கௌரவ விரிவுரையாளர்கள்: இனியும் வஞ்சிக்கப்படலாமா?

கௌரவ விரிவுரையாளர்கள்: இனியும் வஞ்சிக்கப்படலாமா?
Updated on
2 min read

அண்மைக் காலமாக உயர்கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க சீர்திருத்த நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குத் தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாக்கியது, தமிழ் படித்தவர்களின் உள்ளத்தில் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது; அதே நேரத்தில், அங்கு தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ள பேராசிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,000 வழங்கப்படும் என்கிற அறிவிப்பு, கல்வியாளர்களின் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

நிரந்தரப் பேராசிரியர்களை நியமிக்காமல் அந்த இடத்துக்குத் தற்காலிக அடிப்படையில் பேராசிரியர்களைப் பணியமர்த்தி, சொற்ப ஊதியத்தை அவர்களுக்கு அளிக்க முற்படுவதுதான் அந்த அச்சத்துக்கான நியாயமான காரணம். நிரந்தரப் பேராசிரியர்களுக்கு இணையான வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழலில், இது மிகக் குறைவான ஊதியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனில், இதை முழு மனதுடன் எப்படி வரவேற்க முடியும்?

கடந்தகாலக் கசப்புகள்: இதே முறையில்தான் அரசுக் கலைக் கல்லூரிகளிலும் தற்காலிக முறைமையில் கௌரவ விரிவுரையாளர்கள் கடந்தகாலங்களிலும் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு எவ்விதத்திலும் உரிய பணப் பலனோ பணிப் பாதுகாப்போ கிடைக்கவில்லை. ஏனைய அரசு ஊழியர்கள் பெற்றுவரும் சலுகைகள் கிடைக்காமல் இப்போதும் அவர்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர், இந்தச் சொற்ப ஊதியத்தால் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கள் வாழ்வைத் தொலைத்தவர்கள்.

தற்போது அவர்கள் பெற்றுவரும் மாதாந்திர உழைப்பூதியம் வெறும் ரூ.20,000தான் என்பதை, புதிதாக நியமிக்கப்பட உள்ள தற்காலிகத் தமிழ்ப் பேராசிரியர்களும் நன்கு அறிவர். அரசுக் கலைக் கல்லூரிகளில் தற்காலிகமாகப் பணியாற்றுபவர்கள், பொறியியல் கல்லூரிகளில் ரூ.5,000 கூடுதலாக வழங்கப்படும் என்பதால் அங்கு செல்லவே தலைப்படுவார்கள். இந்த நிதர்சனத்தை உணர்ந்து, தமிழகக் கல்வி நிறுவனங்களில் பணியாற்றிவரும் தற்காலிகப் பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ஊதியத்தை ஒரே அளவுகோலோடு கணக்கிட்டு அதை முறைப்படுத்த அரசு முன்வருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ஏறத்தாழ 5,000 பேர் அரசுக் கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றிவருகிறார்கள். இவர்களில் 3,200 பேர், பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்கள். நிரந்தரப் பேராசிரியர்களுக்கு இணையான கல்வித் தகுதியை இவர்கள் பெற்றிருந்தாலும், இவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாத ஊதியம் மிக சொற்பம் என்பதை அரசு கவனத்தில் கொள்ளாதது வருத்தமளிக்கிறது.

அரசின் தார்மிகப் பொறுப்பு: அரசுக் கலைக் கல்லூரிகளுக்கு 2022-2023 கல்வியாண்டுக்குக் கூடுதலாக 1,895 தற்காலிகக் கௌரவ விரிவுரையாளர்களை அதே ரூ.20,000 ஊதியத்தில் புதிய நியமன விதிகளைப் பின்பற்றி பணியமர்த்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இது ஒருவகையில் மகிழ்ச்சியளித்தாலும், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்காக உழைத்துவரும் 5,000 கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியமும் தற்போது பணியமர்த்தப்பட உள்ள புதிய தற்காலிக விரிவுரையாளர்களின் மாத ஊதியமும் சமமாக இருப்பது நகைமுரணாக உள்ளது. கற்பித்தல் தொழிலில் பணி அனுபவம் முக்கிய அம்சம் என்பதால், அந்த அனுபவத்தின் அடிப்படையில் இவர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டியது அரசின் தார்மிகப் பொறுப்பு.

தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்படும் பேராசிரியர்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வழிகாட்டியுள்ள அடிப்படை விதிகளையாவது கடைப்பிடித்து ஊதியத்தை அரசு வழங்கியிருக்குமேயானால், அவர்களின் வாழ்வாதாரம் சற்றே மேம்பட்டிருக்கும். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்படுபவர்களை முறைப்படுத்துவதற்கு ஒரு குழு அமைத்து, அவர்களின் பணி மேம்பாட்டுக்கான வழிவகைகளை அரசு செய்வது அதன் முக்கியக் கடமைகளுள் ஒன்றாகும்.

அரசுக் கல்வி நிறுவனங்களில் தற்காலிக முறைமைகளில் ஆசிரியர்களைப் பணியமர்த்தி சொற்ப ஊதியத்தை அவர்களுக்கு அளிப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அரசே அப்படித்தான் செய்கிறது என்ற துணிச்சலில், தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார்-அரசு உதவி பெறும் கல்லூரிகள் ஆகியவற்றில் பணியாற்றிவரும் உதவிப் பேராசிரியர்களுக்குச் சொற்ப ஊதியத்தைத்தான் வழங்குகின்றன. அரசை முன்னுதாரணமாக வைத்து, குறைந்த ஊதியம் வழங்குகிறோமே எனும் குற்ற உணர்விலிருந்து தப்பித்துக்கொள்ளும் தனியார் கல்வி நிறுவனங்கள், அரசின் மீதும் அவ்வப்போது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.

என்ன செய்ய வேண்டும்?: அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அரசாணையைச் சமீபத்தில் வெளியிட்ட தமிழக அரசு, அதற்குரிய பணிகளையும் தொடங்கியிருக்கிறது. அதே நேரத்தில், இத்தனை ஆண்டுகளாகச் சொற்ப ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு கௌரவ விரிவுரையாளர்களாக அரசுக்கு அவர்கள் உழைத்தது கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

இதற்காக அரசு முன்வந்து ஒரு கொள்கை முடிவை எடுத்து, அவர்களுக்கென சிறப்புத் தேர்வு ஒன்றை நடத்தி, அவர்களுக்குரிய பணி நிரந்தர உத்தரவாதத்தை வழங்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் உயர்கல்வி பயில வரும் மாணவர்களுக்குப் புதிய நம்பிக்கை ஏற்படும். கல்வி கற்பவர்களின் எதிர்காலக் கனவும் கற்பிப்பவர்களின் நிகழ்காலக் கனவும் மெய்ப்படும்! - சே.சோ.இராமஜெயம் கல்வியாளர், தொடர்புக்கு: drramji1978@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in