தவிர்க்க முடியாத இலக்கிய ஆளுமை

தவிர்க்க முடியாத இலக்கிய ஆளுமை
Updated on
2 min read

கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் எனப் பன்முகம் கொண்டவர் க.நா.சுப்ரமண்யம். எழுத்தாளர் புதுமைப்பித்தன் மெச்சிய ஆளுமை க.நா.சு. தலைசிறந்த விமர்சகராக உருவாகி, கறாராக விமர்சிப்பதில் இரக்கமற்றவராக இருந்ததால், இளைய தலைமுறை எழுத்தாளர்களின் கதாநாயகனாகவும் க.நா.சு. விளங்கினார்.

புதுமைப்பித்தனும் அவரது சமகாலத்தியரான மௌனியும் கு.ப.ரா.வும் தமிழ் இலக்கியத்தில் புனைவிலும் படைப்பிலும் புதிய வளர்ச்சிக்குரிய பாதையைத் திறந்துவிடுவதில் முக்கியப் பங்காற்றினர் என்றால், க.நா.சு விமர்சனத்தில் புதிய எல்லைகளைத் தொட்டு தமிழ் இலக்கிய விமர்சனப் போக்கின் புதிய பாதைகளுக்கு வித்திட்டவர்.

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அவர் தனக்காக வாதிட்டதாக எந்தத் தடயமும் இல்லை. ஆனால், அவர் இடம்பெற்றிருந்த அமைப்புகளில் தமிழ்சார்ந்த காரியங்களுக்காக அவர் விட்டுக்கொடுத்ததும் இல்லை. ஜான் ஆப்ரஹாம் இயக்கிய ‘அக்ஹாரத்தில்’ கழுதை படம் தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நடுவர் குழுவில் ஒருவராக இருந்த க.நா.சு.தான் காரணம் என்று சொல்லப்பட்டது. சினிமாவோடு எந்த நெருக்கமும் கொண்டிராதவரான க.நா.சு., தமிழ்ப்படம் ஒன்று அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததை இது காட்டுகிறது. அவருடைய இலக்கியப் பரிந்துரைகளிலோ பட்டியலிலோ இந்திரா பார்த்தசாரதியின் பெயர் அநேகமாக இடம்பிடித்ததில்லை. ஆனால், சாகித்ய அகாடமி விருது பெற்ற இ.பா.வின் ‘குருதிப்புனல்’ நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் க.நா.சு. தமிழ் நாவல் ஒன்று தேசிய அளவில் பேசப்படும் வாய்ப்பை அவர் பாழாக்கவில்லை.

வியாகுலன்
வியாகுலன்

க.நா.சுப்ரமண்யத்தின் இந்த இயல்புதான் அவரைத் தவிர்க்க முடியாத இலக்கிய ஆளுமையாக்கியது. இந்த இயல்பிலிருந்தே தனது இலக்கிய மதிப்பீடுகளை அவர் உருவாக்கியிருந்தார்.

இன்றைய காலகட்டத்தில்தான் க.நா.சு.வின் விமர்சனத் தேவை ஏக்கங்கொள்ள வைக்கிறது. க.நா.சு. விமர்சனக் கலையில் இஸங்களுக்கெல்லாம் வேலையில்லை. அவரது விமர்சனக் கலையின் தாரக மந்திரம் இரண்டே இரண்டுதான். ஒன்று தரம். இன்னொன்று ரசனை. ‘சரஸ்வதி’, ‘எழுத்து’, ‘சந்திரோதயம்’, ‘மணிக்கொடி’, ‘கிராம ஊழியன்’, ‘முன்றில்’, ‘தேனீ’, ‘ஞானரதம்’ போன்ற சிற்றிதழ்களில் தொடங்கிய க.நா.சு.வின் விமர்சனச் செயல்பாடு பின்னாள்களில் ஆங்கில ஏடுகளிலும் தமிழ் வணிகச் சஞ்சிகைகளிலும் இடம்பெற்றன. மாறுதலுக்கு உட்பட்ட பட்டியலைத் தனது விமர்சனக் கட்டுரைகளில் அவ்வப்போது வெளியிட்டு, நிறைய முரண்களைச் சந்தித்தவர். பற்றை வளர்த்துக்கொண்டு இலக்கியத்தை ஆயிரம் கோணங்களிலிருந்து ஒருங்கே பார்த்து அனுபவிக்கத் தெரிந்தவர்தான் நல்ல இலக்கிய விமர்சகர். அப்படிப்பட்ட இலக்கிய விமர்சகர் க,நா.சுப்ரமண்யம்.

டிசம்பர், 18: க.நா.சு. நினைவுநாள்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in