ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! - 7: கிராமம்தோறும் சுயராஜ்ஜியம்!

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! - 7: கிராமம்தோறும் சுயராஜ்ஜியம்!

Published on

இந்திய நாட்டின் அடிப்படை அலகுகள், இந்தியக் கிராமங்களே என காந்தியடிகள் கருதினார். அதன் அடிப்படையில், அதிகாரங்கள் கிராமங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டிவந்தார். அவரது ராமராஜ்ஜியக் கனவு, கிராமங்களையே மையமாகக் கொண்டிருந்தது. அவரது கனவான கிராம சுயராஜ்ஜியமும் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்கிற அவரது முழக்கமும் இன்று எவ்வாறு நடைமுறையில் உள்ளன? இதற்கு விடை காண, இந்த ஆண்டில் வெளியான மூன்று செய்திகள் துணைபுரிகின்றன.

முதல் செய்தி: தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலினப் பிரிவுச் சிறார்கள் சிலர் மிட்டாய் வாங்கச் சென்றார்கள். “ஊர்க் கட்டுப்பாடு, உங்களுக்கு விற்க மாட்டோம்” எனக் கடைக்காரர் மறுக்கிறார். இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் காணொளியாகப் பரவியது. இது உண்மைதான் என அரசு அதிகாரிகளாலும் ஊடகங்களாலும் உறுதிசெய்யப்பட்டது.

இரண்டாவது செய்தி: விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது; அதன் சுருக்கம் வருமாறு: ‘தஞ்சை மாவட்டம் கிளாமங்கலம் தெற்குக் கிராமத்தின் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருந்தது. முடிதிருத்தகங்களிலும் பட்டியலினத்தவர்கள் முடிதிருத்திக்கொள்ள முடியாது.

பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து வட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். வருவாய்த் துறை ஆய்வாளரும் கிராம நிர்வாக அதிகாரியும் இது உண்மை என எழுத்து வடிவிலான அறிக்கையை வழங்கியுள்ளனர். இதையடுத்து, ‘தீண்டாமையைக் கடைப்பிடிக்க மாட்டோம்’ என அந்தக் கிராம மக்கள் எழுத்து வடிவில் உறுதிமொழி வழங்கியுள்ளனர். அதன் பிறகு நவம்பர் 28இல் நடந்த ஊர்க் கூட்டத்தில், மளிகைக் கடைகளில் பட்டியலினத்தவர்களுக்கு மளிகைப் பொருட்கள் விற்கக் கூடாது, மீறி விற்பவர்களுக்கு ரூ.5,000 தண்டம் விதிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

வயல்வெளிகளில் பட்டியலினத்தவர்கள் ஆடு மாடு மேய்க்கவும் தடைவிதிக்கப்பட்டது. அவர்கள் வாழும் தெருவுக்குக் குடிநீர் வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடமும் மனு கொடுத்துள்ளதுடன் பாப்பாநாடு காவல் நிலையத்தில் எழுத்துபூர்வமான புகாரும் கொடுத்திருக்கின்றனர்.’

மூன்றாவது செய்தி: ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் செய்திக் கட்டுரையாக வெளியாகியுள்ளது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் இருநூறு குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் பிரதீப் என்ற இளைஞர், பட்டயப் படிப்பில் தேறியவர். தாவரவியல் பட்டம்பெற்ற பெண்ணைக் காதலித்துப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

இருவரும் ஒரே சாதியில், ஒரே உட்பிரிவைச் சேரந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் எதிர்க்கவில்லை. ஆனால், அந்தப் பகுதி மக்களுக்கான சாதிப் பஞ்சாயத்தின் மணியக்காரர் மூலம் பிரச்சினை முளைத்தது. திமுக ஒன்றியச் செயலாளராகவும் பதவி வகிக்கும் அவர், உடனடியாகப் பஞ்சாயத்தைக் கூட்டினார். இரு வீட்டாருக்கும் தலா ரூ.25,000 தண்டம் விதிக்கப்பட்டது. கட்டாவிடில் வீட்டுக்கு மின்சாரம், தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது (இப்படி ஓர் அதிகாரம் எப்போது சாதிப் பஞ்சாயத்துக்கு அரசால் வழங்கப்பட்டது என்று தெரியவில்லை).

இந்நிகழ்வு குறித்துச் செய்தி சேகரிக்கச் சென்ற ‘தி இந்து’ செய்தியாளரிடம், “சமூகக் கூட்டமைப்பும் கட்டுப்பாடும் ஒரு சாதிக்கு அவசியம். இவை இல்லாமல் ஒரு சமூக அமைப்பை எவ்வாறு பாதுகாக்க முடியும்?” என மணியக்காரர் எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார். சரி, இவ்வாறு கசக்கிப் பிழிந்து வாங்கப்பட்ட த(தெ)ண்டத் தொகை எதற்குப் பயன்பட்டது? கோயில் திருவிழாவுக்கு வழங்கப்படுமாம் (பாவம் போகவோ?!); ஏழை வீடுகளின் இறப்பு நிகழ்வுகளுக்கு உதவித்தொகையாக வழங்குவதும் உண்டாம்.

இச்செய்திகளைப் படிக்கும்போது கிராம சுயராஜ்ஜியம் என்பதில் அம்பேத்கர் உடன்படாதது நினைவுக்கு வருகிறது. கிராமப்புற ஆதிக்க சக்தியினரான நிலவுடைமையாளர்களின் ஆதிக்கம் வலுப்பெற்றுவிடும் என அதற்குக் காரணம் சொன்னார் அம்பேத்கர். முதல் இரண்டு செய்திகள் அவரது கருத்துக்கு வலுவூட்டுகின்றன. மூன்றாவது செய்தி? ஆராய வேண்டியவர்கள் ஆராய வேண்டும்.

விலக்குகளின் மறுபக்கம்: மக்களாட்சிக் கோட்பாடுகளுக்கு எதிரான இவ்விரு விலக்குகளும் சில நேரங்களில் அடித்தள மக்கள் மீதான பண்பாட்டு ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபடவும் துணை நின்றுள்ளன. இழிவான சடங்குகளையும் தொழில்களையும் செய்வதிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் உரிமையைச் சில சாதியினர் போராடி வென்றுள்ளனர். அச்சம், ஏழ்மை ஆகியவற்றின் காரணமாக ஒரு சிலர் அந்தப் போராட்டத்திலிருந்து விலகி நின்றுவிடுவதும் உண்டு. இதனால் இவர்கள் சாதிவிலக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதிலிருந்து விடுபட இவர்களில் சிலர் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

வரலாறு திரும்புகிறது: வரலாறு என்பது ஒரு சமூக அமைப்பிலிருந்து மற்றொரு சமூக அமைப்புக்கு மாறுவது என வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் குறிப்பிடுவார். நம் சமூக அமைப்பானது நிலவுடமைச் சமூக அமைப்பிலிருந்து நவீன முதலாளித்துவ சமூக அமைப்புக்குள் நுழைந்து வெகு காலமாயிற்று. இருப்பினும் நிலவுடமைச் சமூக அமைப்பின் மிச்ச சொச்சங்கள் இன்றும் தொடர்கின்றன. கடந்த கால வரலாறு இன்றும் தொடர்கிறது! - ஆ.சிவசுப்பிரமணியன், பேராசிரியர், பண்பாட்டு ஆய்வாளர், தொடர்புக்கு: sivasubramanian@sivasubramanian.in

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in