தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: குற்றவியல் நடவடிக்கை எப்போது?
எதிர்க்கட்சிகள் அறச்சீற்றத்துடன் முன்வைக்கும் விமர்சனங்கள், அவை ஆளுங்கட்சியாக மாறிய பின்னர் நீர்த்துவிடும் எனப் பொதுவான ஒரு விமர்சனம் உண்டு. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில், மேற்சொன்ன விமர்சனம் திமுக அரசு மீது திரும்பியிருக்கிறது. அந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை இல்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் நடத்திவந்த போராட்டம், அதன் நூறாவது நாளில் (2018 மே 22) உச்சகட்டத்தை அடைந்தது. போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எனும் முறையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த விமர்சனங்கள் மிக முக்கியமானவை.
சம்பவம் நடந்த நாளில் முக்கியமான அதிகாரிகளின் இடத்தில், அவர்களுக்குப் பதிலாக வேறு சிலர் பணியில் இருந்ததாகவும் குற்றம்சாட்டினார். ஆட்சிக்கு வந்தால், துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திமுக உறுதியளித்தது.
துப்பாக்கிச்சூடு நடந்த மறுநாளே நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி அரசு அமைத்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த மே 18 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அக்டோபர் 18 அன்று சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்ட அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த தகவல்கள், தமிழகத்தை அதிரவைத்தன. தப்பித்து ஓடிய போராட்டக்காரர்கள் மீது, பாதுகாப்பான இடத்தில் மறைந்துகொண்டபடி போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என அந்த அறிக்கை தெரிவித்தது.
காவலர்கள், அதிகாரிகள் என 17 பேர் மீது குற்றம்சாட்டியது. இது தமிழக வரலாற்றின் கரும்புள்ளி என சட்டப்பேரவையிலேயே விமர்சித்தார் ஸ்டாலின். அறிக்கை முன்வைத்த பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதியும் குறிப்பிட்டார். ஆனால், இதுவரை துணைக் கண்காணிப்பாளர், மூன்று காவலர்கள் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், இடைநீக்கம் போன்ற நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் வாதம்.
என்னதான் விசாரணை அறிக்கை பரிந்துரைகளை முன்வைத்தாலும், சம்பந்தப்பட்ட துறைகளின் உயரதிகாரிகளிடம் ஆலோசித்த பின்னர்தான் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதே நடைமுறை. எனினும், இத்தனை முக்கியத்துவம் கொண்ட ஒரு சம்பவத்தில் ஏன் அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனும் நியாயமான கேள்விக்கு விடை தேவை. - ராஜா
