

கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட 6 ஊராட்சிகளில், தொழிற்பூங்காவுக்காக நிலத்தைக் கையகப்படுத்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அரசாணை (10.10.2021) வெளியிட்டுள்ளது; அரசு இதற்கான அலுவலர்களை நியமித்து, நிதியும் ஒதுக்கியுள்ளது.
கையகப்படுத்தப்பட இருக்கும் 3,864 ஏக்கர் நிலங்களில், 132 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் ஆகும். மீதி 3,731.57 ஏக்கர் விவசாயிகளுக்குச் சொந்தமானது. இதை எதிர்த்து, அன்னூர் பகுதி விவசாயிகள் குழுவாக இணைந்து, பலகட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். சமீபத்தில் அவர்களை நேரில் சந்தித்து உரையாடினேன்.
505 வாக்குறுதிகள் அடங்கிய திமுகவின் தேர்தல் அறிக்கையின் 43ஆவது வாக்குறுதி: ‘விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளைநிலங்கள் பாதுகாக்கப்படும்’. அதிமுக ஆட்சியில் எட்டுவழிச் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, ஒப்புதலின்றி நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை விவசாயிகள் எதிர்கொண்டதால், திமுகவின் இந்த வாக்குறுதி விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், நில எடுப்புச் சட்டம் 1997இன் மூலம், அன்னூரில் நிலம் கையகப்படுத்தப் போவதாக அரசு அறிவித்திருப்பது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் நடைமுறையில் இருந்த சட்டத்துக்கு (1894) மாற்றாக, ‘நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் சட்டம்’, 2013இல் நிறைவேற்றப்பட்டது. அதன்படி விவசாயிகளிடம் கருத்துக் கேட்டு ஒப்புதல் பெற வேண்டும்; 1997 சட்டத்தில் அதற்கு அவசியமில்லை என்பது விவசாயிகளை ஏமாற்றும் அநியாய நடவடிக்கை.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு விவசாய-குடிநீர் தேவைக்காக, ரூ.1,750 கோடி மதிப்பீட்டிலான அவிநாசி - அத்திக்கடவு திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. விடிவு வந்துவிட்டது என விவசாயிகளெல்லாம் மகிழ்ந்திருக்கும் நேரத்தில், கட்டிய கோவணத்தையும் களவாடுவதுபோல், நிலத்தைப் பறிக்கும் உத்தரவு வந்துள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்டலம், சிட்கோ, டிட்கோ, சிப்காட் எனப் பல்வேறு நிறுவனங்களுக்காக, அரசு ஏற்கெனவே கையகப்படுத்திய சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் எந்தப் பயன்பாடும் இன்றி தரிசாகக் கிடக்கின்றன. இந்நிலையில், விளைநிலங்களை மேலும் மேலும் கையகப்படுத்துவதன் நோக்கம் என்ன? தொழிற்பூங்கா என்ற பெயரில், பெருமுதலாளிகளுக்கு விவசாயிகளின் நிலத்தை அரசு பறித்துக் கொடுக்க வேண்டிய அவசியம்தான் என்ன?
அதிகாரத்தின் மூலம், அடக்குமுறையை ஏவி நிலத்தைக் கையகப்படுத்த அரசு முயற்சிக்குமானால், அதை எதிர்கொள்ளவும் தங்களது நில உரிமையை வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள். ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்றார் மகாகவி பாரதி. அரசு உழவை அழித்து, தொழிலை வளர்க்கப் போகிறதா? - பெ. சண்முகம், மாநிலத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்