

மனித வரலாற்றில் காலங்காலமாக நடைபெறும் தொடர் நிகழ்வு - இடப்பெயர்வு. குடியேற்றத்துக்கும் இடம்பெயர்தலுக்கும் வரலாற்றில் முக்கியப் பங்குண்டு. இடப்பெயர்வுகள் வணிக நிமித்தமாக நிகழ்ந்துள்ளன என்றாலும், பிழைப்புத் தேடி மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து சென்றதே ஏராளம். காபி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் இடப்பெயர்வுகள் வரலாற்றைப் புரட்டிப்போட்ட நிகழ்வுகளாகும்.
இந்தியாவின் தேயிலை உற்பத்தித் தொழில் சுமார் இரண்டு நூற்றாண்டு காலப் பழைமை வாய்ந்தது. ஆரம்பத்தில் அசாம் மாநிலத்தில்தான் தேயிலை விளைந்தது; 200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரித் தேயிலை புகழடையத் தொடங்கியது. நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், கோத்தகிரி, குன்னூர், கூடலூர், நடுவட்டம், பந்தலூர் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் ஓரிரு தலைமுறைகளுக்கு முன்னரே இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்களாவர். அதேபோல், கோவை மாவட்டம் வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் பிற இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ளனர்.
இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழக வனத் துறை மூலம் 1968இல் ‘அரசுத் தேயிலைத் தோட்டம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதில் 2,445 குடும்பங்களைச் சேர்ந்த 4,082 தொழிலாளர்கள் இணைந்தனர். அத்திட்டத்தை மேலும் செழுமைப்படுத்தும் வகையில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, 1976இல் ‘தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகம்’ (TANTEA) தொடங்கி, அதை நிறுவனச் சட்டங்களின் கீழ் பதிவுசெய்து செயல்படுத்தினார்.
தேயிலை உற்பத்தியிலும் நுகர்விலும் இன்று உலகின் மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்குவதற்கு இந்த இடப்பெயர்வு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பங்களிப்பு அளப்பரியது; நீலகிரி தேயிலை புவிசார் குறியீடு பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
‘தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு, குடும்பத்தினருடன் தங்குவதற்குக் குடியிருப்புகள் - இதர வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. தற்போது 3,569 தொழிலாளர்கள் நிரந்தரமாகவும் 220 தொழிலாளர்கள் தற்காலிகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர்’ என நவம்பர் 17 அன்று வெளியான தமிழக அரசின் செய்தி வெளியீடு தெரிவிக்கிறது.
அதிகரிக்கும் மறுஇடப்பெயர்வு: ஓரிரு தலைமுறைகளாகத் தேயிலை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுவரும் இத்தொழிலாளர்கள், தங்கள் பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காக நகரங்களை நோக்கி நகர்வது அதிகரித்துவருகிறது. நீலகிரி, வால்பாறை பகுதிகளிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் மறுஇடப்பெயர்வு சூழலுக்கும் தள்ளப்பட்டுவிட்டனர்.
ஏற்கெனவே கூலிப் பற்றாக்குறை, மனித-விலங்கு எதிர்கொள்ளல், மருத்துவ வசதியின்மை, போதிய போக்குவரத்து வசதிகளின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழல் கேள்விக்குறியாகியுள்ளது. அரசு வழங்கிய குடியிருப்புகளில் வாழ்ந்துவரும் பலருக்கு, சொந்தமாக ஒரு வீடுகூட இல்லை. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் முதற்கட்டமாக சுமார் 600 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தர முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது கவனத்துக்குரியது.
தொழிலாளர்களின் இடப்பெயர்வானது தேயிலைத் தொழிலின் எதிர்காலத்தை விளிம்புக்குத் தள்ளியிருக்கிறது. தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், போதிய லாபம் இல்லை என தமிழ்நாடு அரசுத் தேயிலைத் தோட்டக் கழகம் கூறிவருகிறது. இந்நிலையில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைத் தக்கவைத்துக்கொள்வது மட்டுமின்றி, சுருங்கிவரும் தேயிலை உற்பத்திப் பரப்பளவு மேலும் சுருங்கி, அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.
ஏற்றுமதி செய்ய முடியாவிட்டாலும்கூட, இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. இறக்குமதி அதிகரித்தால் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கு இத்தொழில் சென்றால் நிலைமை மேலும் மோசமாகும். அனைத்து மக்களும் இன்று விரும்பிக் குடிக்கும் இந்த எளிய பானம், ஒரு தரப்பினர் மட்டுமே பருகக்கூடிய உயர்தர பானமாக மாறும்.
காக்க வேண்டியது கடமை: ‘சில ஆயிரம் தொழிலாளர்கள், சில ஏக்கர் பரப்பளவு உற்பத்தி’ என்று மட்டும் இத்தொழிலை எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. தேயிலை வளர்வதற்கும், உற்பத்தி செய்வதற்கும் ஏற்ற காலச் சூழ்நிலை தமிழகத்தில் நீலகிரி, வால்பாறை பகுதிகளில் மட்டுமே உள்ளது என அறுதியிட்டுக் கூறிவிட முடியும்; மற்ற பகுதிகளில் இதை விளைவித்துவிட முடியாது.
தேநீர் உடலுக்குப் புத்துணர்ச்சி தருகின்ற பானம் மட்டுமல்ல, உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்ற, நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது. உலகளவில் வரவேற்பைப் பெற்ற இந்தத் தேயிலையை உற்பத்தி செய்ய நாடு, ஊர் விட்டு இடம்பெயர்ந்துவந்த தொழிலாளர்களைத் தக்கவைக்க வேண்டும் என்றும் அதன் மூலம் தேயிலைத் தொழிலைச் செழிப்படையச் செய்ய வேண்டும் என்றும் அரசிடம் மன்றாடுகின்றன பல்லாயிரக்கணக்கானோரின் உள்ளங்கள். - த.சத்தியசீலன் பேராசிரியர், தொடர்புக்கு: sathiyaseelan.dt84@gmail.com