Published : 19 Dec 2022 06:51 AM
Last Updated : 19 Dec 2022 06:51 AM

க.அன்பழகன்: பெரியார் தொடங்கி உதயநிதி வரைக்கும்

ம.இரா.மேகநாதன்

அண்ணாவின் கணிப்பு பொய்யாக வில்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குத் தன்னைப் பேச அழைத்த அந்த இரண்டு மாணவத் தோழர்களைப் பற்றி இடைப்பட்ட காலத்தில் அவர் வேறுவிதமாகவும் எண்ணியிருந்தார். அண்ணா தம் தம்பியர்க்கு 1955இல் எழுதிய கடிதம் ஒன்றில் இருவரைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.

‘அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலேதான் நான் நெடுஞ்செழியனைக் கண்டது… அப்போது, தோழர் அன்பழகன் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றிவருபவர் - தோழர் நெடுஞ்செழியன் தானுண்டு தன் படிப்புண்டு என்று இருக்கும் போக்கினராகத் தோற்றமளித்துவந்தார்.

நான் அப்போது தோழர் அன்பழகன், கல்லூரியிலிருந்து வெளியேறியதும் கழகத்தில் வந்து சேருவார்; தோழர் நெடுஞ்செழியன் எங்காவது கல்லூரியில் கம்பனின் கவித்திறமை பற்றி (கட்டாயத்தாலும்) இளங்கோ அடிகள் பற்றி (விருப்பத்துடனும்) எடுத்துரைத்துக்கொண்டு, தமிழின் எழிலைக் கண்டும் காட்டியும் பணியாற்றிவருவார் என்றே எண்ணிக்கொண்டேன்.’

அண்ணாவின் கணிப்புக்கு மாறாக, கல்லூரிப் பேராசிரியராகிவிட்ட அன்பழகனும் விரைவில் தன்னை முழுமையாக அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டுவிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அந்த இரு மாணவத் தோழர்களும் அரசியல் களத்தில் தங்களது முத்திரைகளை அழுத்தமாகவே பதித்துச்சென்றுள்ளனர்.

அண்ணாமலை நாட்கள்: அன்பழகனையும் நெடுஞ்செழியனையும் பேசும்தோறும் அவர்களது அரசியல் பங்களிப்புகளைக் காட்டிலும் அண்ணாமலை நாட்கள் எப்போதுமே முதன்மைப்படுத்திப் பேசத்தக்கவையாக அமைந்துவிட்டன. 1942இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு அண்ணாபேசச் சென்றிருந்தபோது, மாணவர்களில் பெரும் பகுதியினர் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். மாணவர் மன்றச் செயலாளர் என்ற முறையில் அந்த எதிர்ப்பை மீறி அண்ணாவை அங்கு பேசவைத்தவர் அன்பழகன்.

அன்று அண்ணாவோடு அன்பழகனும் நெடுஞ்செழியனும் கூட்டத்தில் பேசினார்கள். கூட்டம் முடிந்தது. எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மாணவர்கள் அண்ணாவின் நிரந்தரத் தம்பிகளாகிவிட்டனர். எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் அன்று அன்பழகன் விதைத்த விதைதான் பின்பு திராவிட மாணவர் இயக்கத்தின் ஆலமரமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை மாற்றியது.

‘பல்கலைப் புலவர்’ என்றும் ‘தமிழ்க்காசு’ என்றும் போற்றப்படும் கா.சுப்பிரமணியனாரிடம் அந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்றவர் அன்பழகன். நீதிக் கட்சியின் ஆதரவாளரான கா.சு., எங்கு உரையாற்றச் சென்றாலும் கூடவே ஒரு மாணவத் துணையாக அன்பழகன் பயணித்தார். கா.சு., பேசும் கூட்டங்களில் இவரும் பேசினார். திராவிட இயக்கத்துக்கும் தமிழ் இயக்கத்துக்குமான பேசப்படாத பிணைப்புக் கண்ணிகளில் இதுவும் ஒன்று.

நீங்காத நெற்றிக்கண்: அண்ணா மட்டுமல்ல, அவருக்குப் பின் திமுகவின் கட்சித் தலைமையை ஏற்ற மு.கருணாநிதியும் அன்பழகனின் மீது அதே மதிப்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ‘எனக்குப் புராணத்திலே நம்பிக்கை கிடையாது. ஆனால், தி.மு.கழகம் என்னும் சிவனுக்கு நானும், நாவலரும் முறையே வலது கண், இடது கண் என்றால் - நெற்றிக்கண்தான் பேராசிரியர். தீமைகளைச் சுட்டெரிக்கக்கூடிய நெற்றிக்கண்தான் பேராசிரியர்’ என்று 1974இல் சென்னையில் 50,000 பேர் கலந்துகொண்ட அன்பழகனின் பிறந்தநாள் விழாவில் பேசினார் கருணாநிதி. வெகுவிரைவில், எம்ஜிஆருடன் நாவலர் சென்றுவிட, கடைசிவரையிலும் கருணாநிதியைவிட்டு நீங்காத நெற்றிக்கண்ணாக நின்றவர் அன்பழகன். கல்லூரிப் பேராசிரியராகவே தொடர்ந்திருந்தாலும் தனக்கென்று ஒரு தனிப்புகழைப் பெற்றிருப்பார் அன்பழகன்.

அரசியலாளராக அவர் தமிழ்நாட்டுக்கு வாய்த்தது பரபரப்பான அரசியல் மேடைகள், இலக்கியச் சொற்பொழிவு அரங்குகளாகவும் மாறுவதற்கான காரணங்களில் ஒன்றாயிற்று. அண்ணா தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றிருந்தபோது, எதிர்க்கட்சியான காங்கிரஸின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசிய அன்பழகன், ‘கிளியின் வண்ணத்தைக் காகமா பழிப்பது?’ என்று அந்நிலையை வர்ணித்தார். அன்று அது தலைப்புச் செய்தியும் ஆயிற்று. இப்படி அவரது சொற்பொழிவுகள் தோறும் வர்ணனைகளும் ஒப்பீடுகளும் நிறைந்திருக்கும். வார்த்தை அலங்காரங்கள் மட்டுமல்ல, பல்துறை அறிஞர்களின் நுண்ணிய பார்வையும் அவரது பேச்சில் தோய்ந்திருக்கும்.

முரண்படாத கொள்கைப் பயணம்: அரசியல் தலைவர்களின் பேச்சையும் எழுத்தையும் ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு படித்தாலே ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்பதைப் புரிந்துகொள்ள முடியும். அன்பழகனின் பேச்சில் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது: ‘தி.மு.கழகம் பிறந்த நாள் முதல் அதற்கு முன்பு திராவிடர் கழகம் தோன்றிய நாள் முதல் அவைகளுடன் ஒன்றிவந்தவன் நான்.

மாணவனாக இருந்த காலத்திலும் சரி, ஆசிரியனாக இருந்த காலத்திலும் சரி, சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் சரி, நாடாளுமன்றம் சென்ற இந்தக் காலத்திலும் சரி, தி.மு.கழகத்தின் கொள்கைகள் என் உயிரோடும் உணர்ச்சியோடும் கலந்திருக்கின்றன. (முரசொலி, சென்னை 16.4.1968). பின்பு, அவர் தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தபோதும் அந்த உணர்ச்சியை விட்டுவிடவில்லை.

பெரியாரில் தொடங்கியது அன்பழகனின் அரசியல் பயணம். அவரது நூற்றாண்டு விழா தொடக்கத்தைத் திமுகவைக் காட்டிலும் திராவிடர் கழகம் உற்சாகமாகக் கொண்டாடியது. 1944 சேலம் மாநாட்டில், ‘சண்டே அப்சர்வர்’ பாலசுப்பிரமணியத்தின் பேச்சை மொழிபெயர்த்த அன்பழகனின் சமயோசிதம், திராவிட இயக்க வரலாற்றின் திருப்புமுனைத் தருணமாக மாறியதை கி.வீரமணி நன்றியோடு நினைவுகூர்ந்தார்.

அண்ணாவோடு இணைந்து பயணித்த திமுகவின் முன்னோடித் தலைவர்களில் கடைசிவரைக்கும் கருணாநிதியோடு கரம்கோத்து நின்றவர் அன்பழகன். இன்றைய முதல்வர் ஸ்டாலின் மீதும் அதே அளவுக்கு அன்பு செலுத்தியவர். இப்போது அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி, பேராசிரியரின் ஒளிப்படத்துக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார். அன்பழகன் உயிரோடு இருந்திருந்தால், உதயநிதியையும் அதே விசுவாச உணர்வோடு வாழ்த்தியிருப்பார்.

மக்கள் மன்றத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மன்றத்திலும் மாற்றுக் கருத்துகளுக்கு விளக்கங்கள் கூறியும் கட்சியின் நிலைப்பாட்டுக்கு வலுசேர்த்தும் அவற்றின் வாயிலாக, தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் மீதான பற்றுறுதியை வெளிப்படுத்தியும் அன்பழகன் எழுதியும் பேசியுமிருப்பவை பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் வரும்; மக்கள் நல்வாழ்வு, கல்வி, நிதி என தான் அமைச்சராகப் பொறுப்பேற்ற துறைகளின் சார்பாக அவர் பேசியவையும் அப்படிப்பட்டவையே. அவைஅனைத்தும் ஆவணமாக்கப்பட வேண்டும். அது திராவிட இயக்க வரலாற்றின் மாபெரும் களஞ்சியமாக அமையும். டிசம்பர் 19: க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு - ம.இரா.மேகநாதன், தொடர்புக்கு: editpage@hindutamil.co.in

To Read in English: K. Anbazhagan: From Periyar to Udhayanidi

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x