

தமிழக அரசியல் களத்தில், மிகப் பெரிய திருப்புமுனைகளை 2022 தந்துவிடவில்லை. ஆனால், நடக்கவிருக்கும் பல மாற்றங்களுக்கான அச்சாரம் இட்டிருக்கிறது?
ஆளுங்கட்சியான திமுகவைப் பொறுத்தவரை, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. எனினும், நீட் தேர்வை ரத்துசெய்வதாக வாக்குறுதி அளித்திருந்த அக்கட்சி, இந்த ஆண்டும் தொடர்ந்த நீட் மரணங்களால் கடும் நெருக்கடிக்குள்ளானது. மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, ஆதார் கட்டாயம், பரந்தூர் விமான நிலையம் தொடர்பான சர்ச்சை எனத் திமுக அரசு தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளானது.
மூத்த அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகளை முதல்வர் வெளிப்படையாகவே கண்டிக்க நேர்ந்தது. முக்கியமான பல மசோதாக்களைக் கிடப்பில் போட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் குற்றம்சாட்டிய திமுக, ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநருடன் அடுத்த ஆண்டும் மோதல் போக்கைத் தொடரும் எனத் தெரிகிறது.
உதயநிதி ஸ்டாலின், அமைச்சராகப் பொறுப்பேற்றது வாரிசு அரசியல் விமர்சனங்களுக்கு வலுசேர்த்தது. ஆண்டின் தொடக்கத்தில் திமுக இணையதளப் பிரிவுச் செயலாளராக டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டது, மூத்த அமைச்சர் பொன்முடியின் மகன் பொன்.கௌதம சிகாமணி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவரானது போன்றவை மேலும் சர்ச்சையைக் கிளப்பின. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிட்டது பாஜக. எனினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக நீடிக்கும் என்றே சொல்லப்பட்டது.
அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு மொத்தம் 308 நகர்ப்புற உள்ளாட்சி இடங்கள் கிடைத்தன. அந்தத் தெம்பில், தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி நாங்கள்தான் என பாஜகவினர் பெருமிதம் பேசினர். அன்றாடப் பேட்டிகள் மூலம் அன்றன்றைக்கான விவாதங்களின் கருப்பொருளுக்குத் தீனிபோட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. எனினும், திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளைவிடவும் கட்சிக்குள் எழுந்த பாலியல் சர்ச்சைகள் காரணமாகவே அதிகம் பேசப்பட்டது பாஜக.
அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் பாஜகவின் தலையீடு இருப்பதான பேச்சுக்கள் அதிகரித்தன. கட்சித் தலைமைக்காக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மோதல் வெடித்தது. அதிமுக தலைமை அலுவலகம் முன்பு கலவரமே நடந்தேறியது. ஒரு சமயம் ஓபிஎஸ், இன்னொரு சமயம் ஈபிஎஸ் என இரு தலைவர்களுக்கும் அவ்வப்போது முக்கியத்துவம் கொடுத்தது பாஜக. இருவரும் அவ்வப்போது டெல்லி சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர்.
திமுக தொண்டரைத் தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது, முன்னாள் அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகள் போன்றவை அதிமுகவினரைக் கொந்தளிக்க வைத்தன. கூட்டணி தர்மத்துக்காக அரசின் செயல்பாடுகளை விமர்சிக்காமல் தவிர்த்ததாக, திமுக கூட்டணிக் கட்சிகள் விமர்சிக்கப்பட்டன. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், அரசியலைக் காட்டிலும் சினிமாவிலும் சின்னத்திரையிலும் சீரிய கவனம் செலுத்தினார்.
தினகரன் அவ்வப்போது அறிக்கை விடுத்தார். சீமான் வழக்கம்போல அதிரடியாகவும் சிரிப்புக்குத் தீனிபோட்டும் களமாடினார். கடந்த ஆண்டு ஆடியோ பதிவுகளால் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய சசிகலா, இந்த ஆண்டு புதிதாக எதையும் செய்யவில்லை. 2024 மக்களவைத் தேர்தலை நோக்கிய நடவடிக்கைகளில், வரும் புத்தாண்டில் கட்சிகள் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.