Published : 13 Dec 2022 06:54 AM
Last Updated : 13 Dec 2022 06:54 AM

உறைபனியில் உறங்கிய வைரஸ்: உயிர் பெற்றதன் பின்னணி என்ன?

உறைபனியில் 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் உறைந்து,கும்பகர்ணன் போல் உறங்கிக் கொண்டிருந்த தொல் வைரஸ் ஒன்று, இப்போது உயிர்பெற்று எழுந்திருக்கிறது. காலநிலை மாற்றத்தின் விளைவால், அண்டார்க்டிக் பகுதியில் உள்ள நிரந்தர உறைபனி உருகி, இந்த வைரஸ் வெளிப்பட்டுள்ளது.

புவி வெப்பமாதலின் தொடர்ச்சியாக ஆர்க்டிக், அண்டார்க்டிக், திபெத்தியப் பனிப் பிரதேசங்கள் உருகிக்கொண்டிருக்கின்றன. இந்தப் போக்கு அடுத்த பல பத்தாண்டுகளுக்கு அதிகரித்தபடி இருக்கும். உருகும் பனியாறுகள், பனிப் பிரதேசங்களில் புதைந்து கிடக்கும் தொல்லுயிரிகள், ‘ஜாம்பிகள்’ போல மறுபடியும் உயிர்த்தெழுமோ என்கிற அச்சம் இப்போது எழுந்துள்ளது.

பிரளய அபாயம் காத்திருக்கிறதா?: 12,000 ஆண்டுகளுக்கு முன்னர், புவியில் பனி யுகம் நிலவியது. இயற்கை மாற்றங்களின் விளைவாகப் புவியின் வெப்பம் சற்றே உயர்ந்து, கடந்த 12,000 ஆண்டுகளில் பனிப் பிரதேசங்கள் விலகி அடர் காடுகள், புல்வெளிகள் உருவாகின.

எனினும் துருவப் பிரதேசங்கள், சைபீரிய, திபெத்திய மலை முகடுகளில் பனி யுக மிச்சங்கள் இன்றும் உள்ளன. 6,50,000 ஆண்டுகளுக்கும் மேலாக உறைபனி நிலையில் உள்ள இந்தப் பகுதி, தற்போது காலநிலை மாற்றத்தினால் உருகிவருகிறது. ஃபிரான்ஸின் ஐக்ஸ்-மார்சேய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாண்டல் அபெர்கெல், ஜீன்-மைக்கேல் கிளவேரி என்கிற ஆய்வுத் தம்பதியினர் தலைமையில், ஃபிரெஞ்சு - ஜெர்மன் - ரஷ்ய ஆய்வாளர்கள் குழு, பனியின் அடியில் உள்ள வைரஸ்களைப் பற்றி ஆராய்ந்துவருகிறது.

சைபீரிய நிரந்தப் பனிப் பகுதியின் அடியில், நாம் இதுவரை அறிந்திராத 13 கிருமிகளை இக்குழு இனம் கண்டிருக்கிறது. இதில், 48,500 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் இருந்து, டைனசோர் போல் அற்றுப்போய்விட்ட ஒன்றும் பல்லாண்டுக் காலம் மண்ணில் புதைந்துகிடந்தது.

தொற்று ஏற்படுத்தியது: உறைபனியில் புதைந்துகிடந்த இந்த வைரஸை, பாதுகாப்பான ஆய்வகத்தில் சோதனைக்குழாயில் இட்டு ஆய்வுசெய்தனர். பல்வேறு வகை அமீபாக்களை வெவ்வேறு சோதனைக்குழாயில் இட்டு, அதில் இந்த வைரஸையும் கலந்து ஆய்வுசெய்தனர். குளம், ஏரி போன்ற பகுதியில் பரவலாகக் காணப்படும் ‘அகந்தமீபா’ எனும் ஒருவகை அமீபாவின் உள்ளே இந்தத் தொல் வைரஸ் நுழைந்து தொற்று ஏற்படுத்தியதை இனம்கண்டனர். தொற்று செய்த அமீபா செல்களில் தமது சில நூறு பிரதிகளை வைரஸ் உற்பத்தி செய்தது.

ஓய்வொழிச்சல் இல்லாமல் வைரஸின் பிரதிகளை உற்பத்தி செய்த அமீபா, வைரஸ் குட்டிகளை வெளியே உந்தி வெடித்து மடிந்துபோனதை ஆய்வாளர்கள் கண்டனர். நவம்பர் 2022இல் இதுகுறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அதாவது, பல ஆயிரம் ஆண்டுகளாக உறைபனியில் புதைந்து கிடந்த வைரஸ், உயிர்பெற்று எழுந்தது. அந்தக் காலத்தில் அந்த வைரஸுக்கு ஓம்புயிர் இருந்திருக்கும். அந்த உயிர் இன்று இல்லாமல் போயிருக்கலாம். எனினும் இன்று உயிர்வாழும் அமீபாவில் தொற்று ஏற்படுத்தும் வலிமை கொண்டதாக இந்த வைரஸ் அமைந்தது ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

பீதி: வியப்பு மட்டும் அல்ல, இந்த நிகழ்வைக் கண்டு அவர்கள் பெரும் கலக்கமும் கொள்கின்றனர். சைபீரியாவின் உள்ளடங்கிய ஓர் ஊரில் சில ஆண்டுகளுக்கு முன்பு உறைபனி உருகி, 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்த்ராக்ஸ் கிருமித் தொற்று காரணமாக மடிந்து, பனியில் புதைந்துபோன கலைமானின் சடலம் வெளிப்பட்டது. அதிலிருந்து வெளிப்பட்ட ஆந்த்ராக்ஸ் கிருமி தாக்கி, அந்தக் கிராமத்தில் பலர் நோய்வாய்ப்பட்டனர்.

இதனால், சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் பெரும் கோர தாண்டவமாடிய பிளேக் கொள்ளைநோயை ஏற்படுத்திய கிருமிகள் உட்பட இதுவரை மனித குலம் சந்திக்காத கிருமிகள் உருகும் பனியின் அடியிலிருந்து வெளிப்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனினும், அளவுகடந்த பீதி தேவையற்றது எனச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உறைபனியில் புதைந்து மீண்டெழும் வைரஸ்கள், அமீபா போன்ற ஒரு செல் உயிரியைத் தொற்றும் வகையைச் சார்ந்தவை என்பதால் மனிதர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என அவர்கள் கூறுகின்றனர்.

காலநிலை மாற்றம்: குளிர்ப் பிரதேசங்களில் கொசு போன்ற நோய்க்கிருமி ஏந்திகள் குறைவு. ஆனால், தற்போது புவிவெப்பமாதலின் விளைவால் நோய்க்கிருமி ஏந்திகள் புவியின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவுகின்றன. இதுவரை மலேரியா, டெங்கு போன்ற நோய்களைச் சந்திக்காத பகுதிகளில் இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உறைபனி உருகி வெளிப்படும் கிருமியால் உண்டாகும் ஆபத்தைவிட, பூமியின் புதிய பகுதிகளுக்கு நோய்க்கிருமி ஏந்திகள் பரவுவது பெரும் ஆபத்து.

ரஷ்யாவின் பெரும்பகுதி மண்ணுக்குக் கீழே சில அடிகளுக்குப் பனியும், மேலே காடுகளும் புதர்களும் கொண்ட ‘துந்த்ரா’ எனும் நில அமைப்புதான். எனவே, பனி உருகிதொல்லுயிர்க் கிருமிகள் வெளிப்படும் அச்சுறுத்தலைத்தீவிர கவலையோடு ரஷ்யா கவனிக்கிறது. ஆபத்தைக்கண்காணிக்கவும் குறைக்கவும் அமெரிக்கா, கனடா, டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து,ஸ்வீடன் அடங்கிய ஆர்க்டிக் கவுன்சில் நாடுகளை ஒன்றுசேர அழைப்புவிடுத்துள்ளது. உயிர்பெற்று மீண்டிருக்கும் இந்த வைரஸ் அச்சுறுத்தத் தொடங்குவதற்குமுன் உலகம் விழித்துக்கொள்ளுமா? - த.வி.வெங்கடேஸ்வரன், விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x