வேளாண் கொள்கை: நூலக அம்சமும் அவசியம்!

வேளாண் கொள்கை: நூலக அம்சமும் அவசியம்!
Updated on
1 min read

கடந்த 50 ஆண்டுகளில் இந்திய வேளாண்மையில் ஏராளமான முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இதுகுறித்த தகவல்கள் அனைத்து உழவர்களையும் சென்றடையவில்லை.

வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்ற ஊடகங்கள் மூலம் உழவர்களுக்கான தகவல்கள் சென்றடைகின்றன என்பதை மறுக்க முடியாது. எனினும், வேளாண்மை குறித்த தகவல்களைப் புத்தக வடிவில் கொண்டுசேர்க்கவும் பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட புத்தகங்களை ஒரே இடத்தில் வாசிப்புக்காக வைக்கவும் ஓர் ஏற்பாடு தேவை.

அதற்கான ஒரு வழிமுறைதான் வேளாண் கல்வி நூலகம். இயற்கை வேளாண்மைக்கான கொள்கையை தமிழ்நாடு அரசு இறுதிசெய்யும்போது, இந்த அம்சமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

மாவட்ட நூலகம்: ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் வேளாண் நூலகத்தை உருவாக்கலாம். மாவட்ட நூலகங்களுடன் இணைந்தோ தனித்தோ நூலகத் துறை இதைப் பொறுப்பெடுத்து நடத்தலாம். நூலகத் துறையுடன் வேளாண் துறை, ஊரக மேம்பாட்டுத் துறை உள்ளிட்டவை இணைந்து செய்வதற்குத் திட்டமிடலாம். வழக்கமான நூலகங்களில் உள்ளதுபோல், உழவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கி, புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச்சென்று வாசிக்க வழிவகுக்கலாம்.

வேளாண்மை சார்ந்து தரமான புத்தகங்களைச் சில பதிப்பகங்கள் தற்போது வெளியிட்டு வருகின்றன. அவற்றிடமிருந்து பட்டியல் பெற்று நூலகங்களுக்கான புத்தகங்களைத் தேர்வுசெய்யலாம். விவசாயம் சார்ந்த புத்தகங்கள் அதிகமாக வெளிவரவும் இது ஊக்கமளிக்கும்.

என்னென்ன புத்தகங்கள்: வேளாண்மை பற்றிய அடிப்படை அறிவியல் அறிவைத் தரும் புத்தகங்கள் முதன்மையாக இருக்க வேண்டும். எளிய விவசாயக் கருவிகள், இயந்திரங்கள், சுற்றுச்சூழல், நீர்நிலைப் பராமரிப்பு, காடுகள், பறவைகள் குறித்த புத்தகங்களும் இடம்பெறலாம். இயற்கை விவசாயம், மூலிகைச் செடிகளின் பயன்பாடு, பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் குறித்த நூல்கள் அவசியம். மழைநீர் சேகரிப்பு, மாடித் தோட்டம், கால்நடைப் பராமரிப்பு குறித்த நூல்கள், எளிய முறை மருத்துவ நூல்கள் ஆகியவற்றையும் சேர்க்கலாம்.

விவசாயச் சட்டங்கள், அரசுகளும் பல்வேறு முகமைகளும் அமல்படுத்தும் திட்டங்கள், வங்கிக் கடன் திட்டங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம், நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த புத்தகங்கள் நிச்சயம் இடம்பெற வேண்டும். வேளாண் கல்வி, வேளாண்மை சார்ந்த தொழில் முனையங்கள் - வேலைவாய்ப்புகள், சந்தைகள், ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகளை உள்ளடக்கிய நூல்களும் இடம்பெறலாம். வேளாண்மை, கால்நடை வளர்ப்பு தொடர்பான பத்திரிகைகளை நூலகங்களுக்கு வழங்கலாம்.

செய்ய வேண்டியவை: உழவர்களின் படிப்பறிவின்மை, வாசிக்கும் பழக்கமின்மை சவால்களாக அமையலாம். இதைக் களைய ஒவ்வொரு நூலகத்துடனும் உழவர்கள்/ உழவர் குழுக்களை இணைக்கலாம். உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், மகளிர் குழுக்கள், முன்னோடி உழவர்கள், சமூக ஆர்வலர்கள், வேளாண் கல்லூரி மாணவர்கள் கொண்ட மாவட்ட அளவிலான குழுக்களை அமைக்கலாம். வாரம் ஒருமுறை சேர்ந்து வாசிப்பது, நூல் அறிமுகம் உள்ளிட்ட வழிமுறைகளை மேற்கொள்ளலாம்.நூலாசிரியர்களைக் கொண்டே மாதம் ஒரு கருத்தரங்கமும் நடத்தலாம். - கு. செந்தமிழ்ச் செல்வன், தொடர்புக்கு: senthamil1955@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in