அதிர்வுகளை ஏற்படுத்தியது. பள்ளிகள், வணிக வளாகங்கள் எனப் பல இடங்களில் துப்பாக்கிச் சூடுகள் இந்த ஆண்டும் தொடர்ந்தன; பல உயிர்கள் பறிபோயின. துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த விவாதங்களும் சூடுபிடித்தன.
காலநிலை மாற்றத்தின் விளைவாக வெப்பம் அதிகரிப்பது, கடந்த சில ஆண்டுகளில் துப்பாக்கிச் சூடு போன்ற வன்முறைச் செயல்களைத் தூண்டியிருப்பதாக வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறினர். வழக்கம்போல சீனா, ஈரான் போன்ற நாடுகளுடன் மோதிக்கொண்டே இருந்த அமெரிக்கா, உக்ரைன் போரை முன்வைத்து, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியாவை அவ்வப்போது மறைமுகமாகக் கண்டிக்கவும் செய்தது.
ஈரான் பெண்களின் வீரம்: மாஸா அமினி என்ற 23 வயது ஈரானியப் பெண், முறையாக ஹிஜாப் அணியவில்லை எனக் கைதுசெய்யப்பட்டு தாக்கப்பட்டார். கோமா நிலையிலேயே அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டுப் பெண்கள் ஹிஜாபைக் கழற்றியெறிந்து போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு ஆதரவாகக் கலைஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் களமிறங்கினர். ஆனால், கைது, துப்பாக்கிச் சூடு, மரண தண்டனை என அடக்குமுறை மூலம் போராட்டக்காரர்களை நசுக்க முயன்றது ஈரான் அரசு. எனினும் இன்னமும் ஓயவில்லை போராட்டம்!
இலங்கையின் இன்னல்கள்: 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்புகளால் சுற்றுலாவில் ஏற்பட்ட சரிவு, பெருந்தொற்றுப் பொதுமுடக்கம் ஏற்படுத்திய பாதிப்பு, அதிரடியாக இயற்கை வேளாண்மையை அமல்படுத்த முயன்ற அதிபரால் ஏற்பட்ட உணவு நெருக்கடி, தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும் தாறுமாறான கடன்களாலும் தள்ளாடத் தொடங்கிய பொருளாதாரம், எரிபொருள், மின்சாரத் தட்டுப்பாடு என இலங்கை எதிர்கொண்ட இன்னல்கள் ஏராளம்.
வெகுண்டெழுந்து மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டைவிட்டு ஓடினார். ஆட்சி மாறிவிட்டாலும் ராஜபக்ச குடும்பத்தினரின் இலங்கை பொதுஜன முன்னணிக் கட்சியின் தயவில்தான், புதிய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆட்சி செய்கிறார். இலங்கையைவிட்டு ஓடிய கோத்தபய, பசில் ஆகியோர் மீண்டும் நாடு திரும்பிவிட்டனர். சர்வதேச நாணய நிதியம் மீட்டெடுக்கும் எனும் நம்பிக்கையுடன் நகர்கின்றன இலங்கையின் நாட்கள்.
கவனம் ஈர்த்த காலநிலை மாற்றம்: காலநிலை மாற்றம் குறித்த விவாதம் 2022இல் கூடுதல் கவனம் பெற்றது. பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர மழை, வெள்ளம், அமெரிக்கா எதிர்கொண்ட சூறாவளி, ஐரோப்பாவை வாட்டியெடுத்த வெப்ப அலை எனப் பல அழிவுகள் அச்சம் தந்தன. நவம்பர் மாதம், எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் நடந்த காப்27 உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள், விஞ்ஞானிகள் கூடி விவாதித்தனர். புவி வெப்பமாதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்தவும் அதன் கடுமையான தாக்கங்களைத் தவிர்க்கவும் 2030ஆம் ஆண்டுவாக்கில் உலகளாவிய நீராவி, கரியமிலவாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓசோன் வாயு போன்றவை 43% குறைக்கப்பட வேண்டும் என்று ஐநா அறிவியல் குழு வலியுறுத்தியது.
சீன மக்களின் கோபம்: சீனாவின் அதிபர் பதவியில் ஒருவர் இருமுறைதான் அமர முடியும் என்கிற நிலையை, அதிபர் ஜி ஜின்பிங் 2018இல் மாற்றியிருந்தார். அதன்படி சீனாவின் ஒரே கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மீண்டும் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங், மூன்றாவது முறையாக அதிபராகவும் ஆனார். அதிகாரத்தைக் குவித்துக்கொண்டாலும், கரோனா கட்டுப்பாடு எனும் பெயரில் அவரது அரசு மேற்கொண்ட அடக்குமுறைகள் சீனர்களைச் சீற்றமடையச் செய்தன.
1989 தியானென்மென் சதுக்கத்தில் நடந்த மாணவர்களின் போராட்டத்துக்குப் பின்னர், பெரியளவில் போராட்டங்கள் நடந்தன. இறங்கிவந்த சீன அரசு, கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. ஆனால், தொற்று அதிகரிக்கும், உயிரிழப்புகள் உச்சம் தொடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதற்கிடையே, சீனாவின் வூஹான் நகர ஆய்வகத்திலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியது என முன்வைக்கப்படும் சதிக் கோட்பாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில், அந்த வாதம் உண்மைதான் என்றும் ஆராய்ச்சிக்கு அமெரிக்காதான் நிதி வழங்கியது என்றும் அந்த ஆய்வகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹஃப், ‘தி ட்ரூத் அபவுட் வூஹான்’ புத்தகத்தில் கூறினார். தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளவே தைவானுக்கு நெருக்கடி கொடுப்பது, இந்திய எல்லையில் அத்துமீறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஜின்பிங் எடுப்பதாக விமர்சிக்கப்பட்டது.
தடுமாறிய பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஒரு பேரணியில் பங்கேற்றபோது, கொலை முயற்சியிலிருந்து தப்பினார். ஆட்சியாளர்கள் தூக்கிலிடப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும், ஜனநாயக அரசுகள் கவிழ்க்கப்படுவதும், ராணுவ ஆட்சி அமைவதும் பாகிஸ்தானுக்குப் புதிதல்ல. இத்தனை உள்நாட்டுக் குழப்பத்துக்கு மத்தியிலும் ஐநாவில் இந்தியா மீது, காஷ்மீர் பிரச்சினையை முன்வைத்துப் புகார் கூறியது பாகிஸ்தான். பதிலடியாக பாகிஸ்தான் ஆதரவுப் பயங்கரவாதிகள் இந்தியாவில் நிகழ்த்திய பயங்கரவாதச் செயல்களைச் சுட்டிக்காட்டியது இந்தியா.
கால்பந்து சர்ச்சை: கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் பின்னே பல அநியாயங்கள் நிகழ்ந்ததாக மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்புகள் கண்டித்தன. கட்டுமானப் பணியின்போது தொழிலாளர்கள் பலர் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
புலம்பெயர் தொழிலாளர்கள் நடத்தப்பட்ட விதம் கத்தார் நோக்கி கேள்விக்கணைகளை எழுப்பியது. போட்டி நடத்த ஃபிஃபா அதிகாரிகளுக்கு கத்தார் லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கா முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகள் மீண்டும் விவாதத்துக்குள்ளாகின. எல்லாவற்றையும் தாண்டி அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான அதிரடியான இறுதிப்போட்டியும், மெஸ்ஸியின் அர்ஜென்டினாவுக்குக் கிடைத்த வெற்றியும் கொண்டாடப்பட்டன! - சி.ஆன்றணி விஜிலியஸ் ‘மாடர்ன் டிப்ளமஸி’ இதழின் ஆசிரியர், தொடர்புக்கு: casvvigilious@gmail.com