சொல்லு தமிழ் நாவலர்

சொல்லு தமிழ் நாவலர்
Updated on
3 min read

ஈழத் தமிழரின் அடையாளமாகவும் பண்பாட்டுச் சக்தியாகவும் நெடிய வரலாற்றில் இடம்பிடித்தவர் ஆறுமுக நாவலர். ‘சைவமும் தமிழும்’ என்ற அவரது மாபெரும் கோஷத்தின் பின்னால் உருத்திரண்டிருந்த நாவலரது இயக்கம், யாழ்ப்பாணத்தில் நிலவிய ஆங்கிலேயே ஆட்சிக்கும் மேலைத்தேய மயப்படுத்தலுக்கு எதிராகவுமே இருந்தது. அதாவது, காலனியவாதிகளின் மதமாற்றக் கோட்பாட்டையும் பாதிரிமார்களை முழுமுதலாய்க் கொண்ட கல்விமுறையையும் நாவலர் கடுமையாக எதிர்த்து நின்றார். அதன் பொருட்டு, நாவலரின் இயக்கம் ஒரு எதிர்ப்பியக்கமாகத் தன்னை வெளிப்படுத்தியது.

நாவலரது எதிர்ப்பியக்கம்: காலனிய வன்கவர் சக்திகளிடம் ஈழத்தின் பண்பாட்டைச் சிதையவிடாது அரணாக நின்ற நாவலரது போராட்டத்தை இக்கணம் நன்றியுடன் நினைத்து அவர் தாள் பணிகிறேன். “துப்பாக்கிகளாலும் பீரங்கிகளாலும் கைப்பற்ற முடியாத ஒரு தேசத்தை, கரும்பலகைகளாலும் வெண்கட்டிகளாலும் அபகரித்திருக்கிறார்கள்” என்ற இந்த வாக்கியத்தை ஆப்பிரிக்க எழுத்தாளர் கூகி வா தியாங்கோ தன்னுடைய ‘அடையாள மீட்பு’ எனும் நூலில் எழுதியிருக்கிறார். ஆப்பிரிக்க நிலத்தின் பண்பாட்டை மட்டுமல்லாது, அவர்களது தாய்மொழியையும் அழித்த காலனியவாதிகளிடமிருந்து ஈழத்தின் பண்பாட்டையும் தமிழையும் சைவத்தையும் காப்பாற்றிய சுதேசப் பண்பாட்டுத் தலைமையே நாவலர் ஆவார்.

இந்த சுதேசப் பண்பாட்டு இயங்கியலின் தொடர்ச்சியாகவே நாவலரின் இலக்கியப் பணிகளையும் அவதானிக்க வேண்டும். பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்தும் அவற்றுக்கு உரை எழுதியதோடு மட்டுமல்லாமல் பாடப் புத்தங்களையும் எழுதினார். தமிழ் இலக்கியத்திலும் இலக்கியப் பாரம்பரியத்திலும் ஈழத் தமிழருக்கு ஒரு தனித்துவத்தையும் புலமையையும் விதைத்தார். ‘நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்/சொல்லு தமிழ் எங்கே?/ சுருதி எங்கே - எல்லவரும்/ஏத்து புராணாகமங்கள் எங்கே? பிரசங்கமெங்கே/ஆத்தனறிவெங்கே அறை?’

அறிஞர் சி.வை.தாமோதரனாரின் இந்தப் பாடலில் மேலோங்கியிருக்கும் நன்றியுணர்ச்சியை விளங்கிக்கொள்ளவே தமிழ்மொழி கடந்துவந்த அரசியல் நெருக்கடியை அறிந்திருக்க வேண்டும். இதன்பொருட்டு இன்றுள்ள தலைமுறையை நினைத்து நொம்பலம் அடைவதன்றி வேறு வழியில்லை. தாய்மொழியை மதியாத எந்தப் பெறுமதியுமற்ற ஒரு சந்ததியை உருவாக்கிய முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இன்றைய பெற்றோர்கள்.

நாவலரும் விமர்சனமும்: நாவலர் ஒரு யுக புருஷர். சைவ சமயத்தவர் மட்டுமல்லாது, தமிழர்கள் அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டிய நாயகர். “தமிழ் என்பது ஒரு சமயத்தின் பெயரன்று, ஒரு பாஷையின் பெயர்” என்ற நாவலரின் இந்தக் கூற்று அவரைப் புரிந்துகொள்ள உதவும். அதேவேளை அவருடைய கடும்போக்கான சமயக் கருத்துகள் மீதும் தீண்டாமையை ஊக்குவிக்கும் கட்டளைகள் மீதும் முரண்படுகிறேன். ஈழத்தில் நிலவிய வெகுசன சைவ வழிபாட்டை ஆகம சைவமாக மாற்றி அமைத்து அதனை ஒரு சமய நிறுவனமாக்கிச் சாதியத்தை இன்னும் கூர்தீட்டிய ஒரு வரலாற்றுக் குற்றமாகவும் கொள்ளலாம். இவ்வளவு பெரிய இனப்படுகொலையைச் சந்தித்துப் பத்து ஆண்டுகளுக்குள்ளேயே ஈழத்தின் கிராமம் ஒன்றில் ஒடுக்கப்படும் சாதியினருக்குக் கோயில் தேர் வடத்தைத் தொட உரிமையில்லை என நடந்த சாதிய ஒடுக்குமுறை மோதலை இவ்விடத்தே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதுபோன்ற தீண்டாமைக் கொடுமைகளுக்குப் பின்னால் நாவலரின் பாரம்பரிய சமுதாய அமைப்பைப் பேண விரும்பிய ஆசையும் ஒரு காரணம்.

அகர முதல்வன்
அகர முதல்வன்

ஈழத் தமிழ்ப் பண்பாட்டு முகம்: இன்றைக்குள்ள ஈழத்துச் சூழலில் நாவலரைப் போன்று பண்பாட்டு அரசியலை முன்னெடுக்கக்கூடிய அரசியல் சக்திகள் தமிழர் தரப்புக்கு அவசியமாகின்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்படியொரு அறிவுச் சமூகத்தின் தொடர்ச்சியை அந்நிலம் பேண மறந்துவிட்டது. மரபுகளையும் சமயங்களையும் அறவே தவிர்த்துவிட்டு மேற்குலகக் கோட்பாடுகளை நமது பண்பாட்டுக்குள் பிரதியிட்டுப் பார்க்கும் பரிதாபம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாவலரின் தீண்டாமைக் கருத்துகளை வெறுத்து ஒதுக்கும் அதேவேளையில், அவரது ‘சைவமும் தமிழும்’ என்கிற இந்தக் கோஷம் இருபத்தோராம் நூற்றாண்டிலும் ஈழத் தமிழர்க்குத் தேவைப்படுகிறது என்பதை எவராலும் மறுக்க இயலாது. அன்று மேற்குலக வன்கவர்வாதிகளுக்கு எதிராக இருந்த அவரது கோஷம், இன்று ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட வேண்டிய ஒன்று. ‘நடைமுறையில் அன்றைய சூழ்நிலையிலே கிறித்துவத்தை மறுப்பது, ஆங்கிலேயர் ஆட்சியை மறுப்பதிலும் இலகுவானதாயிருந்தது. சமயத் துறையில் ஏற்பட்ட சலனங்களே பிற இயக்கங்களுக்கு முன்னோடியாக இருந்தன. கீழைத்தேய நாடுகள் பலவற்றில் அந்நியர் ஆட்சிக்கு எதிராகக் கிளம்பிய முதல் குரல் சமயத் துறையிலேயே கேட்டது” என்கிற விமர்சகர் க.கைலாசபதியின் இக்கூற்று, நாவலரையும் அவரது முழுமுதலான இயக்கத்தின் செயற்பாட்டையும் விளங்கிக்கொள்ள உதவும் என்பது எனது துணிபு.

என்னுடைய சிறு வயதில் யாழ்ப்பாணத்திலுள்ள கோயில்களில் நிகழும் சமயப் பிரசங்கங்கள் பலவற்றைக் கேட்டு வளர்ந்தேன். அது நாவலரின் மரபைப் பேணும் சைவத் தமிழ் மக்களின் பண்புநெறி. ‘பிரசங்கம்’ என்ற ஒரு கலையை, சமயத்தின் ஊடகமாக ஆக்கினார்; அதன் பொருட்டே ‘நாவலர்’ என்கிற பட்டத்தைத் திருவாவடுதுறை ஆதினம் அவருக்கு வழங்கியது. ஏடுகளில் இருந்த எழுத்துக்களை இலுப்பெண்ணெய் விளக்கின் ஒளிகொண்டு வாசித்து அச்சேற்றினார். காலால் மிதித்து அச்சிடும் அந்த இயந்திரத்தினால் 50க்கும் மேற்பட்ட பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்தார். அவர் எழுதிய தமிழிலக்கணம், சைவ நெறிகள் சார்ந்த நூல்களும், உரை எழுதிய பல நூல்களும் அவருக்குத் ‘தமிழ் உரைநடையின் தந்தை’ என்ற பெருமையை வழங்கின. நாவலரது இதுபோன்ற செயற்பாடுகளின் மூலம் ஈழத் தமிழ்ப் பண்பாட்டுக்குப் பேரூக்கம் கிடைத்தது. இதன்மூலம் ஈழ மக்களின் அறிவியக்கத்தின் அடையாளமாகவும் சைவ சமயத்தின் மீட்டுருவாக்க ஆளுமையாகவும் வரலாற்றுத் திரட்சிப் பெற்றிருக்கும் ஆறுமுக நாவலரைத் தமிழும் சைவமும் கொண்டு போற்றுவோம்.

டிசம்பர் 18: ஆறுமுக நாவலரின் 200ஆவது பிறந்த நாள்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in