

சிராப்பள்ளி முசிறிச் சாலையில் 10 கி.மீ. தொலைவிலுள்ள திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில் சம்பந்தராலும் சுந்தரராலும் பாடப்பெற்ற பெருமையுடையது. 26 சோழர் கல்வெட்டுகளுடன் வரலாற்று விடிவிளக்காய் இக்கோயில் திகழ்கிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் அந்நாளைய மனிதர்கள் பலரைச் சந்திக்க நேர்ந்தாலும் கார்த்திகைச் செல்வி கற்பகவல்லிதான் உள்ளமெங்கும் அள்ளித் தெளித்த கவிதையென நிறைந்து நிற்கிறார்.
யார் இந்தக் கற்பகவல்லி?: வரலாற்றுக்குப் பல முதல்களை வழங்கிய சோழப் பேரரசர் முதல் இராஜராஜரின் அரண்மனைப் பணியிலிருந்த பெரியவேளத்துப் பெண்தான் நக்கன் கற்பகவல்லி. அதென்ன வேளம் என்கிறீர்களா? பணியாளர் தொகுதியைக் குறிக்கப் பயன்பாட்டிலிருந்த அக்காலச் சொல்தான் வேளம். மன்னர், அரசியர் பெயரேற்றும் பெரிய, சிறிய என அளவு கருதியும் இயங்கும் பணிசார்ந்தும் பெயர் பெற்றிருந்த வேளங்கள் அந்நாளில் இதுபோல் பல இருந்தன.
முதல் இராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டின்போது, அதாவது பொதுக் காலம் 1006இல் தஞ்சாவூர் அரண்மனைப் பணியிலிருந்த கற்பகவல்லி திருவாசிக் கோயிலில் சில அறக்கட்டளைகளை அமைக்க விழைந்தார். 201 கழஞ்சுப் பொன்னும் ஆண்டுக்கு 16 கலம் நெல்லளிக்க வல்ல நிலத்துண்டும் கோயிலாரிடம் கற்பகவல்லியால் ஒப்புவிக்கப்பட்டன. கற்பகவல்லியின் கொடையையும் அது கொண்டு அவர் நிறைவேற்றச் சொன்ன அறக்கட்டளைகளையும் ஆவணமாக்கிய கோயிலார் அதைக் கல்வெட்டாகவும் பதிந்தனர்.
கோயிற் பண்பாடு: இன்றைய வளாகத்தின் இரண்டாம் கோபுர மேற்குமுகத்தில் வடபுறம் தொடங்கி மேற்கில் வளர்ந்து தெற்கில் முடிவுறும் இந்த ஆவணம், நூற்றுக்கும் மேற்பட்ட வரிகளில் கற்பகவல்லியின் கொடைவளத்தைக் கூறுகிறது. இந்த ஆவணத்தால் திருவாசிக் கோயிலின் அந்நாளைய நிர்வாகம், அங்கு இடம்பெற்றிருந்த இறைத் திருமேனிகள், அக்காலத்தே இறைவனுக்குப் படைக்கப்பட்ட படையல் பற்றிய தெரிவுகள், திருவாசியிலும் சுற்றுப்புறக் கோயில்களிலும் பணியிலிருந்த கலைஞர்கள், அலுவலர்கள், அக்கால வைப்பு நிதி வட்டிவிகிதக் கணக்கீடுகள், கோயில் சார்ந்த விழாக்கள், பணியாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியம் என 11ஆம் நூற்றாண்டு வாழ்க்கை படக்காட்சியாய்க் கண்முன் விரிகிறது.
சோழர் காலத்தில் சிறுகாலை என்றழைக்கப்பட்ட இளங்காலைப்போதில் இறைவனுக்கான படையலாகப் பயற்றுப்போனகம் அளிக்கப்பட்டது. அதற்கான அரிசி, போனக அரிசி என்றே அழைக்கப்பட்டது. பயறு, நெய், சர்க்கரை இவற்றின் கூட்டுறவில் போனகஅரிசியும் குழைந்து பொரிக்கறியுடன் இறைவனுக்கான காலைப் படையலாகி, கோயிலில் இருந்தாருக்கும் அதுபோழ்து வழிபட வந்தாருக்கும் சத்தான காலை உணவானது. திருவாசிக் கோயில் முதன்மை இறைக்கும் உலாச் செல்வதற்காகவே உருவாக்கப்பட்டுப் பரமவிடங்கர் எனப் பெயரேற்றிருந்த செப்புத் திருமேனிக்கும் நாளும் இத்தகு காலைப் போனகம் வழங்கத் தம் கொடையிலிருந்து உரிய ஒதுக்கீடுகள் செய்திருந்தார் கற்பகவல்லி. படையலுக்கான பொருள்கள் பெறவும் அவற்றைப் பொங்க, படையலிடக் கலங்கள் செய்தளித்த வனைஞர், சமையலுக்கு விறகு கொணர்ந்தவர், நெல் குற்றி அரிசியாக்கிய பெண் பணியாளர் எனப் படையலுக்குத் துணைநின்ற தொழிலர்க்கு ஊதியமளிக்கவும் அந்த ஒதுக்கீடு துணையானது.
கார்த்திகை விழா: கற்பகவல்லி, கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர். அக்காலத்தே அரசரும் அரசியரும் அவரவர் பிறந்த நாள்களின்போது கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் விழாக்களும் அமைக்கக் கொடையளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். சிராப்பள்ளியிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் இத்தகு பிறந்தநாள் விழாக் கொண்டாட்டக் கல்வெட்டுகள் பலவாகக் கிடைத்துள்ளன. அரசர்கள் போலவே பணிமகள்களும் பிறந்தநாள் கொண்டாடியதற்குச் சான்றாகக் கற்பகவல்லியின் கல்வெட்டு வெளிப்பட்டுள்ளது.
கார்த்திகை நாளில் வல்லி வழங்கிய கொடையில் இறைவனுக்கு 108 குடநீரால் முழுக்காட்டு நிகழ்ந்தது. இதில் ஆனைந்தும் (பஞ்சகவ்யம்) தேனும் கலந்திருந்தன. திருமுழுக்கிற்குப் பின் முதன்மை இறைத் திருமேனிக்குப் பெருந்திருஅமுது எனும் பெயரில் சோறும் பொரிக்கறி, புழுக்குக்கறி எனச் சமைத்த காய்கறி வகைகளும் தயிர், நெய் உள்ளிட்டனவும் வெற்றிலைப் பாக்கும் படைக்கப்பட்டு, பலருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. உலாத் திருமேனியைக் கோயில் பெருமண்டபத்தில் எழுந்தருளச் செய்து அப்பம் அளித்தனர். அதற்கான மாவு இடிக்கவும் அப்பம் சுடுவதற்கும் பெண்கள் அமைந்தனர். காலைப் போனகம் போலவே இங்கும் பல தொழிலர்கள் இணைந்து செயலாற்றி ஊதியம் பெற்றனர். ஆனைந்தில் பால், தயிர், நெய் தவிர்த்த பிற இரண்டும் கொணர்ந்தவருக்கும் தேன் தந்தவருக்கும் சிறப்பூதியம் தரப்பட்டது.
பசி தீர்த்த வல்லி: கார்த்திகைச்செல்வி கற்பகவல்லிக்குச் சோழர் காலத்தே பெருவிழாவாகக் கொண்டாடப்பட்ட தைப்பூசம், உள்ளத்திற்கு அணுக்கமான விழாவாக இருந்தது போலும். திருவாசிக் கோயிலில் தைப்பூச விழா நிகழ்த்த அவர் மனங்கொண்டார். கார்த்திகை நாளுக்குச் செய்தாற் போலவே இறைவனைத் திருமஞ்சனமாட்டவும் படையலிட்டுச் சிறப்பிக்கவும் பொருள் ஒதுக்கியவர், கூடுதலாக ஓர் அறத்தையும் இணைத்தார். இறைவனுக்கு உச்சம்போதில் படைத்ததும் அதே நேரம் கோயிலிலிருந்த, கோயிலுக்கு வந்த தவசியர், சிவயோகிகள் என நூற்றுவருக்கு விருந்தூட்டத் திட்டம் செய்தார். விழாக் காலங்களில் கோயில்கள் எண்ணற்ற அருளாளர்களை ஈர்த்ததால், வல்லியின் கண்ணோட்டம் பலருக்குப் பசிதீர்த்தது.
நித்தமும் காலை உணவு, கார்த்திகை, தைப்பூச நாள்களில் சிறப்பு வழிபாடுகள் என இறை சார்ந்தும் பல்லோர் பசியாறுமாறு பெருந்திருஅமுதுகள் படைக்கவும் தவசிகள், யோகிகள் எனப் பத்திமையர் உணவருந்தவும் வழிவகுத்த கற்பகவல்லி, கோயில் விழாக்கள் நிகழ்த்தும் இடமாக விளங்கிய வளாகப் பெருமண்டபத்தின் கட்டமைப்பிலும் கண்ணோடினார். அம்மண்டபத்தில் அவ்வப்போது நேரும் பழுதுகளை நீக்கிப் பராமரிக்கவும் தேவையான காலத்தில் புதுக்கிச் சீரமைக்கவும் உரிய ஒதுக்கீடுகள் செய்த அவரது எதிர்கால நோக்கு பாராட்டத்தக்கது.
மலைக்கவைக்கும் கொடை: கற்பகத்தின் கொடையால் நிகழ்ந்த விழாக்களும் விருந்தூட்டலும் ஒருபுறமிருக்க, அக்கொடைவழி வெளிப்படும் வரலாற்றுத் தரவுகள் மறுபுறம் மலைக்கவைக்கின்றன. அவரது கொடைப்பொருளாக முதலீடான 201 கழஞ்சுப் பொன்னை இந்நாளைய வங்கிகள்போல கலைஞர்களும் தொழிலர்களுமாய் 28 பேர் தமக்குள் வைப்புநிதியாகப் பகிர்ந்துகொண்டனர். அவர்களுள் 22 பேர் திருவாசிக் கோயிலில் வாழ்ந்தவர்கள். நால்வர் அருகிருக்கும் பாச்சில் அமலீசுவரத்தினர். இருவர் பாச்சில் மேற்றளியைத் தலைமையிடமாகக் கொண்டு முத்தளிகளிலும் பணிசெய்தவர்கள். அவரவர் பெற்ற தொகைக்கேற்ப ஒரு கழஞ்சுக்கு ஓராண்டுக்கு ஒரு கலம் நெல்லென 28 பேரும் 201 கழஞ்சுப் பொன்னுக்கு வட்டியாக 201 கலம் நெல்லைக் கோயிலுக்கு ஆண்டுதோறும் அளப்பதென ஒப்பந்தமாயிற்று. இந்த 201 கலத்துடன் கற்பகம் அளித்த நிலம்வழி கிடைத்த 16 கலம் சேர்க்கப்பட்டு, 217 கலம் ஆண்டுதோறும் கோயிலுக்கு வரவானது. கார்த்திகைச் செல்வியின் ஐந்து அறக்கட்டளைகளையும் நிறைவுற நிகழ்த்தக் கோயிலாருக்கு இது வாகான வரவல்லவா!
பொன் பகிர்ந்த 28 பேரில் ஆடலில் சிறந்த தலைக்கோலிகள் ஐவர். கோயில் பணிசெய்த தேவரடியார் நால்வர். கருவியிசை வல்ல கந்தருவர் சிலர். கலம் வனைந்தவர்கள், பரிசாரகர்கள், தச்சர்கள் எனத் தொழிலர் சிலர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பாச்சில் கோயில்களில் பணியாற்றி வாழ்ந்த இந்த 28 பேரின் அறிமுகம் கிடைக்கக் கற்பகவல்லியின் கொடையே வழிகாட்டியது. சோழச் சமூகத்தின் எந்த ஓர் அங்கத்திலும் பேரளவு மனம் படைத்தார் இருந்தனர் என்பதைக் கார்த்திகைச் செல்வியின் இந்தக் கழஞ்சுக் கல்வெட்டு உள்ளங்கைக் கனியாய் உணர்த்திவிடுகிறது. காலம் காத்துத் தந்திருக்கும் இந்த ஆவணம் சோழர் காலப் பெண்ணுள்ளப் படப்பிடிப்பாய் வரலாறு பேசுகிறது.