

வரும் கல்வி ஆண்டிலிருந்து இளங்கலை மாணவர்களுக்கு இரண்டு தமிழ்ப் பாடங்களை அறிமுகப்படுத்தவிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ‘தமிழர் மரபு’, ‘தமிழரும் தொழில்நுட்பமும்’ என்ற இரண்டு பாடங்கள் முறையே முதல், இரண்டாம் பருவப் பாடத்திட்டத்தில் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழின் அறிவியல் வளம், சிந்தனை குறித்தும் தமிழர்களின் பாரம்பரியம் - பண்பாடு, தொழில்நுட்பம் குறித்தும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் நோக்கில் இந்தப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது. பொறியியல் கல்லூரிகளில் தமிழ் இல்லை என்கிற குறை இதன்மூலம் களையப்படும்.
பொறியியல் கல்லூரிகளில் பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் பயில்வார்கள் என்பதால், இந்தப் பாடங்கள் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் புத்தகங்களாக வெளியாகும். பிற மொழி பயில்வோரும் பிற மாநிலத்தவரும் தமிழ் மொழியை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் இது அமையும். ஆனால், இவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் தகுதிதான் இந்தப் பாடத்திட்டத்தின் நோக்கம் குறித்த கேள்வியை எழுப்புகிறது.
பொறியியல் கல்லூரியில் தமிழ்: அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தன்னாட்சி பெறாத அனைத்துப் பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘இந்தப் படிப்புகளைத் தமிழ் இலக்கியத்தில் தகுதி வாய்ந்த ஆசிரியர் நடத்தலாம் அல்லது அறிவியல் மற்றும் கலைப்புலம் / பொறியியல் / தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கற்பிக்கும் பேராசிரியர்களும் நடத்தலாம்.
இவர்கள் பள்ளி அளவில் தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பாடங்களுக்கான பாடத்திட்டம் சிறப்புக் கல்விக் குழுவின் பரிந்துரையில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. பள்ளி அளவில் தமிழை ஒரு பாடமாகப் படித்த பேராசிரியர்கள் பொறியியல் மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடத்தை நடத்தலாம் என்று எந்தக் குழு முடிவெடுத்தது அல்லது அவர்கள் நடத்துகிற அளவுக்குத்தான் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதா - இந்தக் கேள்விகள் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
புதிதாகத் தமிழ்ப் பேராசிரியர்களை நியமிக்காமல், இருப்பவர்களைக் கொண்டே பாடம் நடத்துவதுதான் இதன் நோக்கமாக இருக்கக்கூடும். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்கிற கனவோடு தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்துப் படித்தவர்களை எள்ளி நகையாடும்விதமாக இப்படியொரு முடிவை அண்ணா பல்கலைக்கழகம் எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
பள்ளியில் தமிழை ஒரு பாடமாகப் படித்தவர்கள் என்றால், அவர்கள் அதை இரண்டாம் மொழியாகக் கற்றவர்களா, மூன்றாம் மொழியாகக் கற்றவர்களா என்பதில் தெளிவு இல்லை. மூன்றாம் மொழியாகப் பயின்றிருந்தால் அவர்கள் தமிழை எந்த அளவுக்குப் பயின்றிருப்பார்கள் என்பது விவாதத்துக்குரியது. பள்ளி அளவில் தமிழை ஒரு பாடமாகப் படித்திருப்பதுதான் தகுதி என்றால், மாணவர்களில் பெரும்பாலானோர் அப்படிப் படித்திருக்கக்கூடுமே? அப்படியென்றால் அவர்களுக்கு ஆசிரியரே தேவையில்லையா? அவர்களே படித்துக்கொள்ளலாமா?
புறக்கணிக்கப்படும் தமிழ்ப் பட்டதாரிகள்: பிற துறைப் பேராசிரியர்கள் தமிழ்ப் பாடத்தை நடத்தலாம் என்பது தமிழை மட்டுமல்ல, தமிழ் படித்தவர்களையும் அவமானப்படுத்துவதாக இருக்கிறது. பள்ளி அளவில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்றவற்றை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்களைக் கல்லூரியில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் அறிவியல் தொடர்பான பாடத்தை நடத்தச் சொல்ல முடியுமா? அது இயலாதபோது தமிழ் மட்டும் எப்படி எடுப்பார் கைப்பிள்ளையாகும்?
பள்ளி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு அடிப்படையில்தான் தேர்வுசெய்யப்படுகிறார்கள். அப்படியிருந்தும்கூட, ‘கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு நியமனம் செய்யப்படும் வகையில் ஆசிரியர் நியமன நடைமுறையை மூன்று மாதங்களுக்குள் மறுசீராய்வு செய்ய வேண்டும்’ எனப் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொலைதூரக் கல்விமுறையில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் அல்ல எனவும் அது தெரிவித்துள்ளது. பள்ளி ஆசிரியர் நியமனத்தில் இத்தனைக் கெடுபிடிகள் பின்பற்றப்படும்போது, பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடத்தை நடத்த தமிழை ஒரு பாடமாக மட்டுமே படித்திருந்தால் போதும் என்பது எவ்வகையில் நியாயம்?
இத்தனைக்கும், ஆளும் திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உள்ளார். திமுக அரசு தமிழை வளர்க்கவும் மேம்படுத்தவும் முனைப்புக் காட்டிவரும் நிலையில், தமிழ்நாட்டின் பொறியியல்கல்லூரிகளில் தமிழ் படித்தவர்கள் புறக்கணிக்கப்படுவது நகைமுரணாகஇருக்கிறது.
ஒருபுறம், ‘தமிழ் வாழ்க’ முழக்கம்; மறுபுறம், தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதைப் பார்த்து மௌனம். இது அரசின் இரட்டை நிலைப்பாட்டைத்தான் காட்டுகிறது! - பிருந்தா சீனிவாசன், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in